அமுதசாந்தி கவிதைகள்

எதை நானும் மறக்க?
கண்களில் சில துளி
வெறுப்பையாவது
நீ சிந்தியிருக்கலாம்.
அதனை ஏந்திக் கொண்டு
எளிதில் கடந்திருப்பேன்.
நீயோ நேசத்தையல்லவா
நிறைத்து வைத்திருந்தாய்.
எப்படி நானும் மறப்பது..
உன் மீதான கோபங்கள்
கரைந்து வடிந்த பின்
எஞ்சிய பேரன்பை
வெறுக்கவும் முடியாமல்
மறக்கவும் முடியாமல்..
தினம் அல்லாடுகிறேன்.
•
நட்சத்திர இரவு
பேரண்ட வெடிப்பின்
கருந்துளையாக
காலத்தை நிறுத்தியும்
பின்னோக்கி நகர்த்தியும்
விழுங்க காத்திருக்கிறது
நினைவுகள் ஈனும்
ஒரு நட்சத்திர இரவு.
•
மீளாது மாய்தல்
நானே என் கால்களை
கட்டிக் கொண்டு
காலத்தை நகராமல்
செய்து விட்டதாக
ஏமாற்றி மகிழ்கிறேன்.
முடிவிலா முடிச்சுகளில்
தீர்வறியா சிக்கல்களில்
விடுவித்துக் கொள்ள
விரும்பாத மாயைகளில்
இப்பிரபஞ்சத்தில் நான்
மீளாது மாய்வதாக ஓயாது
கற்பனை செய்கிறேன்.
சிந்தையில் சிறைபட்டு
தினம் மடியும் எனக்கு
மீள் கணம் எப்போது?
சரி, அப்படியே மீண்டாலும்..
சிக்கல் என்னிடம் தான்.
நான் எங்கு செல்ல?
நீ தானே என் பிரபஞ்சம்.
நீ தானே என் சகலமும்.
•
தேடல் வேண்டாத பறவை
இத்தனைக்குப் பிறகும்
அந்த ஒற்றை குரலின்
தாங்குதலுக்காக
யாசித்து நிற்கிறது நெஞ்சம்.
இது வரை விளங்கவில்லை..
விசாலமான வெளியில் அது
கண்களை கட்டிக் கொண்டு
தேடல் வேண்டாத பறவையாக
இறக்கைகளை சுமந்தலைவதே
பாரமெனக் கொள்வது தான்.
•
என் நேசம்
இதுவரை எதையுமே
வாழ்வில் நானாக
தேர்வு செய்ததில்லை.
அலாதி பிரியம் உள்ள
ஒன்றை கூடவா?
என்று கேட்கலாம்.. ஆம்.
இதுவே சகலம் என
தோன்றினால் போதும்..
அதுவாக என்னை
தேர்ந்தெடுக்கும் வரை
காத்திருக்கிறேன்.
வலிய சென்று
கையகப்படுத்தும்
அன்பின் மேல்
துளியும்
நம்பிக்கை இல்லை