
துள்ளிக் கொண்டிருந்தவற்றைக் கவனித்தேன்
தூண்டில் போடலாமென்று
மீன் ஒன்று மேலேழும்பி என்னைக் கண்டவுடன்
வானை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது
ஒரு மீன் போனால் போகட்டும்
ஆற்றைப் பார்த்தேன்
எந்த மீனும் துள்ளவே இல்லை
00
கத்திக்கொண்டிருந்த பூனைக்குட்டியைக்
கண்காணா தூரத்தில் விட்டுவந்தேன்
அன்று வீட்டில் ஈன்ற நான்கு நாய்க்குட்டிகளுள்
வெண்சாம்பல் நிறத்திலான ஒன்று
“மியாவ்” என்று கத்தியதுபோல்
எனக்கு மட்டும் கேட்டது
00
ஒரு மிடறு நீரை
அருந்திக் கொப்பளித்தலெனும் செயல்
பாவங்களைக் கழுவுவதற்குச் சமம்
என்பதாகக் கொண்டேன்
இப்படியாகத் துப்பிய
பாவநீரைத் தற்செயலாய்ப் பார்த்தபோது
மிகப் பொறுமையாய் அதில்
நீந்திக்கொண்டிருந்தேன்
ஒரு மிடறு கவிதைக்குள் வாசகர் நீந்திக் களிக்குமளவு கரு. பிரமாதம். பாராட்டுகள்.