
முளைக்கவிடுவது எதற்காகவோ?
சீமைக்கருவேலங்களுக்கு இடையே
செவ்வனே விரைகிறது பாதை
பனை மரத்தின் கீழாக திரும்புமது
மொட்டைக்கிணற்றை தாண்டுகிறது
பின் ஆற்றில் இறங்கியேறி
அடைகிறது ஊர்த்தெருவை
அங்கிருந்து ஒன்றரை மைல்களில்
சேரித்தெருவின் நடுப்பகுதியை
இத்தனை காத தூரம்
அன்னநடை போட்டுவந்த பறவை
சட்டென அத்தனை ரௌத்திரமாய்
இறகுகளை முளைக்கவிடுவது எதற்காகவோ?
சிலையைச் சுற்றியுள்ள கூண்டைக்
கண்டதாலா!
************
நைல் நீளப் பகல்
பஞ்சாரத்திலிருந்து வெளியேறி
வீட்டைவிட்டு நீங்காத கோழிகளுக்கு
பற்றற்ற அதிகாலை சிந்தனையைத் தூவுகிறாள்
கூடவே இருகைப்பிடி ரேஷன் அரிசிகளையும்
நாளின் முதல் வரக்காப்பியை
அத்தனை நளினமாக அருந்தியபிறகு
பாத்திரம் கழுவவேண்டி
மேலாக நைட்டியை வழித்துக் கட்டுகையிலே
திடுமென முளைக்கிறது அவசர சிந்தனை
பெரும் தரிசுநோக்கி நடந்திடுமவளுக்கு
சித்திரையில் தூறிய மழைத்துளிகள்
எங்கெங்குமான புற்களோடு கூடியிருக்க
முதன்முதலாக விழித்திருந்த பற்றுகொண்ட விரலின்
முந்தைய இரவை அசைபோட
இவ்வெட்டவெளி சௌகரியம் கொண்டதல்லவே!
இருந்தும் வாழ்வின் தீர்க்கமான சொர்க்கத்தில் தவழ்ந்திட விழிக்கப்போகும் விரலின் இரண்டாம் இரவுக்கு
நைல் நீளப் பகலை அத்தனை விரைவாய்
அவள் கடப்பாள்.
************