
விடுதலை
இலையுதிர் காலம் வர வர
குரங்கு மனிதனானது போல
நாங்கள் அனைவரும்
உதிரப்போகும் சருகுகளாக
மாறிக் கொண்டே இருந்தோம்.
எங்களுக்கு நல்லதெல்லாம்
முதலில் இலை உதிரப் போகும்
மரத்தில் காய்ந்து போன
இலையாக போய்ச் சேர்வதே.
பருவத்தின் முதல் தென்றலென
வீசப் போகும் காற்றில்,
மரத்தின் சிறு விசும்பலில்
கிளையிலிருந்து காம்பு
முறிந்து சருகாக நிலத்தை
முத்தமிடும் போது,
உங்கள் கருத்தெனும் கற்பிதங்கள்
சம்பிரதாயங்கள், பேரன்பு
எதுவும் படாது
எங்கள் வனத்தில்
நிர்வாணமாக ஆழ்ந்த
தனிமையிலிருப்போம்.
கருப்பி
அன்றோர் நாள்,
மறந்து போய் ஒரு நொடி
மாதவிடாய் வலியில்
முகம் சிவந்து போய்
வயிற்றைப் பிடித்துக் கொண்டு
நின்றிருந்த,
அந்தக் கருப்பியின்
கண்களை நேருக்கு நேராகப்
பார்த்து விட்டேன்.
கருவிழியில் பதிந்த பாதகத்தி
அவளின் இமைகள்,
அவளின் வலியை
என் விழியோரத்தில்
4 வாரத்திற்கு ஒருமுறை,
பதித்துவிடுகிறது.
மனத்தின் ஆழச் சென்றுவிட்டு
நீங்க மறுக்கிறது,
வலியால் சிவந்த அவளின் முகம்.
பழங்கதைகள் அவளை
அந்நாட்களில் தீண்டத்தகாதவளாய்
வீட்டின் கொல்லையிலே
முடக்கியது போல,
கருப்பியின் அந்தக் கண்கள்
என் அன்றாடத்தை
முடக்கி விடுகிறது.
‘உன் யாதுமாகியவள் நான்’
என அசரீரி கேட்கிறது.
நேரம் பார்த்தல்
வேலை முடியும் நேரம்
அறியவோ
இல்லை
இரயிலைப் பிடிப்பதற்காகவோ
இல்லை
பேருந்து பயணத்திலோ
இல்லை
டீ/ காபி குடிக்க
செல்வதற்காகவோ
இல்லை
வெறுமனே தெரிந்து
கொள்ளவோ,
வயது முதிர்ந்த தொழிலாளியோ,
எதிர்வருபவரோ,
அருகில் உள்ளவரோ
“நேரம் என்ன?”
என்று கேட்கும்போது,
கடிகாரம் பார்த்து
நேரத்தைக் கூறியவுடன்
அவர்கள் புன்னகைத்து
செல்லும் கணம்
சாலச்சுகம்.