கவிதைகள்
Trending

கவிதைகள்- தாட்சாயணி

சாபம்

கூட்டத்திலிருந்து பிரிந்து
தனியே அலைகிறது ஒற்றைப்புறா…!

கண்களின் கூரிய ஈரம்
யாரைக் காயப்படுத்துகிறது
என அறிவாயா…?

நீயும் நானும் பிரிந்த போது
பரிமாறிக் கொண்ட
மொத்தத் துயரின் பிம்பமாய்
அது தத்தித் தத்தி
அலைந்து கொண்டிருக்கிறது!

குதூகலித்த காலங்கள்
கனவுகளாய்த் தொடர்கின்றன…!

விதியிலிருந்து
விடுபடத் தெரியாத காலம்…!

தீக்கொழுந்துகளை
விழுங்கிய கண்கள்…!

குறுகுறுவென்ற பார்வை
இணைப் புறாக்களைச் சுட்டெரிக்கிறது!

தனித்த சாபம் ஒன்று
மரக்கிளையில்
ஊசலாடிக்கொண்டிருக்கிறது…!

**********

ஒரு பொழுது!

பனங்குருத்தோலைகளை முடைந்து
வெள்ளரிகள் பொதிந்து
நெடுநேரமாய்
காத்துக் கொண்டிருக்கிறாள் அவள்!

பொழுது ஏகிக் கொண்டிருக்கிறது!
சூழவும் பரந்திருக்கின்றன,
வெள்ளரி… பூசணி
மற்றும் வெங்காய விளைநிலங்கள்…!

அந்தப் பூவரசு முடக்கில்
வளையும் வீதிகளில்
சக்கரங்கள் தேய்ந்து கொண்டிருக்கின்றன!

வெயில் ஏறிக்கொண்டிருக்கிறது!
திரண்டு சிவந்த மண்ணுக்கடியிலிருந்து
ஒருபோது சர்க்கரைவள்ளி…
ஒருபோது பூசணி…
மந்திரம் போல
திரண்டு திரண்டு உருவாகுவதை
பார்த்துக் கொண்டேயிருக்கிறாள்…!

எப்போதும் அவளிடம்
வெள்ளரி முடைகள்
இருந்து கொண்டேயிருக்கின்றன!

மழைக் குளிர்ச்சி
அடிப்பாதத்தைத் தீண்டும் வரை…
இந்த வெயில் காலம்
தீரும் வரைக்கும்…
வெள்ளரி விளைந்த நிலத்தருகே…
வெள்ளரி… வெள்ளரி எனக்
கூவிக் கொண்டிருக்கிறாள்!

நெருப்பு
அவள் கால்களின் கீழ்
அவிந்து கொண்டிருக்கிறது!

**********

உயிர்த்தெழல்

சாவைப் பழிவாங்கும்
வன்மத்தோடு தொடர்கிறது
வாழ்தலின் போராட்டம்…!

ஊழி உறிஞ்சிய
உயிர்களின் வட்டத்திற்குள்
துளிர்த்தெழுகிறது
மற்றுமொரு யுகத்தின் சுழற்சி…

வெளியெங்கும்
நிறைந்து துலங்கும்
விண்மீன்களின்
மௌனத்தினின்று கழன்று…
மீண்டும்
சலசலக்கத் தொடங்குகிறது
நின்று போன
பறவைகளின் குரல்…

கதியற்றுக் கலங்கினாலும் கூட
சிலிர்த்தெழுகிறது உள்மனம்
சாவின் குரல் கேட்டு!

அமைதியாய்
அடிபணிந்து போக
முடிந்ததில்லை ஒருபோதும்!

எந்த ஒரு உயிரும்
எதிர்த்துப் போராடும் காலம்
இன்னமும் முடியவில்லை

எந்த வடிவத்தில்
சாவு பதுங்கி இருந்தாலும் கூட…
ஒருமுறை
உயிர்த்துளி பொங்கித்தான்
அடங்குகிறது…
யாரும் அறியாமல் என்றாலும்…

**********

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button