
புளியமரத்தின் ஓலம்
உடலை இரண்டாய் அறுத்ததால்
இரத்தம் வழிவது போலிருக்கும்
குங்குமம் அப்பிய
அரை எலுமிச்சைகளால்
கட்டங்களின் முன்
சோழியும் உடுக்கையும்
மாறி மாறி தன் குரலை
பேயோட்டுபவனின் குரலுக்கிடையே
நுழைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறது,
தலைவிரிக் கோலத்தோடு
உறுமிக் கொண்டு
தனக்குள்ளிருக்கும் ஒவ்வோர் ஆன்மாவாய்
அவிழ்த்துக் கொண்டிருக்கிறாள்
பருவமொழுகும் குமரி,
நாவல் மரத்திலிருந்து தலைகீழாய்
விழுந்து தலை சிதறியவன்
சாராயத்தோடு ஓடிப் போனான்,
லாரி சக்கரத்தில் நசுங்கியவன்
பரோட்டாவுக்கும், சிக்கன் குருமாவுக்கும் அடங்கிப் போனான்,
அறுபதைத் தொட்டவன்
ஆசையில் பிடித்தேன் என்றான்,
எருக்கங்குச்சி நொறுங்க
அலறி ஓடினான்,
கடைசியாய்,
துரோகக் கயிற்றின் நுனியில் தொங்கியவள்
பழி வாங்க வேண்டுமென
நகராது பல்லைக் கடித்துக் கொண்டிருக்கிறாள்,
கசந்த வாழ்வை
உவர்ப்போடு ஒப்பிக்கிறாள்,
இரக்கத்தை ஒதுக்கி,
எருக்கனையும், சாட்டையையும் காட்டி
உச்சி முடி புடுங்கி
அதில் ஆன்மாவைக் கட்டி
புத்தேரிக் கரையிலுள்ள
புளியமரத்தில் ஆணியோடு அறைந்தனர்
பருவமொழுகிய குமரி போல்
பச்சை முடி விரித்து
பெருங்காற்றில் ஓலமிடுகிறது
புளியமரம்…..
**********
ப்ரியங்களின் தொடர்ச்சி
கழுத்து வரை தனிமை நிரம்பியிருக்கிற தாழிடப்பட்ட
ஓரறையின் மிச்ச வெளியில்
போத்தலின் வாயில் ஒழுகுகிற
மதுவின் நெடிபோல் நிறைந்திருக்கிறது
உன் மீதான ப்ரியங்களனைத்தும்,
தீரா வயிற்று வலிக்காரனின் உதறல்களோடு
தரையெங்கும் அங்கப்பிரதட்சிணத்தையொத்த
உருளல்களின் பயனால்
அறையின் தாழ் திறக்கிறேன்,
மெல்ல நுழையும் மழையிலும், சாரலிலும்
நொடிகள் தொலைந்து கொண்டேயிருக்கின்றன,
தனிமையும் மழையும்
கை குலுக்குகிறது,
அவைகளுக்கும் எனக்கும் சேர்த்து
மூன்று குவளைகளில்
எலுமிச்சைத் தேநீர் கலக்குகிறேன்,
தேநீரின் நிறம் இப்போது
போத்தலின் வாயில் ஒழுகும்
மதுவின் நிறத்தைப் போலிருக்கிறது….
**********