
இன்னும் தொடங்கிடாத கடலின் கரை
1. கரையில் ஒதுங்கியிருந்த பழைய சங்குகள்
மணலுக்குள் ஆழமாக புதைந்து கொள்ள மெனக்கிடுகின்றன
வெகு காலம் கழித்துத் தோண்டியெடுக்கும் போது
மிக அதிசயமாய் தன்னைக்காண்பிக்க வேண்டுமவற்றிற்கு.
அம் மணற்துகள்கள் அக்காலத்தை உருவாக்குவதில் அக்கறை கொள்கின்றன.
2. இன்னும் தொடங்கிடாத கடலின் சிப்பிகளை
சேகரித்துக் கொண்டிருக்கிறேன்.
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு நிறம்
ஒவ்வொன்றிற்குள்ளும் ஒவ்வொரு கதை.
இதுவரை பார்த்திடாத கடலிடம் அவற்றை விட வேண்டும்,
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயர் வைத்து,
மேலும்
ஒவ்வொன்றிற்குள்ளும் தீர்ந்திடாதவொரு உலகத்தை வைத்து.
3. தன் காலத்திலிருந்து கால்களை நனைத்துகொண்டிருக்கிறது குழந்தை
அதன் காலத்திலிருந்து கரைக்கு வந்து திரும்புகிறது கடல்
சரியாக பிரித்து வைக்கப்பட்டிருக்கும் இவ்வடுக்குகளில்
பிரியமானவைகள் சந்தித்துக்கொள்ளும் போது தானாகவே
ஒளிர்ந்து கொள்கிறது அக்கணம்.
கரையில் மணலை உருட்டி உலகமொன்றை தயாரித்துக் கொண்டிருக்கிறது
சிறிய பூச்சியொன்று.
4. ஒரு முறை இக்கடலுக்குப் பின்னால் நின்றிருந்தோம்
மகா அமைதியின் கணத்தை அங்கு தான் பார்த்து ரசித்தோம்.
ஒரு முறை இக்கடலுக்கு முன்னால் நின்றிருந்தோம்
எங்களுக்கு முன் கிடந்த சிப்பி அக்கடலையே
மறைத்துக்கொண்டிருந்தது.
பூமி தன் விட்டத்தை அவ்வப்போது மாற்றியமைக்கும் போது
நாம் மிகச்சிறியவைகளிலிருந்தே உலகைத் தொடங்குகிறோம்.