கவிதைகள்
Trending

கவிதைகள்- கட்டாரி

நூற்றியிருபது சதுர அடி அளவிலான அறைக்குள்ளாக
கழிப்பறையும் இணைக்கப்பட்டிருக்கிறது.
தனித்திருக்கும் போது
சிமிண்டுக்கூரைவழிக் காட்சியினூடாக
ஜவ்வு மிட்டாய்க்காரர் வழுக்கைத் தலையோடு கலங்கலாகத் தெரிகிறார்.
ஐம்பது காசுக்கு
கடிகாரம் செய்து கையில் ஒட்டிவிடுகிறார்.
இருபத்திஐந்து காசுக்கு
சலித்துக்கொண்டே மோதிரம்
மாட்டி விடுகிறார்.
ஒரு ரூபாய்க்கு மணிக்கட்டிலிருந்து
முழங்கை வரைக்கும்
ஒரு சர்ப்பம் நெளிந்தபடி இருக்கிறது.
பாம்பைத் தாங்கியபடி ஓடிக்கொண்டிருப்பவனின்று எழும்பும்
புழுதிக்காக மட்டும்
மிட்டாயைச் சுற்றி பாலித்தீன் வைத்துக் கட்டியிருந்தார்..
ஒரு வைரஸைக்கூட இருத்தி வைத்துக்கொள்ளத் தெரியாத கொடுங்கோல்
பாலித்தீன்களாகத்தான் இருந்தன அவை….!!

**** **** **** **** **** **** ****

சொல்லிக் கொள்வதற்கென
அடையாளங்கள் ஏதுமற்றிருக்கும் சிற்றூர் ஒன்றில்
சிதிலமடைந்த மதிற்சுவருக்கு அப்பால்
புற்கள் வெளிறிப்போயிருந்த
நிலப்பரப்பைப் பூங்கா எனச்
சொல்லிக் கொண்டிருந்தார்கள்…
துரு உதிரும் கம்பிகளுக்குப் பின்னால்
நோய்வாய்ப்பட்டிருந்த
புறாக்களைச் சுற்றி புழுக்கைக் கவிச்சி..
அரிய வகைக் குரங்குகளின் முதுகில்
பூஞ்சைப்படை பீடித்திருக்கிறது…
முழங்கையில் கம்பி துருத்தியபடி
நீர்ஊற்றும் பெண்
நூற்றாண்டுகளாக நிறைக்க முயலும்
தடாகத்தில்
நிறைந்து விட்டிருந்தன ஐஸ்க்ரீம்
குச்சிகள்…!!
சிறுவர்களெல்லாம் ரயிலைத் தவிர்த்துவிட்டு
மரத்தடியில் வயது
வந்தோர்களாகியிருந்தனர்…! ஐந்தடித்
தாழ்நிலத்தில் நீர்தேடிக்
கொண்டிருந்த மான்கள்
சூழலுக்குப் பழகியதாகவே தெரியவில்லை..!
புறப்பட்டுக் கழிந்த முதலாம் லெப்ஃடில்
இடை வளைத்து ஆண்மைத்திமிரோடு
வியாபித்திருந்ததன்
வடிவம் குறித்து என்னிடத்தில்
விவாதங்களிருக்கிறது.
மழுங்கிய வாளைக் கொண்டு
எத்தனை காலம்தான் போரிட்டுச்
சாக..??!.
ஒரு ரைட் எடுத்து அடுத்த லெப்டில்
பூங்காவின் பேரழகிற்கு இணையாக
வீற்றிருக்கிறார் ராஜா மிராசுதார்…
கூடவே
மான்களைப் போலவே சில மனிதர்களும்.!!
இவை எதற்கும்
சம்பந்தமில்லாமல்
புல்மண்டிப் போயிருந்த அகழிக்குழிகளுக்கு
அப்பாலிருந்து
ஒலித்துக்கொண்டேயிருக்கிறது
நமச்சிவாய போற்றி…

**** **** **** **** **** ****

இரண்டு குறுக்குவசக்கம்புகளோடு சரிந்த பந்தலைப்போலிருக்கும்
அறை என்றெல்லாம்
சொல்லி வைக்க முடியாததொரு தடுப்பு அது..
இரண்டு சூட்டடுப்புகள்
பூனைக்குட்டிகள் தூங்குவதற்கு ஏதுவான
இடைவெளியோடு களிமண்
மேடையில் பதிக்கப்பட்டிருக்கும்…
கரும்பச்சை நிறத்திலிருக்கும் அவ்வடுப்புக்களத்திற்கு எப்போதும் சாணிவாசம்..!!
எளிதில் பற்றும் பன்னடை… நின்றெரிய
ஏதுவாகத் தென்னை மட்டை.
வலது கை நீட்டி எடுக்குமளவு
மரத்தாலானதும் அலுமினியத்தாலானதுமான
இரண்டு அஞ்சறைப்பெட்டிகள்…
கதவுத்தடுப்பை ஒட்டினாற்போல
நான்கு செப்புக்குடங்களில் நிறைகுட நீர்.
அவ்வப்போது தலையில்
இடித்துவிடும் தயிர்உறி.
மெழுகுப்படலமொன்றின் லாவகத்தோடு
உரித்தெடுக்கப்படும் மெத்தென்ற
தோசை…
இன்னும் ரெண்டே ரெண்டு எனக்
கொஞ்சி
பத்துக்குக் குறையாமல் நிறைத்து வைக்க அம்மா…!!
பசியைத் தவிர
எல்லாம் நிறைந்திருந்தது
அம்மாவின் சமையற்கட்டுகளில்..!!

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button