
நிழலில் நிற்க விரும்பவில்லை…
மரக்கன்றுகளைப் பார்க்க வேண்டும்
சுற்றி வளைத்துத்தான் போகவேண்டும்
பெயருக்கு ஒன்றாகவாவது
மலர்ந்திருப்பதைத் தேடுகிறேன்
பெட்டைக் கோழியோன்று வழியில் நிற்கிறது
தொட்டியில் படர்ந்திருக்கும்
பச்சை மலர்களைக் காணவேண்டும்
பெயர் தெரியவில்லை
தெரிந்துகொள்ள வேண்டும்
பெட்டை வழிவிடவேண்டும்
அது எச்சமிடுகிறது…
கன்றுகள் வாங்க வந்த ஒருவர்
தோழியின் தகப்பன் முகம் போல
அவர் சிறைபடப் போய்
காப்பாற்றப்பட்டவர்…
தொட்டிப் பூக்களை
அதன் வேர்களைக் கண்டு நிற்கிறேன்
அது மணமணக்கவில்லை
தோகை நரம்புகளைப் போல
வேர்கள்
நீரில் ஊடுருவுகின்றன….
**********
பெண்கடலிலிருந்து எழுந்து வந்தேன்….
சூறைக்காற்று போல போரடித்துக் கொண்டிருக்கிறது கடற்கரை மணல்
கரையிலிருந்தே மிதந்து செல்லும்
இந்த உடல் படகு
மூச்சை உள்ளிழுத்தபடி
கைகளை மணலில் ஊன்றாதபடி
விட்டுவிட்டால்
உப்புகின்ற உடலின் காற்றுக்கு
கைகளைத் தொங்கவிடுகிறேன்
உப்பு நீரிலிருந்து உப்பும் முகம்
ஆகாய வெளிச்சத்தைப் பார்த்தபடி
மூச்சுவிடுகிறது
சூரியன் சுடுகிறது
என்முகத்தில் நீருக்கு நடுவே வட்டம்
ஒரு உலர்வு
கடலளவு இல்லாத கடற்கரை ஆழத்தில்
படுத்துக்கொள்கிறார்கள்
எச்சில் துப்புகிறார்கள்
மணல் பெரும்பசியெடுத்து வீசியடிக்கத் துவங்கிவிட்டது
கடற்கரையிலிருந்து மீள்கிறவர்கள்
மணலைத் துப்பிக்கொண்டே வருகிறார்கள்
இந்த மணல் கட்டெறும்பு போல
பட்ட இடமெல்லாம் சுருக்…
**********
நிலம் பூத்த கவிதைகள்….
கட்டங்களைக் குறுக்காகப் பின்னிக்கொண்ட கம்பி வேலிக்குப் பின்னால்
கணன்று கொண்டிருக்கின்றன கங்குக் கட்டிகள்
இரண்டு மீனுடலிகளைப் போல
தம்மை வாட்டிக்கொள்ளும் உடலில்
செதில்களற்று
எரிந்து முடித்திருப்பது என்னவாகவுமிருக்கலாம்
ஒரு எரிமலைக்குழம்பாகவும்
இரு கட்டிகள் குழம்படங்கி
உறைவது போலவும்
குவிப்பாக உயிர்த்திருக்கும்
மைய வடு கருகிப் பிளந்திருக்கிறது
புற்றுவாய் போல
புகைபோக்கியெனவும்…
**********
அட்டைப்பெட்டியிலிருந்து கிழிந்து விழுந்திருக்கிறது
அதன் சிறு துண்டு
மேலும் கிழிந்து இரு துண்டாக
ஒரு வீட்டின் கூரை போல
குப்புறப்படுத்து…
**********