
என் கவிதை
எனது கவிதையின் கரு
அவளிடமே உள்ளது.
அவளை உற்று கவனிப்பதே
எனது கவிதைக்கான அனுபவம்.
அவளிடம் நான் கேட்டும்
கிடைக்காத பதில்கள், தருணங்களே
எனது கவிதைக்கான கற்பனை.
எனது கவிதைக்கான களம்
வேறு யாரிடமும் இல்லை;
அது அவளிடம் மட்டும்தான் உள்ளது.
எனது கவிதைக்கான முதலும்
இடையும் கடையும் அவளேதான்.
இறுதியாக உறுதியாக,
எனக்கும் அவளுக்குமான தினசரி உரையாடல்களின் மாற்றி அமைக்கப்பட்ட
மொழிகளே எனது கவிதைகள்.
எனது கவிதைக்கான வார்த்தைகள்
அனைத்தும் ………….. என்ற
உயிருள்ள ஒற்றை வார்த்தையில்
இருந்தே வருகின்றன.
திடீரென்று நம் உரையாடலை
நிறுத்திவிடலாம் என்று நீ
கூறினால் இன்னும் எழுதவேண்டிய
என் கவிதைகள் எங்கே போகும்!?
***********
நட்சத்திரத்தை நிலவென பாவிப்பவர்கள்
பெருந்தனிமை வாட்டும்
பொழுதுகளில் எல்லாம்
அகண்ட பேரண்டத்தின்
கண்ணிற்கு புலப்படாத
ஒளியற்ற சிறு நட்சத்திரம்
ஆகிவிடுகிறேன் ஏனையோருக்கு.
இருப்பினும் எப்போதும்
என் அகாலத் தனிமையில்
நீ மட்டும்
எனை முழுநிலவென
கண்டுணர்ந்து
ஆகாயச் செடியிலிருந்து
பறித்தெடுத்து
உன் அறையில்
கிறிஸ்துமஸ் நட்சத்திரமாக்குகிறாய்.
நானும் மின்மினியாக
ஒளிர்கிறேன் உன் அருகில்.
***********