இணைய இதழ்இணைய இதழ் 49தொடர்கள்

காகங்கள் கரையும் நிலவெளி; 16 – சரோ லாமா

தொடர் | வாசகசாலை

”I am the gigolo of cinema” # Christopher Doyle

கிறிஸ்டோபர் டோயல் ஆஸ்திரேலியாவில் பிறந்தார். ஆஸ்திரேலியாவில் பிறந்தாலும் அவர் ஹாங்காங்கின் தத்துப்பிள்ளை. உலக சினிமாவின் முக்கியமான ஒளிப்பதிவாளர் ஒருவருக்கு இப்படி எளிமையானதோர் அறிமுகம் எழுதுவது அநீதியானது எனினும் தான் ஒளிப்பதிவில் செய்த புதுமைகளும் சாதனைகளும் பற்றி அதிகம் பெருமிதம் கொண்ட மனிதர் அல்ல அவர். தனது 19-வது வயதில் தான் பிறந்தநாட்டில் இருக்கப் பிடிக்காமல் சரக்கு கப்பல் ஒன்றில் பயணம் மேற்கொண்டார். அந்த வயதின் எந்த சுகங்களையும் சொகுசுகளையும் அவர் அனுபவிக்கவில்லை. கடுமையான உடலுழைப்பைக் கோரும் கிடைத்த எல்லா வேலைகளையும் செய்தார். அப்படியாகத்தான் கடைசியில் 1971-ஆம் ஆண்டு அவர் ஹாங்காங் வந்து சேர்ந்தார். இப்போதைய சீன கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங் இல்லை. பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ் இருந்த சுதந்திரமான ஹாங்காங். 

கிறிஸ்டோபர் டோயல் பெயர் அதிகம் வெளியில் அறியப்பட்டது இயக்குனர் வாங் -கர்-வய் திரைப்படங்களில் சேர்ந்து பணிபுரிய ஆரம்பித்த போதுதான். சீனாவில் இருந்து தன் இளம் வயதில் ஹாங்காங்குக்கு புலம்பெயர்ந்த வாங் -கர்-வய், கிராஃபிக் டிசைன் படிப்பை முடித்தவர். படங்களில் தயாரிப்பு பணிகளில் வேலை செய்துகொண்டே திரைக்கதை எழுதவும் ஆரம்பித்தார். எல்லாம் குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படங்கள். அவர் எழுதிய படங்கள் கவனிக்கப்பட்டன, குறிப்பிடத்தகுந்த அளவில் அவர் பெயர் சினிமா வட்டாரத்தில் புழங்க ஆரம்பித்திருந்தது.

இயக்குனர் வாங்-கர்-வய்

வாங் -கர்-வய் தன்னை ஒரு இயக்குனர் என்று சொல்லிக்கொள்வதில்லை. பார்வையாளர்களின் சார்பில் கேமிராவுக்கு பின்னே நின்றுகொண்டிருக்கும் ஒரு நபர் என்றே சொல்லிக்கொள்கிறார். ஹாங்காங் நகரம் இவரது எல்லா படங்களின் பிரதான மையம். அதன் ஆன்மா அவர் எடுத்த எல்லா படங்களிலும் கசிந்து கொண்டிருப்பதை நாம் காணலாம். ‘In the Mood for Love’ திரைப்படத்தின் கனவு வயமான காட்சிகளை கொஞ்சம் நினைவில் கொள்ளுங்கள். அந்தப்படத்தின் பிரதான இரண்டு கதாபாத்திரங்கள், அவர்களின் வாழ்விடம், மனித வாழ்வின் ஸ்தூல இருப்பின் பிரிக்கமுடியாத பகுதியான உணவுக் கலாச்சாரம், திருமணத்துக்கு அப்பாலான காதல் உணர்வு உண்டாக்கும் மூர்க்கம், அவர்களின் தத்தளிப்புகள், சந்திப்புகளின் போது திடீர் மழைபோல் நிகழும் மாயாஜாலங்கள், ஹாங்காங் நகரத்தின் நியான் விளக்குகளின் ஊடே ஒளிரும் கனவுத்தன்மை, மனிதர்களின் இருப்பு, வாழ்வின் நிறைவேறா ஆசைகளின் வழியே சிதையும் சுயம், புற மற்றும் அக வாழ்வின் இயற்கை மற்றும் செயற்கையான அழுத்தங்கள் என இன்னும் ஏராளம் சொல்லிக்கொண்டே போகலாம். என்றாலும் அந்தப்படத்தை அதன் கனவுத் தன்மையை அதன் ஒளிப்பதிவில் நிகழ்ந்துவிட்ட இன்னபிற மாயாஜாலங்களை எழுத்தில் கொண்டுவந்துவிட முடியாது. அதன் மாயாஜாலத்துக்கும் உயிரூட்டியவர் கிறிஸ்டோபர் டோயல். 

கிறிஸ்டோபர் டோயல் தனது பதினைந்தாவது வயதில் குடும்பத்தை பிரிந்து வெளியேறினார். 19-வது வயதில் தனது சொந்த நாடான ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறினார். அதற்குப் பின்னர் அவர் வாழ்க்கை பயணங்களால் நிரம்பியது. இஸ்ரேலில் கிபுட்ஸ் விவசாயப் பண்ணையில் வேலை செய்தார். பின்னர் இந்தியாவில் மூன்றாண்டுகள் பீகாரில் புத்த கயாவுக்கு அருகே ஆழ்துளை குழாய்கள் அமைக்கும் குழுவில் பணியாற்றினார். அதற்கும் பின்னர் தாய்லாந்தில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை செய்தார். இதைப்போல இன்னும் எண்ணற்ற உடல் உழைப்பைக் கோரும் வேலைகள் செய்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் கிறிஸ்டோபர் டோயல்

இந்தியாவிலிருந்து மீண்டும் ஹாங்காங்குக்கு போகிறார். அங்கே நடிகை, தயாரிப்பாளர் ஸு – பெங், மற்றும் தைவான் இயக்குனர் எட்வார்ட் யங் -கின் இருவரின் நட்பும் கிடைக்கிறது. அது அவரது வாழ்வையே மாற்றி அமைக்கிறது. எதிர்காலம் பற்றிய எந்த முன் முடிவுமில்லாத கிறிஸ்டோபர் சீன மொழியைக் கற்க ஆரம்பித்தார். ஒளிப்பதிவு பற்றி எதுவும் அறிந்திராத காலங்களில் கிறிஸ்டோபர் டோயல்-க்கு தைவானின் நாட்டுப்புற பாடகர்களைப் பற்றி ஆவணப்படம் எடுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. தயாரிப்பு நிறுவனம் கேமிராவை கொடுத்து வேலை செய்யச் சொன்னது. கிறிஸ்டோபர் டோயல் தனக்குத் தெரிந்த அளவில், தன்னளவில் நேர்மையாக வேலை செய்து அந்த ஆவணப்படத்தை எடுத்து முடிக்கிறார். அந்த அனுபவம் அவருக்கு தைவானின் புதிய அலை இயக்குனர்களில் மிக முக்கியமானவரான எட்வார்ட் யங் படத்தில் வேலை செய்யும் வாய்ப்பை உருவாக்கித் தருகிறது. 

எட்வார்ட் யங் கின் முதல் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தாலும், கிறிஸ்டோபர் டோயல் ஒளிப்பதிவாளராக பணியாற்ற படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் கடுமையான எதிர்ப்பு கிளம்புகிறது. உள்நாட்டைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட ஒளிப்பதிவாளர்கள் படத்தயாரிப்பு நிறுவனத்தில் பணியில் இருக்க, அயல் தேசத்தவரான கிறிஸ்டோபர் டோயலை எப்படி நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும் என்று தயாரிப்பு நிறுவனம் பிடிவாதம் பிடிக்க, எட்வார்ட் யங் மற்றும் ஸு – பெங் இருவரும் போராடி அந்த வாய்ப்பை கிறிஸ்டோபர் டோயல்-க்கு பெற்றுத் தருகிறார்கள். அந்தப்படம் தான் தைவானின் முதல் புதிய அலை சினிமா என்று விமர்சகர்களால் குறிப்பிடப்படும் ‘That Day, on the Beach’ திரைப்படம்.

அந்தப் படத்திற்காக ஆசிய பசிபிக் பிராந்திய சிறந்த ஒளிப்பதிவாளர் விருது கிறிஸ்டோபர் டோயல்-க்கு கிடைக்கிறது. அதன்பிறகு எட்டு வருடங்கள் கழித்துதான் ‘Days of Being Wild’ படத்தில் வாங் -கர்-வய் உடன் சேர்ந்து பணியாற்றத் தொடங்குகிறார் கிறிஸ்டோபர் டோயல். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் அவ்விருவர்களின் கூட்டில் வெளியான படங்கள் சர்வதேச கவனம் பெற்றன. வாங் -கர்-வய், உலக சினிமாவில் தவிர்க்கவே முடியாத இயக்குநர்களின் வரிசையில் இடம்பெற்றார். அதற்கான பிரதான காரணம் கிறிஸ்டோபர் டோயல்- ன் மரபை மீறிய ஒளிப்பதிவு. அவரது ஒளிப்பதிவு ஹாலிவுட் ஒளிப்பதிவு அழகியலுக்கு எதிரான ஒரு கலகச் செயல்பாடு. பிரதி செய்யவே முடியாத ஓர் கலை சாதனை. 

வாங்-கர்-வய் 1958-ஆம் ஆண்டு ஷாங்காயில் பிறந்தார். சீனாவின் கெடுபிடிகளுக்கு பயந்த அவரது பெற்றோர்கள் ஹாங்காங்குக்கு புலம் பெயர்ந்தனர். ஹாங்காங்கின் உள்ளூர் மொழியான கண்டொனிஸை வாங்-கர்-வய் மற்றும் அவரது அம்மாவால் எளிதாகக் கற்றுக்கொள்ள முடியவில்லை. மொழி இல்லையெனில் மனிதர்களுடான தொடர்புகள் சிக்கலாகிவிடும் இல்லையா? அவர்களின் ஒரே போக்கிடம், புகலிடம் சினிமாதான். நண்பர்கள் அதிகம் இல்லாத வாங்-கர்-வய் அம்மாவுடன் சேர்ந்து அதிகம் சினிமாக்கள் பார்த்தார். “வார்த்தைகளை மீறி நம்மால் சினிமாவை புரிந்துகொள்ள முடியும். நகரும் பிம்பங்களான சினிமாவின் மொழி உலகளாவிய தன்மை கொண்டது’’ என்று சினிமாவுடனான தன்னுடைய அத்யந்த உறவை நினைவு கொள்கிறார் வாங்-கர்-வய். 

வாங்-கர்-வய் கல்லூரிப் படிப்பை முடித்த 1980-களின் துவக்க ஆண்டில்தான் ஹாங்காங் சினிமாவில் புதிய அலை இயக்குநர்கள் தங்களது பயணத்தை துவக்கினார்கள். தனது முதல் படத்தை எடுக்கும் முன் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் வாங்-கர்-வய் திரைக்கதை பங்களிப்பு செய்திருந்தார்.

ஹாங்காங் நகரத்தை பிறப்பிடமாகக் கொண்டிராத, பிழைப்பின் நிமித்தம் புலம்பெயர்ந்த வங்-கர்-வய் மற்றும் கிறிஸ்டோபர் டோயல் இருவரும்தான் ஹாங்க்காங் நகரத்தின் நிலக்கட்சிகளை [Landscape], நகரத்தில் வேர் கொண்டிருந்த பன்முக கலாச்சார வாழ்நிலைகளை பிரதான மையமாக சினிமாவில், குறிப்பாக ஹாங்காங் வணிக சினிமாவுக்கு அப்பால் கலைத்தன்மையோடு வெளிப்படுத்தியவர்கள்.

In The Mood For Love (2000)
Maggie Cheung and Tony Leung
Wong Kar-Wai film

ஆண் உறவின் இடையே நிகழும் அபத்தங்களை, மனம் கொள்ளும் விசித்திரங்களை, உச்சபட்ச நாடகீயத் தருணங்களை கவித்துவமாக காட்சிப்படுத்துபவை வாங் -கர்- வய் படங்கள். அவரது ஹாங்காங் ட்ரையாலஜி படங்கள் மற்றும் ‘in the mood for love’ படங்கள் சிறந்த உதாரணங்கள். திடீரென நிகழும் ஓர் முத்தம், மூர்க்கம் கொள்ளும் இசை, ஒளிச்சிதறலில் அழகியல் ரூபம் பூணும் மனித உடல்கள், அதன் காதல் அசைவுகளின் ஒத்திசைவு என வாங் -கர்- வய் மற்றும் கிறிஸ்டோபர் டோயல் சேர்ந்து உருவாக்கிய காட்சி அழகியல்கள் குறிப்பாக காதல் காட்சி அழகியல்கள் எவராலும் பிரதி செய்ய முடியாதவை. ‘Chunking Express’ ஹாங்காங் நகரத்தின் அழகான ஒரு பக்கத்தை காட்சிப்படுத்தியது எனில் ‘Fallen Angels’ அதன் இன்னொரு கோரமான பக்கத்தை காட்சிப்படுத்தியது என்று கூறலாம். எனினும் ‘Fallen Angels’ படத்தின் ஒரு குறிப்பிட்ட காட்சியை அதன் உன்மத்த அழகியலுக்காக திரும்ப திரும்ப பார்த்திருக்கிறேன். 

அவள் மழையில் நனைந்து கொண்டே நடந்து போகிறாள். அவன் தனது ஜெர்க்கினை கழட்டி அவள் நனையாமல் இருக்கும்படிக்கு தலைக்கு மேலே உயர்த்தி பிடிக்கிறான். அவள் அவனைத் தள்ளி விட்டுவிட்டு மழையில் ஆனந்தமாக நனைகிறாள். அப்படியே அவர்கள் அவளது இருப்பிடத்துக்கு செல்கிறார்கள். முதல் தளத்தில் இருக்கும் அவளது இருப்பிடத்துக்கு அவனை அழைக்கிறாள். அவன் நான் வரவில்லை என்று சொல்ல அவள் அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறாள். “என்னை என்ன முட்டாள் என்று நினைத்துக்கொண்டாயா? எதற்கு என்னைக் காண வந்தாய்? நீ அவளை சந்திக்கக்கூடாது என்று சொன்னேன், ஆனால், எனக்குத் தெரியாமல் நீ அவளை சந்திக்கிறாய்” – என்று சொல்லிக்கொண்டே அவனது கையை கடித்துவிடுகிறாள். அவன் ‘ஏன் இப்படி செய்தாய்?’ என்று வலியில் கேட்க, “நீ என்னை எளிதாக மறந்துவிடுவாய். என்னை நீ மறக்காமல் இருக்க நான் எதாவது நினைவு பரிசு கொடுக்க வேண்டாமா, அதற்காகத்தான் உன்னைக் கடித்தேன். நீ என்னை எளிதாக மறந்துவிடுவாய், ஆனால், என் கடியை மறக்கமாட்டாய். முகத்தில் மச்சம் உள்ள பெண் நான். தெருவில் அப்படி ஒரு பெண்ணைப் பார்த்தால் அது நான்தான். ஆனாலும் என் முகத்தை மிக எளிதாய் நீ மறந்து விடுவாய்.’’ என அழுதுகொண்டே சொல்ல, “இல்லை, நான் உன்னை மறக்கமாட்டேன்’’ என்று அவளை முத்தமிடுகிறான்.

பின்பு விலகிச் சென்று தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறான். “ நான் அவளை மறந்துவிடுவேனா, அது அவ்வளவு முக்கியமில்லை. அவளைப் பொறுத்தவரை அவளின் வாழ்க்கைப் பயணத்தில் நான் ஒரு இடை நிறுத்தப்புள்ளி அவ்வளவே. அவளது பயணத்தில் அவள் சென்று சேர வேண்டிய இடத்தை விரைவில் அடைந்துவிடுவாள். அங்கே அவளை நிஜமாக நேசிக்கும் ஒருவனை அவள் கண்டடைவாள். நாம் எல்லோர்க்கும் ஒரு துணை வேண்டும்.’’ இப்படியாக அந்தக் காட்சி முடிகிறது. 

அப்படி சொல்லிவிட்டு அவன் இன்னுமொரு கொலை சம்பவத்தை நிகழ்த்தப் போகிறான். இசையின் மெருகூட்டப்பட்ட லயத்தைப்போலவே அந்த துப்பாக்கி சண்டை நிகழ்கிறது. அங்கே தனது துப்பாக்கிகளால் முடிந்த மட்டும் பல எதிரிகளை கொல்லவும் செய்கிறான். எதிரிகளின் குறி இந்த முறை தப்பாமல் போகவே அவன் உடலில் குண்டுகள் பாய்ந்து சாய்கிறான். ஒரு கணம் எல்லாமும் அசைவற்று, வெளிறி அவன் இல்லாமல் போகிறான். அப்போது அவன் தனக்குள் சொல்லிக்கொள்வது “ எனது வேலையில் குறிப்பிடத்தக்க ஒரு விஷேசம் என்னவெனில் நாம் எதையும் திட்டமிட்டு முடிவெடுக்க வேண்டியதில்லை. யார் யார் இறக்க வேண்டும், எப்போது, எங்கே இறக்க வேண்டும், எல்லாம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று. நான் ஒரு சோம்பேறி. பிறர் எனக்காக எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து வைப்பதை நான் விரும்புகிறேன். அது கொஞ்சம் வித்தியாசமானதுதான். நான் இந்த பழக்கத்தை மாற்ற விரும்புகிறேன். இது நல்ல முடிவா அல்லது கெட்ட முடிவா என்று எனக்குத் தெரியாது. ஆனால் இது எனது முடிவு.’’ இரண்டு கட்டடங்களுக்கு இடையே மேகங்கள் நகர்ந்து கொண்டிருக்க இறந்துவிட்ட அவன் தனது பழக்கத்தை, சுபாவத்தை மாற்றிக்கொள்வதைப் பற்றி நினைத்துக் கொள்கிறான்.

காதல் என்பது உண்மையில் என்னவென்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். வெறும் நினைவுகள் தானா? உடல் கொள்ளும் நினைவுகளா அல்லது மனம் கொள்ளும் நினைவுகளா? தெரியவில்லை. ஆனால், வாங்-கர்-வய் தனது படங்களில் தொடர்ச்சியாக எழுதி காட்சிப்படுத்தியிருக்கும் காதல் என்பது ஒரு திருமணத்துக்கான ஏற்பாடோ அல்லது காமத்துக்கான பெண் துணை தேடலோ அல்ல. மாறாக காதல் என்பது இரண்டு மனங்களின் தூய ஆன்ம விழைவு என்றுதான் இந்தக்கணம் தோன்றுகிறது. ஆனால், அந்த தூய ஆன்ம விழைவை அடைய கொஞ்சம் கூட தகுதியில்லாத மனிதர்கள் நாமெல்லோரும் என்பது மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். உண்மையைச் சொல்லப்போனால் வாங் -கர்-வய் திரைப்படங்களைப் பார்த்த பிறகு காதல் என்கிற மனிதனின் ஆதி உணர்வைப்பற்றி நான் அறிந்து வைத்திருப்பதெல்லாம் போலியானதோ என்கிற எண்ணம் எனக்கு உறுதிப்பட்டது. சுயநலமும் அழுக்கும் நிறைந்த உணர்வெழுச்சியைத்தான் நான் இதுகாறும் காதல் என்று நம்பிக் கொண்டிருந்தேன். அதன் மீது ஆயிரம் பாறாங்கற்களை உருட்டி எறிந்தவர் வாங் -கர்-வய், மற்றும் அவரது திரைப்படங்கள்.

வாங்-கர்-வய் படங்களின் காட்சி மொழியை கீறல் விழுந்த கனவுத்தன்மையின் எச்சங்கள் என்று சொல்லலாம். அவரது கதாபாத்திரங்கள் கனவுத்தன்மையை அப்பட்டமாக குழந்தைகளின் உடல்மொழியில் பிரதிபலிப்பவர்கள். வாழ்வின் ஒரு நிச்சயமற்ற தன்மையை தன் குணாதிசியங்களாகக் கொண்டிருப்பவர்கள். விசித்திர மனப்போக்கும் ஒழுங்கமைவற்ற குணவியல்புகளும் கொண்டவர்கள். யதார்த்த வாழ்வின் கரடுமுரடுகளுக்கு ஈடு கொடுக்க முடியாதவர்கள். அதனாலேயே சக மனிதர்களை அணுகுவதில் வீரியம் குறைந்தவர்களாக அல்லது நிகழ் வாழ்வின் கணத்தில் தள்ளாடுபவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக அவரது கதாபாத்திரங்கள் தனிமையில் உழல்பவர்களாகவும் காமத்தின் உள்ளார்ந்த ஆன்மிக இருப்பை உணராதவர்களாக அல்லது அவ்விதம் கணிக்கவியலாத தன்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள். கதாபாத்திரங்களின் இந்த குணவியல்பும், மனப்போக்கும் வாங்-கர்-வய் படங்களின் பொதுப்படையான தன்மையாக அவரது எல்லாப் படங்களிலும் வேர்கொண்டுள்ளது.

எடிட்டர் வில்லியம் செங் பிங், கிறிஸ்டோபர் டோயல் இருவரும் ஐந்து படங்களில் சேர்ந்து பணியாற்றினார்கள். எடிட்டர் வில்லியம் செங் பிங் தான் கிறிஸ்டோபர் டோயலை வாங்-கர்-வய் – க்கு அறிமுகப்படுத்தினார். அதற்குப்பிறகான பதினைந்து ஆண்டுகள், ஒன்பது படங்கள், உலக சினிமாவின் மறக்கவியலாத ஒளிப்பதிவாளர் – இயக்குனர் இணையாக கிறிஸ்டோபர் டோயல், வாங்-கர்-வய் இருவரும் அறியப்படுகிறார்கள். படப்பிடிப்புக்கு முன்னால் முறையான எழுதி முடிக்கப்பட்ட திரைக்கதை பிரதி வாங்-கர்-வய் – யிடம் இருக்காது. முந்தைய நாள் இரவு எழுதப்பட்டு அடுத்தநாள் படப்பிடிப்புக்கு திரைக்கதை பிரதியுடன் வருவார் வாங்-கர்-வய். என்றாலும் அவரது படங்கள் ஹாங்காங்குக்கு வெளியே உலகளாவிய கவனம் பெற்றதற்கு முக்கியமான காரணம் கிறிஸ்டோபர் டோயல்- ன் உடனான பரீட்ச்சார்த்தமான படைப்புக்கூட்டு என்பதுதான் உண்மை. உள்ளார்ந்த புரிதலுடன் பரஸ்பரம் பரிமாறிக்கொண்ட படைப்பு மனங்களின் கூட்டு. 

“நாங்கள் படப்பிடிப்பு தளத்தில் என்ன பேசி, புரிந்து பகிர்ந்து கொள்கிறோமோ அதுதான் எங்கள் படத்தில் பிரதிபலிக்கிறது. அது ஒரு வெளிப்படையான புரிந்துணர்வு அல்லது படைப்புக்கூட்டு. எங்கள் தவறுகளை பலவீனங்களை ஒதுக்கி ஒளிப்பதிவு சட்டகத்தில் காலத்தையும் வெளியையும் ஆற்றலுடன் ஒருங்கிணைப்பதே எங்கள் சினிமா உருவாக்க செயல்பாடு.’’ என்று ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார் வாங்-கர்-வய்.

வாங் -கர்-வய், கிறிஸ்டோபர் டோயல் இருவரும் இப்போது பிரிந்துவிட்டார்கள். 2046 படத்திற்குப் பிறகு அவர்கள் சேர்ந்து வேலை செய்யவில்லை. நீங்கள் இருவரும் மீண்டும் இணைய வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு “ வாங் -கர்-வய், எனக்கு கொடுத்தது மிக அதிகம். என் மனைவி அல்லது என் மனதுக்கு பிடித்த பெண்ணுடன் நேரம் செலவிட்டதைவிட வாங் -கர்-வய் -உடன் நான் செலவிட்ட நேரம் அதிகம். என் வாழ்க்கையின் பெரும்பகுதி அவருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். இந்த ஹாங்காங் நகரம் எனக்கு எவ்வளவு கொடுத்திருக்கிறதோ அதே அளவு அவர் எனக்கு கொடுத்திருக்கிறார். நிச்சயமாக நாங்கள் மீண்டும் இணைந்து வேலை செய்வோம். ஒரே ஒரு நிபந்தனைதான். வாங் -கர்-வய் சில மாதங்களில் படப்பிடிப்பை முடிக்கவேண்டும். ஆண்டுக்கணக்கில் எனில் சேர்ந்து வேலை செய்வது கொஞ்சம் கஷ்டமே.’’ என கிறிஸ்டோபர் டோயல் பதில் சொல்லியிருந்தார், கண்ணீருடன்.

#####

முதல் திரைப்படம் எப்படி ஒரு இயக்குநருக்கு மிக முக்கியமானதோ அதைவிடவும் முக்கியமானது ஒரு புனைகதையாளனின் முதல் சிறுகதை தொகுப்பு. அவர்கள் எழுதிக்காட்ட விரும்பும் உலகம் அதில் ஏகதேசம் சொல்லப்பட்டிருக்கும். சமீபத்தில் வாசித்த அப்படியான காத்திரமான முதல் தொகுப்பு சு.வெங்குட்டுவனின் ‘வெறுங்கால் நடை’. 

‘அதிதி தேவோ பவ’ என்றொரு சம்ஸ்கிருத சொல்லாடல் ஒன்றிருக்கிறது. விருந்தினர்களை தெய்வம் போல மதித்து நடத்த வேண்டும் என்பது அதன் உத்தேசமான தமிழ் அர்த்தம் எனலாம். அப்படியான கணவன் மனைவி மற்றுமோர் பெயரறியா குழந்தை ஒன்று என மூன்று உறவினர் அல்லாத விருந்தினர்கள் திடீரென்று வீட்டின் முன்னே வந்து நின்று உங்கள் கழிப்பறையை பயன்படுத்திக்கொள்கிறேன் என்று சொன்னால் நீங்கள் என்ன மாதிரி மனநிலைக்கு ஆளாவீர்கள்? இதைத்தான் “மூன்றாவது ஒன்று’’ என்கிற கதை விவரிக்கிறது.

மத்திம வயதைத் தாண்டியும் திருமணமாகாத கதையின் நாயகன் தறி ஓட்டுபவன். சாயுங்கால [எவ்வளவு அழகானதோர் சொல் இது?] நேரத்தில் வெளியூர் பேருந்துகள் நிற்கவே சாத்தியமில்லாத அந்த சிற்றூரில் நாகர்கோயில் செல்லும் பேருந்தில் இருந்து கணவனும் மனைவியும் உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையும் என மூவரும் அவசரமாக இறங்கி கதை நாயகன் வீட்டை நோக்கிப் போகிறார்கள். கழிப்பறையை பயன்படுத்திக்கொள்ளலாமா என்று தாய்க்கிழவியிடம் கெஞ்சிக் கொண்டிருக்க அவள் அவர்களை கடும் மொழி பேசி விரட்டிக் கொண்டிருக்கிறாள். கதை நாயகன் வீட்டிற்கு சென்று தாய்க்கிழவியை ஒரு ஆணாதிக்க அதட்டு அதட்டி அடங்கச் செய்து அந்தப் பெண்ணை கழிப்பறையை பயன்படுத்திக்கொள்ள சொல்கிறான். பின்னர் அவர்கள் சென்ற பின் அந்நியர் பயன்படுத்திய கழிப்பறையின் நிலைமை எப்படி இருக்கிறதென பார்க்கிறான். சிறுநீரோ அல்லது மலம் கழித்தலோ என எதுவும் நிகழாமல் கழிப்பறை பயன்படுத்தப்படாமல் அப்படியே இருக்கிறது. எனில் அவரகள் எதற்காக வந்தார்கள்? அந்தப் பெண்ணின் ஒன்றும் இரண்டும் இல்லாத அந்த மூன்றாவது ஒன்று எது? பெண்களுக்கு நேரும் மாதாந்திர அவஸ்தையா? இருக்கலாம். மனிதர்கள் திட்டமிடல் என்ற ஒன்று இருக்கிறது, அதற்கும் அப்பால் பிரபஞ்ச திட்டமிடல் என்ற ஒன்றும் இருக்கிறது. நம் புரிதலுக்கு அப்பால் இருக்கும் அந்த பிரபஞ்ச திட்டமிடல்தான் அந்தப்பெண்ணின் மாதவிடாய் அவஸ்தையையும் அதனூடே அவர்கள் சந்திப்பையும் நிகழ்த்தியிருக்கிறது என்று நான் புரிந்துகொள்கிறேன். 

இவ்வளவு தட்டையாக அந்தக் கதையின் சுருக்கத்தை சொல்கிறேனல்லவா, ஆனால், அந்தக் கதை அவ்வளவு தட்டையானதல்ல. சக மனிதர்கள் பற்றிய கூருணர்வும் வாழ்க்கை/மனிதர்கள்/இருப்பு பற்றிய நுட்பமான விசாலப் பேருணர்வும் கொண்ட கதைசொல்லி ஒருவரின் அசலான துக்க உணர்வு உள்ளும் புறமும் அலையடிக்கும் கதை இது.

வெறுங்கால் நடை – சு.வெங்குட்டுவன்        

கதை நிகழும் மேலோட்டமான களம் ஒன்று. சூட்சம தளத்தில் கதை நிகழும் அல்லது தன்னை நிகழ்த்திக்கொள்ளும் களம் வேறு ஒன்று. கதையின் சொல்முறையில் இந்த வேறுபாட்டை ஒரு எளிய, அதிக உணர்ச்சி வெளிப்பாட்டைக் கொண்டிராத இலகுவான மொழியில் சொல்லிப்போகிறார் வெங்குட்டுவன். பிரத்தியட்ச வாழ்வில் ஒரு ஆண் ஒரு பெண்ணிமீது உடல்ரீதியிலான் வன்முறையை உபயோகிக்கிறான். ஒரு பெண் சக பெண்ணின் மீது உளவியல் ரீதியிலான வன்முறையை உபயோகிக்கிறாள். இந்த இரண்டுக்கும் இடையிலான மெல்லிய எல்லைக்கோட்டை சமன் செய்தவாறே பயணிக்கிறது இந்தக் கதை. 

தொகுப்பின் இன்னொரு முக்கியமான கதை குடிகிணறு. [ஆழ்துளை கிணறுகள் வந்தபின் மதிப்பிழந்துபோன போன பொதுக்கிணறு இந்தக் கதையில் காலத்தின் அடி ஆழத்தில் ஒரு படிமம் போல உறைந்து கிடக்கிறது]. ஆறு பெண்கள், ஒரு ஆண், மூன்று ஏக்கர் தோட்டம் மற்றும் முப்பது செம்மறியாடுகள் என அப்பச்சியின் உலகம் கச்சிதமானது. தன் உலகத்தை தன் வாழ்வை தனக்குக் கிடைத்தவற்றை கொண்டு அக மகிழ்ச்சியோடும் நிறைவோடும் வாழ்ந்து முடிந்துபோன கணக்கற்ற அப்பச்சிகளின் உருவமாக இந்தக்கதையின் அப்பச்சி இருக்கிறார். தலைமுறைகள் கடந்தும் நீளும் மனித ஆளுமை கொண்டவர் அவர். 

யாருடனும் அதிகம் பேசாமல் தானுண்டு தன் விவசாய வேலைகளுண்டு என வாழ்ந்து வரும் அப்பச்சி சாயுங்காகாலத்தில் வீட்டின் முன்னே கயிற்றுக்கட்டிலில் காற்றாட மௌனமாக அமர்ந்திருக்கும் சித்திரமே இன்னும் வாசகனாக எனக்குள் அலையடித்துக் கொண்டிருக்கிறது. அப்புச்சி மரணத்துக்காக காத்திருக்கும் வேளையில் அவர் வீட்டில் வளர்ந்த பேரன் அவரது வாழ்வை மீள் நினைவு கொள்கிறான். அடுத்த தலைமுறை படிப்பின் நிமித்தமோ அல்லது வேலையின் நிமித்தமோ அல்லது வாழ்வின் வசதி வாய்ப்புகளின் நிமித்தமோ ஊரைவிட்டு போய்விடுகையில் மண்ணை இறுக்கப் பற்றிக்கொண்டு தான் வாழ்ந்த மண்ணில் சாக வேண்டும் என்கிற அப்புச்சியின் பிடிவாதம், குடியானவர்களின் அசலான வாழ்வை அதன் மீதான பிடிப்பை கட்டியங்கூறுவது.

எந்தவொரு கதையிலும் வசித்து முடித்த பின்னர் அதன் பிரதான ஆதார மையம் என்னவென்று பார்ப்பது வழக்கம். அசோகமித்திரன், வைக்கம் முஹம்மது பஷீர் கதைகளை தொடர்ச்சியாக வாசித்த பின்னர் ஏற்பட்ட பழக்கம் இது. கண்ணுக்குப் புலப்படாமல் வாசிக்கும் அறிவுக்கும் புலப்படாமல் கதையின் ஆதார உணர்ச்சியை ஒரு தூண்டில் முள்ளைப்போல ஒரு கண்ணிவெடியின் கவனத்துடன் புதைத்து வைக்கும் மேதைகள் அவர்கள். குடி கிணறு கதையை படித்து முடித்தபின் அந்தக் கதையின் மையம் என்னவென்று யோசித்தவாறு இருந்தேன். அப்பச்சிக்கும் பேரனுக்கும் இடையே நிகழும் உரையாடல்தான் இந்தக் கதையின் மையம் என்றறிந்தேன். அதை அப்படியே உங்களுக்கு வாசிக்கக் கொடுக்கிறேன்.

“உனக்கு ஒண்ணு தெரியுமா கோபி..?’’

“என்ன அப்பிச்சி..’’ 

“மனுஷன் அப்பன் ஆத்தா அன்னான் தங்கச்சி பொண்டாட்டி பிள்ளை மாமன் மச்சான்னு உறவுகளைப் பெருக்கினபடி போயிட்டேயிருக்கானே.. ஏந்தெரியுமா..?’’

“சொல்லுங்க அப்பிச்சி..’’ 

“தான் ஒரு அனாதைங்கிற உண்மையை உணரத்தாண்டா..’’

இந்த வரிகளை படித்து முடித்தபின் எனக்குள் இந்த வாழ்வின் நிமித்தமும் வாழ்தலின் நிமித்தமுமான ஆழ்ந்த கசப்பும் வெறுமையும் தனிமையுணர்ச்சியும் பெருக்கெடுத்தன. வயது கூடக் கூட ஒரு மனிதன் தன் இருப்பின் முக்கியத்துவத்தை இழந்துவிடும் அவலத்தை சொல்லும் கதை இது.

தொகுப்பில் எனக்குப் பிடித்த முக்கியமான இரு கதைகள் தலைப்புக் கதையான ‘வெறுங்கால் நடை’யும் ‘ஜரிகை’யும். ‘ஜரிகை’ கதை மனித மனங்களின் பிறர் அறியா இருண்ட மூலைகளில் காமம் நிகழ்த்தும் அலகிலா முதிர் விளையாட்டைப் பேசுகிறது எனில் ‘வெறுங்கால் நடை’ மனப்பிறழ்வின் உதிர் நடனங்களை பாசாங்கின்றி சொல்கிறது. வாழ்க்கை கொள்ளும் வினோதம், அதன் வழியே கசியும் மனித மனங்கள், உதிர்தலும் காய்த்தலுமாக சுபாவங்களைப் பெருக்கிக்கொண்டேயிருக்கும் மனிதர்கள், இயல்பின் வழி கெட்டுப்போன மனிதர்கள் அல்லது வழி தப்பிப்போன போன மனிதர்கள் இந்த தொகுப்பெங்கும் விரவிக் கிடக்கிறார்கள். அவர்களை நல்லவர்கள் கெட்டவர்கள் என்ற சாயம் பூசாமல் சற்று விலகி நின்று ஒருவித சமநிலையுடன் எழுதப்பட்ட கதைகள் இவை. ‘எருமை நாயகம்’, ‘கடன் மீண்டார் நெஞ்சம்’, ‘ஈஷாபதேசம்’ என வாசிப்பின்பம் அளிக்கக்கூடிய கதைகள் நிறைய உண்டு இத்தொகுப்பில்.

மனித வாழ்வு எவ்வளவு முக்கியமோ அதே அவ்வளவு முக்கியம் கொண்டவை அந்த வாழ்விலிருந்து பெருகும் கதைகள். தொகுப்பை வாசித்த பின்னர் எனக்குத் தோன்றியது இந்த எண்ணம்தான். வாசிக்கப் பரிந்துரைக்கும் முக்கியமான தொகுப்புகளில் சு.வெங்குட்டுவனின் ‘வெறுங்கால் நடை’யும் ஒன்று.

வெறுங்கால் நடை – சு வெங்குட்டுவன், [சிறுகதைகள்], மணல்வீடு வெளியீடு.    

தொடரும்…

printpatharasam@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button