
தொற்று சிதறல்கள்
நித்தியத்துவத்திற்கு முடிவுரை எழுத முற்படுகிறேன்
நித்தியத்துவமானது முடிவுரையாகிறது.
***
பெருகி வளர்ந்தவைகள்
புரண்டு கிடக்க
நுண்ணுயிர் போதுமானதாக இருக்கிறது.
***
எதிர்பாரா தும்மல்
இறையை அழைத்தவர்கள்
இப்பொழுது
சாத்தானை தன்னுள் அமர்த்திக் கொள்கிறார்கள்.
***
நேரங்களை ஒரு முறை சொல்லிப் பார்த்துக் கொள்கிறேன்:
தாயம், இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து(இன்னொரு முறை),
ஆறு(அட),பன்னிரண்டு(ஆஹா) – என்ன? ஏன் சிரிக்கிறீங்க?
***
நாளொன்றுக்கு சில மணித் துளிகள் கூடுதலாக வேண்டியவர்களுக்கு
பேரிசைச்சலுடன் கடல் ஆர்பரித்து அடங்குகிறது.
***
கொலைகள் தற்கொலைகள்
மீதான அபிப்பிராயங்கள்,
அபிமானமாகின்றன.
***
இவ்வளவு அடர்வுடன் அழுத்தத்துடன் கேட்டதில்லை, இசை.
***
எல்லோரும் சப்தமிடுகிறார்கள்
அலறலில் கரைந்து போகிறது
துக்கத்தின் தனித்துவம்.
***
மெளனங்களை மொழி பெயர்த்தவன்
வார்த்தைக்குள் தடுமாறி விழுகிறான்
வார்த்தைகளால் அர்த்தம் புரிந்தவன்
புத்தனை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறான்.
***
காதுகள் என்று கால்களைப் படித்து விட்டேன்
கேட்கத் தொடங்கிய கால்கள் காதுகளை வழிநடத்துகின்றன.
**********
ஓசையின்மை
ஓசையின்மை குறித்த அச்சம் வெகு ஆழம் நோக்கிச் செல்கிறது.
நேற்று வரை வண்ணங்கள் குறித்த புரிதல்
கருப்பு வெள்ளை புள்ளிகளாக கரைகிறது.
பயணங்கள் குறித்த கேள்விகள்
முன்பின் அறியாத பறவைகளின் சப்தங்களை கணக்கிட வைக்கின்றன.
நிரம்பியவை தளும்புகின்றன.
தெளிந்தவைகள் மக்குகின்றன.
இருந்தவர்கள் பிடியும் மிஞ்சவில்லை.
நம்பியவர்கள் பலமிழக்கிறார்கள்.
நம்பாதவர்கள் சொர்க்கத்தின் கதவுகளை தேடுகிறார்கள்.
உட்கொண்டவைகளின் பக்க விளைவுகள் கண்ணாமூச்சி ஆடுகின்றன.
ஐந்தாம் நம்பர் படுக்கையின்
67 வயது முதியவர் அலைபேசி ஒலிக்கிறது…
நேற்றுவரை.
**********