கவிதைகள்- மதுரா

வனமோகினி
ஏழுகல் ஆட்டத்தில்
கூழாங்கற்களை இணைத்தபடி
இளைப்பாறுகிறாள்…
நிறமில்லா மலர்வனம்
ஒன்றை சிருஷ்டிக்க
மறுபடியும் முயற்சிக்கும்
கரங்களில்
தாழம்பூ மணம்..
புதரோரம் முள்வேலிக்குள் பாம்புகளின்
சட்டைகள் ..
நீலம் பாரித்த வானத்தின்
மின்னல் கீற்றுகளில்
விழுங்கித் தொலைக்கிறாள்
வண்ணமற்ற
சூரிய குஞ்சை. .
எக்களிப்போடு
இடம் மாறுகையில்
கறுத்து வழிகிறது
கைப்பிடிச் சாறு..
மிடறு மிடறாய் உண்டு
முடிக்கையில்
தடமெங்கும் துளிர்த்து விடுகின்றன
தசாப்தங்களின் புதுயுகங்கள்…
**********
பயணங்களின் பாதைகள்
முடிவுகளற்ற பயணங்களால்
நிறைந்து கிடக்கும் வீதியில்
நடக்க எத்தனிக்கும்
கால்கள் நீளமா? குட்டையா?
தரை தழுவும்
பாதங்களில் பூமியின்
அட்சரேகை…
சரியும்போது
சமன்படுத்துதல்
மெய்நிலை…
தொலைக்கவோ மீட்கவோ
இயலாத இடத்தில்
ஒரு முற்றுப்புள்ளி..
வலசை திரும்பும்
பறவைகள் சுமந்தலையும்
ஆகாயத்திலிருந்து
ஒரு தொடுகோடு…
மண்ணுளிப் பாம்புகளுக்கு
கால்களில்லை.
**********
காற்று
#சவப்பெட்டியை
சுற்றி வந்து கொண்டிருக்கிறது
உள்ளே இருப்பவனுக்குத்
தேவையில்லா காற்று…
#வேகமாக வீசி
கையிலுள்ள பலூனைப்
பிடுங்கி
குழந்தையை அழ வைக்கிறது..
#செயற்கை சுவாசம் கொடுக்க
உருளைக்குள்
அடைபட்டுக் கிடக்கிறது.
#நிர்தாட்சண்யமாய்
உடலைப் பிரிந்து
உயிரைப் போக்குகிறது.
#அவ்வப்போது
ஆசுவாசமாய் கிளையசைத்து
மலர்களையும் தூவி விடுகிறது.
**********