1. அதீதங்களுக்கு சமயங்களில்
நீடித்த பித்தின் சாயலேறி விடுகிறது
அதில் நூறாண்டுகளாய் புதைந்து கிடந்த
சுண்டக்கஞ்சியின் நெடி
அப்பைத்தியத்தின் ருசியை
புறங்கையில் வழியும் வரை
அள்ளிப்பருகத் துடிக்கும்
ஒருத்தியைத் தெரியுமெனக்கு
அவளுடலெல்லாம்
கசிகிறது பழங்கால போதையொன்று
2. எப்போதும்
அதீதங்களோடே புழங்கி வருபவளுக்கு
எதைப் பற்றிய கவலைகளும்
இருப்பதில்லை
எதன் மீதும் பற்றிருப்பதில்லை
மற்றவர்கள் தான்
சடங்கான குழந்தையொருத்தி
குருதியைக் கண்டு அஞ்சுவது போல
அவளைக் கண்டு ஒதுங்குகின்றனர்.
அதிலும் அதீதத்தையே தேடும் அவளை
என்னதான் செய்ய முடியும்
உங்கள் அலட்சியங்களால்?
3. மண்புழுவைப் பார்த்ததைக் கூட
மலைப்பாம்பென
விழி விரித்து கையகற்றிக் கதை
சொல்லும் அவளுக்கு
குழம்பு ருசியெனக் கூட
அழகேறிய முகச்சுளிப்போடே
அபிநயம் பிடிக்கத் தெரிகிறது
பின்பொரு நாளில்
இவள் காதலைத் தான்
நாடகம் எனக் கூறி
பிரிந்து சென்றான்
துரதிர்ஷ்டசாலி யொருவன்.