
வேல்முருகன் இளங்கோ தமிழ் இலக்கிய களத்திற்குப் புதிய வருகை. ஊடறுப்பு என்ற தலைப்பும் அதற்கான அட்டைப்படமும் கொஞ்சம் வித்தியாசத்தைக் கொடுக்க, வாசிக்க வேண்டும் என்று குறித்து வைத்திருந்த நாவல். வாசித்தாயிற்று. வேல்முருகன் இளங்கோ என்ற எழுத்தாளரின் பெயரையே இப்போதுதான் கேள்விப்படுகிறேன் என்றாலும் இந்த நாவலுக்கு அறிமுகம் கொடுத்திருக்கும் லஷ்மி சரவணகுமார், “உப்புநாய்கள் எழுதியபோது எனக்கு வாய்க்காத புனைவுமொழி இந்த நாவலில் இவருக்குக் கிட்டியுள்ளது”, என்ற வாசகம் என்னைப் பெரிதும் ஈர்த்தது. தொடர்ந்து வாசித்து முடிக்க வேண்டும் என்கிற உந்துதலைக் கொடுத்ததும் அதுவே.
மூன்று வெவ்வேறு இடங்களிலும் இரண்டு வெவ்வேறு காலங்களிலும் நடைபெறும் கதை – ஊடறுப்பு.
சாத்தனூர் சிவனாற்றங்கரையில் இருந்து ஆரம்பிக்கும் கதை, நதிக்கரையோரம் தங்கள் வாழ்வை ஆரம்பித்த மனிதக்கூட்டம் அதே நதிக்கரையில் எவ்வாறு தங்கள் அழிவைச் சந்திக்கிறது என்பது பற்றி பேசுகிறது. நதி நம்முடைய சமூகத்தில் புனித பிம்பத்தின் உச்சத்தில் இருக்கும் ஓர் அடையாளம்.
நதியின் அழிவுதான் மனிதனின் அழிவு என்பதை உணர்ந்த ஓர் சமூகத்தின் முன்னெடுப்புதான் எக்காரணம் கொண்டும் இயற்கையை மனிதன் தீண்டிவிடக்கூடாது என்று புனித பிம்பம் கொடுத்து அவற்றை பாதுகாத்து வந்ததோ என்று யோசிக்கத் தோன்றுகிறது. சிவனாறும் புனித பிம்பத்தின் உச்சமாகவே கருதப்படுகிறது. அது அடைந்த புனித பிம்பம் மிகச்சாதாரணமானது அல்ல. அதற்கென சில மருத்துவ மற்றும் தனித்துவ குணங்கள் இருக்கின்றன. மண்ணைப் பொன்னாக்கும், பாலையை வண்டலாக்கும். வண்டலை சோலையாக்கும். அப்படிப்பட்ட சிவனாறு சிவனாக போற்றி வணங்கப்படுகிறது. கொண்டாடப்படுகிறது. அதன் பரிசுத்தத் தன்மை எல்லோராலும் பாதுகாக்கப்படுகிறது.
தலைமுறைகள் கடந்துபோக, எந்த சனம் செழிப்பதற்காக தன்னை வற்றாமல் ஓடிக்கொண்டிருந்ததோ அந்த ஆற்றின் பரிசுத்தத் தன்மை கற்பழிக்கப்படுகிறது. தொலைநோக்கற்ற விஞ்ஞான வளர்ச்சி ஆற்றை மாசுபடுத்துகிறது. அதுவரை வரங்களை வாரியளித்த சிவ்னாறு இப்போது சாபமாக சாக்கடையாக உருவெடுக்கிறது. தன்னைப் போலவே தன்னைச் சுற்றி வாழும் சமூகத்தையும் ஊனமடையச்செய்கிறது. ஆற்றைக் காப்பாற்றவும், ஆற்றை மாசுபடுத்திய ஆலையை மூடவும் போராட்டம் வெடிக்கிறது. போராட்டம் பரவுகிறது. போராட்டம் தீவிரமடைகிறது. பின் போராட்டம் நசுக்கப்படுகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டச் சித்திரத்தைக் கண்முன் கொண்டுவரவும். ஆழிக்கு அருகே நடைபெற்ற அதேபோன்ற ஒரு போராட்டம், சிவனாற்றுக் கரையருகே நடைபெறுகிறது. அதிகாரத்தின் அச்சுறுத்தலால் மக்கள் அதே ஆற்றில் மூழ்கி இறக்கிறார்கள் – மாஞ்சோலைப் போராட்டச் சித்திரம். இந்த முதல் கதை சமகாலத்தில் நடைபெறுகிறது. அதாவது நாவல் எழுதப்படுகிற நாவலாசிரியர் வாழக்கூடிய நம்காலத்தில் நடைபெறுகிறது.
அடுத்த கதை அருண் என்கிற எழுத்தாளனைப் பற்றியது. அனு என்கிற அவன் காதலியைப் பற்றியது. அருண் என்கிற அந்த எழுத்தாளன் தன் காதலியுடனான பிரிவினால் முழுமையான போதைப்பழக்கத்திற்கு ஆளாகிறான். அந்த போதைப் பழக்கம் ஒன்றுகொன்று முரணான மாய உலகினுள் அவனைத் தள்ளி விடுகிறது. அதில் அவன் பாரதியாருடன் பேசுகிறான், நீரின் அடிமட்டத்தில் உலாவுகிறான், தன் காதலியுடன் குலாவுகிறான். அவனுக்கென்று எவ்வித குறிக்கோளும் இல்லாமல், இருக்கும் ஒரே குறிக்கோள் அனு என்று உலாத்துகிறான். உச்சமாக அவன் காதலி அவனை விட்டுப் பிரிகிறாள்.
மூன்றாவது கதை இப்போதிருந்து ஒருநூறாண்டு கடந்து, உலகம் அழியக் காத்திருக்கும் கடைசி வருடங்களில் நடைபெறும் கதை. அங்கே குறிஞ்சிவனம் என்ற ஒரு வனம் இருக்கிறது. அந்த வனம் மட்டுமே உயிர்ப்போடு இருக்கிறது. அந்த வனத்தையும் அங்கு இருக்கும் உயிரினங்களையும் காப்பாற்ற மிகப்பெரிய யுத்தம் நிகழ்கிறது. அந்த வனம் இயங்குவதற்கு என மிகத்தீவிரமான கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அந்தக் கட்டுபாடுகள் அனைத்தும் அங்கு இருக்கும் உயிரினங்களையும் அவர்களது வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்குமான தேவையென கருதப்படுகின்றன. மேலும் இயற்கைதான் எல்லாம் என்பதால் இயற்கையின் சுழற்சியும் மிகத்தீவிரமாகப் பேணப்படுகிறது. உலகை அழித்து நாசம் செய்த அந்நிய சக்திகளிடம் இருந்து அந்த வனத்தைப் பாதுகாக்க ஒரு இனமே தங்கள் உயிரைக் கொடுத்துப் போராடுகிறது. போராட்டம் உச்சம் அடைந்து அதன் இறுதி கட்டத்தை நெருங்குகிறது.
குறிஞ்சிவனத்துப் போர்த்திட்டங்கள் யாவும் எதிரிப் படையினருக்குத் தெரிந்து, குறிஞ்சி ராணுவத்துப் போர் வியூகங்கள் யாவும் தவிடு பொடியாக்கப்படுகின்றன. உலகின் கடைசி எச்சமான பல்லுயிர்ச்சூழல் என்னவாகப் போகிறது என்பதை நோக்கி நகர்கிறது இறுதிகட்டம்.
இந்த மூன்று கதைகளும் ஒரு புள்ளியில் இணையும் பொழுது நாவல் நிறைவடைகிறது.
*****
கதை – நடந்து ஓய்ந்த ஈழ அரசியலில் ஆரம்பித்து, கூடங்குளம் போராட்டம் தொட்டு ஸ்டெர்லைட் வழியாக டெல்டா மாவட்ட போராட்டக் களங்களை விவரிக்கிறது. ஆக ஆசிரியர் பேச விரும்பிய களம் இயற்கைக்கு எதிராக நிகழும் அத்துமீறல்களையும் வன்முறையையும் குறித்து. அதனை தனது எதார்த்தவாதக் கதையான சுரேஷின் மூலம் சிவானற்றங்கரையில் நடத்துகிறார். கூடவே எழுத்தாளருக்கு தமிழ் தேசியம் என்கிற மாபெரும் கனவு இருக்கிறது. அதனை பால்ராஜ் என்கிற தளபதியின் மூலம் எதார்த்தவாதத்தின் நீட்சியான மிகை எதார்த்தவாதத்தின் வழியாகக் கூறுகிறார். மூன்றாவது கதையாக, எழுத்தாளன் அருண் என்பவனுடைய உலகம் மாய எதார்த்தவாதத்துடன் தொடர்புடையதாக ஊடாடுகிறது.
மூன்று கதைகளை ஒரேநாவலில் நான்-லீனியர் வடிவத்தில் எழுத முயலும் போது, அது ஒரு சிக்கலான வடிவத்தை மேலும் சிக்கலாக்குகிறது. அந்த சிக்கலான வடிவம் வாசிப்பாளனைக் குழப்பமடையச் செய்யக்கூடும். அந்த குழப்பம் ஒருவிதத்தில் நல்லது, ஒருவிதத்தில் ஆபத்தானது. துப்பறியும் வகைமை நாவல் என்றால் – குழப்பம் நல்லது. கதைக்களத்தை மேலும் மேலும் குழப்பமடையச் செய்வதன் மூலம் நாவலை மேலும் மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கி வாசகனை பரபரப்படையச் செய்யலாம். அதுவே எதார்த்தவாத நாவல்களில் வெளிப்படும் குழப்பம் வாசகனை அயற்சியடையச் செய்யக்கூடும். ஒரு கதையை ஒரேபோக்கில் கொண்டு செல்லாமல், உள்வாங்கவும் விடாமல் ஏராளமான கேள்விகளை எழுப்பி நகர்த்தும்போது, அந்தக் கதை சொல்லல் முறை வாசகனை சோர்வடையச் செய்யக்கூடும்.
நான்-லீனியர் வடிவத்தில் இருக்கும் பெரிய நன்மை அது தரும் சுவாரசியம். அது கொடுக்கும் புதிர்த்தன்மை. அதேநேரம் அதிலிருக்கும் மிகப்பெரிய அபாயம் – ‘கதை‘, சொல்ல வந்ததை விடுத்து வெவ்வேறு திசைகளில் பரிணமிக்கும் போது அது ஏற்படுத்தக்கூடிய தரவுச்சிக்கல்கள்.
வேல்முருகன் இளங்கோ, தன் பரிசோதனை முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் என்றே கூறவேண்டும். மூன்று கதைகள் மூன்று கோணங்களில் எழுதப்பட்டிருந்தாலும் தன்னுடைய எளிமையான கதை சொல்லல் முறையில், கதையின் போக்கில் ஏற்படக்கூடிய தரவுச் சிக்கல்களை ஓரளவிற்கு சமன்செய்திருக்கிறார். லஷ்மி சரவணகுமார் குறிப்பிட முயன்ற புனைவு மொழியும் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.
நாவல் அதன் முழுமையான வடிவத்தில் நான் லீனியர் வடிவம் பெறுகிறது என்ற போதிலும் சுரேஷ் பங்குபெறும் சாத்தனூர் போராட்டக்களம் ஆகட்டும், பால்ராஜ் பங்கு கொள்ளும் குறிஞ்சிவனக் கதையாகட்டும் இவையிரண்டும் ஒரே நேர்கோட்டில் பயணிகின்றன. அதுவே இந்நாவலின் மிகப்பெரிய பலம். அதே நேரம் இந்நாவலின் மையக்கதாபாத்திரமாக வரும் அருண் தன் கதையை நான்-லீனியர் வடிவத்தில் கூற முனைகிறான். கதையின் ஓட்டத்தை வெகுவாக சுத்தவிடும் பகுதியும் இதுவாகத்தான் இருக்கக்கூடும். அருண் கதையைப் புரிந்துகொள்வதற்கும், என்னுள் ஏற்பட்ட சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கும் இரண்டாம் வாசிப்பு தேவைப்பட்டது. அதுவும் ஒருவிதத்தில் நன்மைக்கே. வாசகனைப் பரிசோதித்தல்.
வேல்முருகன் இளங்கோ குறிப்பிடும் தமிழ்நிலக் கனவு அட்டகாசமாக உள்ளது. அந்த நிலத்தின் தலைவன் சர்வாதிகாரி என்றபோதும் அவன் செய்யும் காரியங்கள் அனைத்தையும் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். காரணம் அவன் மக்கள் தலைவன். நாவலின் குறிப்புகள்படி குறிஞ்சிவன ஆட்சிக்காலத்தை கீழ்காணும் வருடங்களின் மூலம் எளிமையாக வரையறை செய்யமுடியும்.
2050 – பெருங்கோவில் வழிபாடு நிறுத்தம்
2110 – கொற்றவை நவகண்டம்
2114 – கொற்றவைக்கான முதல் மனித பலி
2115 – தங்கம் மற்றும் பண அழிவு
2120 – மனித பலிக்கான ஐநா தடை
2215 (2125) – குறிஞ்சிவனத்தின் ஆட்சி பிடிப்பு – (Year Typo)
2130 – பஞ்சம் உலக அழிவு
2138 – முருங்கை மரத்தின் அழிவு
2148 – குறிஞ்சிவனத்தின் உச்சகட்டப் போர் நடப்பது
*****
கதையின் பெருங்குறையாகக் கருதுவது குறிப்பிட்ட சில இடங்களை மட்டுமே. அதுவும் குறிப்பாக ரியலிசத்தையும் மேஜிக்கல் ரியலிசத்தையும் இணைக்கும் உச்சகட்டப் புள்ளிகளில் நாவலின் ஆசிரியர் சறுக்கிவிட்டாரோ என்று தோன்றுகிறது. ஆயிரம் வருடப் பழமையான சிவானாற்றின் உள்ளிருந்து எழுந்து போகும் சித்தர் யார் என்ற உண்மையை ஆசிரியர் கூறும் இடம் அதுவரை, தான் கொடுத்துவந்த தர்க்கம் சறுக்கும் இடம். சாத்தனூரும், சிவனாறும் கூட மாய எதார்த்தவாதம் என்று வைத்துக் கொண்டாலும் அந்த உச்ச காட்சி பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. ஒருவேளை மாய எதார்த்தவாததில் கேள்வி எழுப்பக்கூடாது என்றால் அங்கே எதார்த்தவாதம் தோற்றுப்போகிறது. எதார்த்தவாதம் தோற்றுப்போகிறது என்றால் சாத்தனூரில் நடைபெறும் மக்கள் எழுச்சி கேள்விக்குள்ளாகிறது. இந்த இடம் சரியாகக் கட்டமைக்கப்படவில்லையோ என்று தோன்றுகிறது.
அதேநேரம் மிகை எதார்த்தவாத கதையான குறிஞ்சிவனத்தோடு மாய எதார்த்தவாதத்தைக் கலக்கும் புள்ளியும் குழப்பமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. சொல்லபோனால் இது கேள்விக்குள்ளாகக் கூடாத இடம். ஆனால் கேள்வி எழுவது கதை சொல்லலில் நிகழ்ந்த ஒரு சிறு குழப்பத்தினால்.
பால்ராஜ் என்கிற நபர் தன் தந்தையின் இறப்பிற்குப் பின் தந்தை கேட்டுக்கொண்டதற்கு இணங்க குறிஞ்சிவனத்தை நோக்கி நடக்கிறார் – இத்தோடு கதை நிறுத்தப்படுகிறது. பின் ஒரு சமயம், குறிச்சி வனத்தை வேறோர் நபர் வந்து சேரும் காட்சியில், அவ்வாறு அங்கு வந்து சேரும் நபர் பால்ராஜ் என்று நினைக்கையில், அந்த நபரே பால்ராஜுடன் கதைக்கத் தொடங்குகிறார். குழப்பமாக இருக்கிறது இல்லையா? ஆக மிகை எதார்த்தவாதக் கதை மாய எதார்த்தவாதத்துடன் கலக்கும் புள்ளி தெளிவாக இல்லை. இதற்குக் காரணம் இந்த இரு தனித்தனிதக் கதைகளிலும் மைய கதாபாத்திரமே கதைசொல்லியாக வலம் வருவதுதான். இந்த இரு கதை சொல்லிகளும் ஒரு புள்ளியில் இணையும் இடம் தோற்றச்சிக்கலைக் ஏற்படுத்துகிறது. ஒன்று பால்ராஜ் தங்கள் தலைவனைக் கண்டடைந்த சம்பவத்தைத் தெளிவாகக் கூறியிருக்கலாம் அல்லது குறிஞ்சிவனத்தினுள் நுழையும் அருணின் ஆரம்பக் காட்சிகளை தெளிவாக ஆரம்பித்திருக்கலாம். இந்தக் காட்சியைக் குறிப்பிடுவதன் காரணம் – இதுவும் கதை உச்சமடையும் தருணம் என்பதால்
அதுபோக அருண் என்ற எழுத்தாளனின், வாசகன் ஒருவரின் குரலும் ஒரு அத்தியாத்தில் வந்து போகிறது. இடையே அருண் என்கிற எழுத்தாளன் எழுதிய சிறுகதையும் வருகிறது. இவை இரண்டுமே கதையின் வேகத்திற்குத் தடை இல்லை என்றாலும் அவை கதையின் போக்கையும் எவ்விதத்திலும் மாற்றவில்லை.
*****
தொய்வில்லாத புனைவு மொழி. சோர்வடையச் செய்யாத எழுத்து நடை. அட்டகாசமான மூன்று தனித்தனிக் கதைக்களங்கள். ஒரு நாவலுக்கு இவை அமைவது அரிதினும் அரிது. அவ்விதத்தில் வேல்முருகன் இளங்கோ ‘முதல் வருகை’ என்ற வகையில் முத்திரை பதிக்கிறார். எடுத்துக்கொண்ட கதைக்களத்தையும் அதைச் சுற்றி நிகழும் கதை மாந்தர்களின் எண்ணப் போக்கையும் இன்னும் கொஞ்சம் அழுத்தமாகப் பதிவு செய்திருந்தால், வேல்முருகன் இளங்கோவின் வருகையும் மிக அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கக்கூடும்.