
நான்
துயரத்தின் பெருங்கனவு
முடிவுக்கு வருகையில்
நானே சகலமுமாக இருக்கிறேன்
நான் இருக்கும் இடமே
இப்பிரபஞ்சத்தின் ஆதாரப்புள்ளியாக
விரிகிறது
நான் உச்சரிக்கும் வார்த்தைகள்
மந்திரங்களாகின்றன
சிந்தும் துளி இரத்தத்தில்
சகலமும் ஜெனிக்கிறது
மீண்டும் புதிய துவக்கம்
மீண்டும் கதகதப்பு
சூன்யத்தை நான் நிறைக்கிறேன்
பாட்டிலில் அடைக்கப்பட்டு
என் நினைவுகள் விற்கப்படுகின்றன
என் இறந்த காலம்
அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படுகிறது
மௌனத்தின் பெருமூச்சுடன்
இன்னும் ஸ்பரிசிக்கப்படாத
புதிய நாளில்
நான் மட்டும்
வேறொன்றுமேயில்லை.
**********
அலைவுறுதல்
நடுநிசியின் அமைதியை
மூன்லைட் சொனாட்டா கலைக்கிறது
துயரத்தின் பிடியில்
மெல்ல மெல்ல பீத்தோவன் வாசிக்கிறான்
அவன் உள்மனக் குமுறல்களை
இசை சுமந்து வருகிறது
காதலியை பிரியும் இந்த துர் இரவில்
என்றோ இறந்துபோன
நாய்க்குட்டியின் ஞாபகங்களும்
பற்றி எரியும் தாபத்தின் ரணங்களும்
சேர்ந்தே இம்சிக்கின்றன
அவன் விரல்கள் பியானோவில்
விளையாடுகின்றன
அள்ளிப் பருக முடியாத
இந்த இரவின் பிடியில்
நாளைய விடியலை ஜெயித்துவிடலாம்
என்ற நம்பிக்கையுடன்
அவன் வாசிக்கும் இசையின்
ஒற்றை துணுக்காக அலைகிறேன்.
**********
இயல்புகளின் திரிபு
சில தேவதைகளின்
இறக்கைகளை முறித்து
இவ்வுலக வாழ்க்கைக்கு
பழக்கியிருந்தார்கள்
முறிந்த இறக்கைகளின்
பொறுக்க முடியாத வலியால்
அவைகளும் மனிதர்களைப் போல்
மாறியிருந்தன
தனக்கான பாலினத்தைத் தேர்வு செய்துகொண்டு
அதற்கேற்றாற் போல் நடந்துகொண்டன
என்றாவது தோள்பட்டையில்
புதிய இறக்கை துளிர்க்கும்போது
அவைகளாகவே அதைப் பிடிங்கிப் போடவும்
ஆரம்பித்தன
தேவதைகள் போலவே
பிசாசுகளுக்கும் நடந்தது
வலுக்கட்டாயமாக அதன் அகோரங்களை
அழகாக்கி இறக்கைகள் சொருகப்பட்டு
சிறகடித்துத் திரிந்தன
ஒன்றுக்கொன்று பொருந்தாத
இந்தப் பிரபஞ்ச பெருங்கனவை
கலைக்கக் கலைக்க
வேறொன்றாக மாறி
இன்னொரு துர்கனவை கொண்டு சேர்க்கிறது
அவரவர்கான இயல்பில் இருப்பதில்
யாருக்கு என்ன பிரச்சனை?
உங்கள் வக்கிரங்களை வேறெப்படியும்
பிரயோகிக்கக் கூடாதா?
இப்போது தேவதைகளுக்கு
ஒரு ஜோடி கொம்புகள் முளைத்திருக்கின்றன
பிசாசுகளைப் பற்றிச் சொல்ல விருப்பமில்லை.
**********
மலர்ச்சி
நேசிக்கப்படும் இதயங்கள்
துயரத்தின் சுதியிலே துடிக்கின்றன
வடுக்களைத் தவிர
வேறெதையும் அவை
நமக்கு விட்டுச் செல்லப் போவதில்லை
சிங்கத்தின்
கர்ஜனையாய் விரிகின்றன
உன் கதறல்கள்
ஒன்றை ஒன்று தீண்டிக்கொள்ளும்
சர்பங்களாக நீள்கின்றன
உன்னுடனான என் நினைவுகள்
நேசிக்க மட்டுமே தெரிவது
எவ்வளவு பெரிய சாபம்!
நம் புளித்த ரத்தத்தையும்
கசந்த கண்ணீரையும் கொண்டு செய்த
மதுவை உறிஞ்சி
எங்கோ ஒரு பூ
மீண்டும் பூக்கிறது.
**********