
தன் ஒரே மகன் ராஜாவை பெரிதும் நம்பியிருந்தார் சண்முகம். ராஜா பிறக்கும் போது அவருக்கு வயது இருபது இருக்கும். மனைவி சகுந்தலாவுக்கு பதினேழு இருக்கலாம். அவர்களது திருமண வயது பழமைவாதமாக இருந்தாலும், வாழ்க்கையை சற்று முற்போக்காக அமைத்துக்கொண்டார்கள். அரசாங்கமே இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி கொடுத்த போது சண்முகம்- சகுந்தலா இணை ஒன்றே நன்று என முடிவெடுத்தார்கள்.
ஊரில் பத்து அல்லது இருபது பொறியியல் பட்டதாரிகள் இருந்த காலத்திலேயே பொறியியல் படித்ததால் சண்முகம் இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கும் போதே அரசாங்கம் கூப்பிட்டு வேலை கொடுத்தது. வேலை கிடைத்த போது ராஜாவுக்கு வயது இரண்டு இருக்கும். இறக்கும் தருவாய் பாட்டியைக் காரணம் காட்டி சண்முகத்திற்கு, பத்தாம் வகுப்பு அரையாண்டு மாணவி சகுந்தலாவை மணமுடித்து வைத்தார்கள். துரதிஷ்டவசமாக ராஜா எட்டாம் வகுப்பு படிக்கும்போது தான் உண்மையாகவே இறந்தார் பாட்டி. சகுந்தலா சண்முகத்திடம் அடிக்கடி புலம்புவதுண்டு, “உங்களுக்கு கல்யாணம் செய்ய ஒரு காரணம் இருந்துச்சு. எனக்கு மாப்ள என்ஜினியர்ங்குறத தவிர வேற காரணமே இல்லையே!”
சண்முகத்தின் ஒரே நோக்கம் மகனை நன்கு படிக்க வைக்க வேண்டும் என நினைத்தார். அவர் நினைத்தது போலவே அவனும் நன்றாகவே படித்தான். சண்முகத்தின் அண்ணன் மகள் ஒரு மருத்துவர் என்பதால் தன் மகனையும் மருத்துவராக்கி விட ஆர்வம் கொண்டார். ராஜா சிறப்பாக தேர்வு எழுதினாலும் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்க புள்ளி நான்கு மதிப்பெண்கள் குறைவாக இருந்தது. எனினும் சண்முகம் விடவில்லை என்ஜினியர் மகன் டாக்டர்ன்னு சொன்னால் தான் நல்லாருக்கும் என்பதால் அதுவரை அரசுத் துறையில் சேர்ந்து வைத்த பணம் அனைத்தையும் ராஜாவின் மருத்துவ படிப்பில் போட்டார்.
ராஜாவும் நன்கு படித்து எல்லா தேர்விலும் முதல்நிலை மதிப்பெண் பெற்றான். முதுநிலை படிப்பு படித்து கொண்டிருக்கும் போதே உடன் படித்த மாணவி மீது காதல் வந்தது. சகுந்தலா குதித்தாலும் சண்முகம் சற்று முற்போக்காக சிந்தித்தார். மாணவி பெரிய தொழிலதிபரின் ஒரே மகள். வேறு என்ன வேண்டும் என யோசித்தார்? பெண் வீட்டாரின் சம்மதம் ஏற்கனவே கிடைத்து விட ஒருநாளில் திருமணமும் முடிந்தது.
பெண் வீட்டார் ஒரே ஒரு கோரிக்கை முன் வைத்தார்கள். அதாவது பெண்ணையும், மாப்பிள்ளையும் ஒரு பத்து ஆண்டுகளுக்கு தனியாக வைக்க வேண்டும். புதிதாய் கட்டி கொடுக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையை சிறப்பாக நடத்த அது உதவியாக இருக்கும் என்றார்கள். அதற்கு சண்முகம் முதலில் யோசித்தார். ஒரு பெரும் தொகை வரதட்சணையாக மாறியது. சண்முகம் எதுவும் யோசிக்கவில்லை. அவ்வப்போது யோசிப்பார், மகனை விற்று விட்டோமே என்று.
மகன் வீட்டுக்கு வருவதில்லை என ஆரம்பத்தில் சண்முகம் வருத்தப்படும் போதெல்லாம் வங்கி கணக்கு இருப்பில் இருக்கும் ஒரு பெரும் தொகையை எண்ணி நிம்மதியடைந்து கொள்வார். கல்யாணமாகி ஆறு மாதத்தில் சகுந்தலாவுக்கு கர்ப்பப்பை நீக்கும் சிகிச்சை நடந்தது. அதை மருமகளே முன்னின்று செய்தது சண்முகத்திற்கு கூடுதல் பெருமையாக இருந்தது.
முழுதாக ஒரு வருடம் ஓடியிருக்கும். சண்முகத்திற்கு இனி உழைக்க வேண்டிய அவசியம் இல்லாததால் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு முழுக்க குளிரூட்டப்பட்ட அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அந்த உல்லாசவாழ்க்கைக்கு தன்னை உட்படுத்திக்கொண்ட போதுதான் யாரோ கதவைத் தட்டிய சப்தம் கேட்டது. விலையுர்ந்த அழைப்பு மணி மாட்டியிருக்கும் போது எந்த முட்டாள் கதவைத் தட்டுவது என கோபம் கொண்டார். சென்ற வாரம் ஐரோப்பிய சுற்றுலா முடித்துக்கொண்டு வந்த சண்முகத்திற்கு இப்போதெல்லாம் இந்திய கலாச்சாரம் கொஞ்சம் கூட பிடிப்பதில்லை. அந்த கடுப்புடன் கதவை திறந்தார். வெளியில் சம்பந்தி நின்றுந்தார், கூடவே மருமகள். இருவர் முகத்திலும் நிச்சயமாக மகிழ்ச்சி இல்லை.
சம்பந்தி சண்முகத்தை பார்த்தார். எப்போதும் லுங்கியுடன் காட்சியளிக்கும் மனிதர் அன்று பூப்போட்ட கடற்கரை கால்சட்டையில் இருந்தார். வாஞ்சையாக வரவேற்ற சண்முகத்தை அவர் சட்டை செய்யவே இல்லை. சம்பந்தி வீட்டை நோட்டமிட்டுக்கொண்டே இருந்தார். வீட்டில் இருந்த டீவி, கைபேசி, சண்முகம் என எல்லாமே ஒன்றுக்கு மூன்று சுற்று பெருத்திருந்தார்கள்.
“என்ன சம்பந்தி மாறியா இருக்கீங்க?” என ஆரம்பித்தார் சண்முகம்.
“எப்படிங்க சாதாரணமா இருக்க முடியும்? உங்க பையன் செஞ்ச வேலைக்கு?” என்றதும் மருமகள் அடக்கி வைத்திருந்த அழுகையைக் கொட்டித் தீர்த்தாள்.
“ஒன்னும் புரியலயே! கொஞ்ச புரியுற மாதிரி சொன்னா நல்லாருக்கும்!”
“என்னங்க சொல்றது? உங்க பையன் ஆஸ்பத்திரில ரிசப்ஷன் பொண்ணு கூட ஓடிப்போய் குடும்பம் நடத்துறது உங்களுக்குத் தெரியாதா?”
சண்முகத்தின் நெஞ்சுக்குள் பொட்டு வெடிகள் வெடித்தது. கடந்த பதிமூன்று மாதங்களாக வியர்வை அறியாத அவரது நெற்றியில் ஈரப்பசை சுரந்தது.
“அய்யோ சம்பந்தி, ஏ புள்ள அப்படி செய்யிற ஆள் இல்ல!” என்ற சண்முகத்திற்கு கூடுதலாக பேச வாய்ப்பளிக்காமல் மகளிடம் இருந்த கையடக்க கணினியில் இருந்த புகைப்படங்களை, படங்களாக ஓடவிட்டார். எல்லா படங்களும் பகிரங்கமான முறையில் சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தது. சண்முகத்திற்கு கை கால்கள் அதிர்வைக் கொடுத்தது. தன் மகன் எல்லா ஆடம்பரத்தை விட்டு ஓடும் அளவிற்கு தான் அந்த வரவேற்பு பெண் இருந்தாள் என்றாலும் அந்த அபிப்பிராயத்தை வெளியில் சொல்லவில்லை.
“நானே இவங்களை தனிக்குடித்தனம் வச்சனாலதான் மரியாதையா உங்களை தேடி வந்து பேசிட்டு போறேன். இல்லேன்னா நா பேசுற இடமும், நீங்க நிக்கிற இடமும் வேற வேறயா இருந்திருக்கும்!” இதுநாள்வரை சம்பந்தி என்ற வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாத குணச்சித்திர வேடமணிந்தவர் சடுதியில் வில்லனாக மாறியது சண்முகத்திற்கு அப்படி ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஏற்கனவே இவரைப் பற்றி தெரியும் என்றாலும் அது தன் விஷயத்தில் நிகழ வாய்ப்புண்டு என நினைத்தார்.
“உங்களுக்கு ரெண்டு வாரம் டைம் குடுக்குறேன். அதுக்குள்ள உங்க பையனை சரி பண்ணி கூட்டிட்டு வாங்க. அந்த எச்சக்கல நாய் செஞ்ச வேலைக்கு நானே வெட்டி பொலி போட ரொம்ப நேரமாகாது. என்னோட மகளுக்காகத்தான் பொறுமையா இருக்கேன். அந்த நாய்ங்க இருக்குற விலாசத்தை இவருக்கிட்ட குடு!” என்றார் அவர்.
மருமகள் ஒரு சிறிய சிட்டையை நீட்டினாள். நீட்டியதை வாங்கவே சண்முகத்திற்கு நேரம் பிடித்தது. ஒருவழியாக வாங்கிப் படித்தார். வாயில் நுழையாத பெயர்கள் தெருவுக்கு வைத்திருந்தார்கள். கூடவே காதில் கேள்விப்பட்ட மாநிலம் படிப்பதற்கு அந்நியமாக இருந்தது. அது பெங்களூர்.
“உங்களுக்கு ரெண்டு வாரம்தான் டைம். முழுக்க முழுக்க இந்த கல்யாணம் என்னோட விருப்பத்துல நடந்ததால ஜாதி கூட பாக்கல. இப்பதான் தெரியுது ஒரே ஜாதியா இருந்துருந்தா உங்க புள்ளைக்கு கொஞ்சமாவது தராதரம் தெருஞ்சிருக்கும். இல்லேன்னா எட்டாயிரம் ரூபாய்க்கு சம்பளத்துக்கு இருந்த ஒரு பெங்களூர்காரி கூட இப்படி அல்ப்பதனமா ஓடிருக்க மாட்டான்!”
சண்முகத்திற்கு அவரிடம் கேட்க நிறைய கேள்விகள் இருந்தது. அதை கேட்டால் பேச்சுக்கலப்பு எந்த நேரத்திலும் கைகலப்புக்கு மாறும் அபாயம் உள்ளது என்பதை அவரது பொறியியல் மூளை சொன்னது. எனினும், “உங்க பொண்ணு ஒழுங்கா இருந்தா அவன் ஏன் ஓடிபோறான்!” என கேட்கப் பிரயாசை இருந்தாலும் தொழிலதிபர் சட்டையில் இரண்டு பொத்தானை பொருத்தாதது, கையை முஷ்டிக்கு மேலாக மடித்து விட்டிருந்தது சண்முகத்திற்கு தவறான சமிக்ஞையாக தெரிந்தது.
அவர்கள் முறையாக விடைபெற்று போகவில்லை. சொல்ல வந்த விஷயத்தை சொல்லி விட்டு சென்றார்கள்.
மனைவி சகுந்தலா வெளியில் வந்து கேட்டாள், “யாரோ கதவை தட்ற மாதிரி இருந்துச்சு. வெளியவந்து பாத்தா நீங்க உட்காந்துருக்கீங்க!”
சண்முகம் சகுந்தலாவிடம் ஏதும் சொல்ல விரும்பவில்லை. காரணம் அவளும் பயந்து தன்னை இன்னும் பீதிக்கு உள்ளாக்குவாள் எனும் பயமே. பிரச்சினை இன்னும் முத்தினால் மட்டுமே அவளிடம் கூறிக்கொள்ளலாம் என்ற முடிவுடன் பெங்களூருக்கு ரயில் ஏறினார். எனினும் வீட்டை விட்டு கிளம்பும்போது மனஆறுதலுக்கு சகுந்தலத்திடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டுதான் கிளம்பினார். சில ரகசிய பயணங்களுக்கு சொந்த வாகனத்தை விட பொதுப் போக்குவரத்து தான் மிகுந்த பாதுகாப்பானது, ரகசியமானது என நம்பினார்.
பெங்களூரின் அதிகாலை குளிர் இதமாக இருந்தது. பெங்களூர் எல்லை நெருங்கும்போது போட்டிருந்த குளிர் தடுப்பு பருத்தி ஆடைகளை அவசரமாக கழற்றி பைக்குள் திணித்துக்கொண்டார். சண்முகம் பெங்களூர் வருவது இரண்டாவது முறை. துறையில் இருந்த போது ஒரு விழாவிற்கு வந்திருக்கிறார். எதையும் பிரதி எடுத்து வைக்கும் பழக்கம் கொள்ளும் வழக்கமுள்ள சண்முகம் மருமகள் கொடுத்த முகவரியையும் ஒரு நான்கு பிரதி எடுத்து வீட்டில் ஒன்றும் இங்கு இரண்டும் எடுத்து வந்தார்.
மினர்வாசர்க்கில் அருகே ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பு தான் மகன் தங்கியிருக்கும் இடம். அது ஒரு பெரிய குடியிருப்பு என்பதால் கண்டுபிடிப்பது பெரிய வேலையாக இல்லை. உள்ளூர் போல இல்லாமல் மிகுந்த திடகாத்திரமான மனிதர் வாட்ச்மேனாக இருந்தார். தமிழ் நன்றாக பேசினான். தன் மகனின் பெயரை சொன்னதும் யோசித்தவன், மகன் இழுத்து வந்த பெண்ணின் கணவனா என்று திருப்பி சண்முகத்திடம் கேட்டது செருப்பால் அடித்தது பொல இருந்தது. எங்கு திரும்ப வேண்டும், வீடு எந்த திசையில் இருக்கிறது, அங்க அடையாளம் உட்பட அனைத்தையும் பாடம் போல் ஒப்பித்தான். அவன் பேசி முடிக்கும் வரை சண்முகத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
பார்க்கும் போதே தெரிந்தது, இந்த குடியிருப்பு, மேல்தட்டு மக்களால் மட்டுமே தங்க இயலும் என்று. காவலாளி சொன்ன அறிவுரைபடி வந்து மகனின் புது வீட்டை அடைந்தார். காலிங் பெல் இருக்கும் போது கதவை தட்ட வேண்டும் போல இருந்த போதுதான் சம்பந்தியின் மனநிலையை சண்முகத்தால் புரிந்துகொள்ள முடிந்தது. அழைப்பு மணியை அழுத்தினார்.
ராஜாதான் கதவை திறந்தான். இடுப்பில் துண்டு கட்டியிருந்தான். மிக தவறான நேரத்தில் வந்துவிட்டோமே என நினைத்தாலும் விஷயம் அந்த நாகரீகத்தையெல்லாம் சீர்தூக்கி பார்க்கும் நிலையில் இல்லை. மொழி, மாநிலம் தாண்டி வந்த அப்பாவைப் பார்த்து அதிர்ச்சியாவன் என நினைத்தார். ஆனால் அவனோ வழக்கமாக நேரத்தில் வரும் வேலைக்காரிக்கு கதவை திறந்தது போலவே வெகு சாதாரணமாக இருந்தான்.
“ஏன்டா உன்ன அப்படியா வளத்தேன்? என்ன காரியம் பண்ணிட்டு வந்துருக்க தெரியுமா?” என பொங்கி வந்த உணர்ச்சிக்கு ஒரே நேரத்தில் ஒரு லட்சம் வார்த்தை கேட்க நினைத்தவரால் இப்படித்தான் பேச முடிந்தது.
ராஜா அந்த இயல்பில் இருந்து மீள்வதாக தெரியவில்லை. அறுவை சிகிச்சை கத்தி பிடித்த கை அடுத்தவன் கழுத்தை அறுக்கவும் நடுங்காமல் இருக்கிறதே என வித்தியாசமான பேச நினைத்துவிட்டு அமைதியாக இருந்தார்.
“எப்படிப்பா இருக்கீங்க? அம்மா எப்படி இருக்காங்க? சொல்லிட்டு வரத்தான் நினைச்சேன். சூழ்நிலை சரியில்ல. அதான் அவசரமா வரவேண்டியதா போச்சு! என்னப்பா சாப்பிடுறீங்க?”
சண்முகத்திற்கு எழுந்து போய் மகனை அறைந்து விட்டு, “டீ போதும்ப்பா!” என சொல்லவேண்டும் போல இருந்தது.
“என்னப்பா எதுவுமே பேச மாட்றீங்க? அவங்க சைட்ல இருந்து உங்களை எதுவும் டார்ச்சர் பண்றாங்களா? சொல்லுங்கப்பா?”
சண்முகத்திற்கு எப்படி ஆரம்பிப்பது என தெரியவில்லை. “பொண்ண பெத்தவங்க சும்மாவாப்பா இருப்பாங்க. சம்பந்தி வந்து வருத்தப்பட்டுட்டு போனாரு! என்ன இருந்தாலும் நீ பண்ணது தப்புப்பா. மஹா பாவம். வாயும் வயிறுமா இருக்குற பொண்டாட்டிய வச்சிட்டு இப்படி செய்யிறது சரியே இல்லப்பா!”
“உங்களுக்கு தெரியாதுப்பா, அவ என்னய ரொம்ப அடக்க நினைக்கிறா! ஹாஸ்பிட்டல்ல அவ வைக்கிறது தான் சட்டம். என்னய வார்டு பாய் கூட மதிக்கிறதில்லை. ஒரு வருஷம் பல்ல கடிச்சிட்டு இருந்துட்டேன். இனி இருக்க முடியாதுன்னுதான் கிளம்பி வந்துட்டேன்!” என லேசாய் முகம் மாறியது ராஜாவுக்கு!
“சரிப்பா, இவ்வளவு நடந்திருக்கு என்கிட்ட எதுவும் சொல்லவே இல்லயே நீ. பொண்டாட்டி கூட சண்ட போட்டவன் தனியா வராமா கூட ஒரு பொண்ண கூட்டிட்டு வர்றது என்னப்பா நியாயம்? உங்க அம்மா கூட சண்ட போட்டுட்டு நானும் வெளிய போயிருக்கேன். ஆனா இந்த மாதிரி இல்லயே. தனியாத்தான் போயிருக்கேன். அசிங்கமா இருக்குப்பா!”
ராஜா தலையை குனிந்து கொண்டான். தான் பேசியது மகன் மனதை தொட்டிருக்க வேண்டும் என கர்வம் கொண்டார். மீண்டும் மெதுவாக ஆரம்பித்தார்.
“நீ மொதல்ல அந்த பிள்ளைய அவங்க வீட்ல விட்டுட்டு நீ கிளம்பிவா. மத்த விஷயத்தை வீட்ல பேசிக்கலாம்!”
“முடியாதுப்பா!” உறுதியாக சொன்னான் ராஜா.
“முடியாதுன்னா எனக்கு புரியல. நா கேக்குறதுக்கு நீ பதிலை சொல்லு. இந்த புள்ளைய உனக்கு எத்தனை நாள் தெரியும்!”
“தெரியும்ப்பா, உங்களுக்கு எதுக்கு அதெல்லாம்?”
“முடியாது, நீ சொல்லியே ஆகணும்!”
“ரெண்டு வருஷமா தெரியும்!”
சண்முகத்திற்கு எங்கோ உதைத்தது. “உனக்கு கல்யாணமாகியே ஒரு வருஷம் முடியல. ஆனா இந்த பொண்ண அதுக்கு முன்னாலேயே தெரியும்ன்னு சொல்ற. அப்ப கல்யாணத்துக்கு முன்னாடியே உனக்கும் இந்த பெண்ணுக்கும்….!”
ராஜா தன் அப்பா அவதூறு சொல்வது போல, “நிறுத்துங்கப்பா!” என்றான்.
“நீ சொன்ன விஷயத்துக்கு நான் கேட்ட கேள்வி ஒன்னும் தப்பில்லையே?”
“தப்புதாப்பா, அப்ப ஃப்ரெண்டு! இப்ப…!”
“இப்ப?”
“இப்பவும் ஃப்ரெண்டுதான்!”
“அப்ப ஃப்ரெண்ட கொண்டு வீட்ல உட்டுட்டு வா வீட்டுக்கு போகலாம்!”
“இல்லப்பா, நாங்க இப்படியே இருந்துறோம். மேரேஜ் பண்ற ஐடியா வந்தா கண்டிப்பா பண்ணிப்போம். எங்களை டிஸ்டார்ப் பண்ணாதீங்க!”
சண்முகத்திற்கு இது போன்ற குடும்ப சிக்கல்கள் கேள்விப்படாத ஒன்று என்பதால் அடுத்து என்ன பேசுவது என்ற யோசனையில் இருந்தார்.
“அப்பா நீங்க என்னய கஷ்டப்பட்டு படிக்க வச்சிங்க. கண்டிப்பா அத மறக்க மாட்டேன். ஆனா அவ கூட வாழ எனக்கு விருப்பமே இல்ல. சில நேரம் ஆம்பள மாதிரி நடந்துக்கிறா! அங்க நான் புருஷனா, அவ புருஷனான்னே தெரியல!”
“ஏம்பா, இதெல்லாம் ஒரு பிரச்சினையா, கோவம் வந்தா எல்லா பொண்ணுங்களும் கொஞ்ச அப்படி இப்படி இருக்குறது சகஜம். டாக்டர் நீ உனக்கு நா சொல்ல என்ன இருக்கு!”
“அப்பா, உங்களுக்கு நான் சொல்றது புரியல. அவ கோவமா இருந்தாலும் சந்தோஷமா இருந்தாலும் ஆம்பள மாதிரிதான் நடந்துகிறா? இன்னும் உங்களுக்கு அழுத்தி சொல்றதா இருந்தா, சந்தோஷமா இருக்கும் போது கூட அவ ஆம்பள மாதிரி வித்தியாசமா நடந்துக்கிறா! புரியுதா?” ராஜா சற்று அழுத்தி கூறியது சண்முகத்திற்கு அரைகுறையாய் புரிந்தது.
“அப்பா, நீங்களே சொல்லுங்க. தப்பு பண்ற ஐடியாவுல இருந்தா இப்படி அட்ரஸ் சொல்லிட்டு இங்க வந்துருப்பனா?” அப்போது தான் அந்தப்பெண் குடிப்பதற்கு காபி கொண்டு வந்தாள். சண்முகத்திற்கு அந்த பெண்ணின் முகத்தை பார்க்க கூட உடன்பாடு இல்லை.
“அப்பா, நான் ஒரு டாக்டர். அவங்களுக்கு என்ன பதில் சொல்லணும்ன்னு எனக்கு தெரியும். செட்டில்மெண்ட் கூட நானே பாத்துகிறேன். உங்களுக்கு எந்த தொந்தரவும் வராது!” சண்முகத்திற்கு மகனின் இந்த கடைசி வார்த்தை கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. அது வெளிப்படையாக முகத்திலும் எதிரொலித்தது. அதுவரை இருக்கையின் ஓரமாக உட்காந்திருந்த அவர் சற்று சவுகரியமாக சாய்ந்து கொண்டார்.
“அப்பா நீங்க ரொம்ப டயர்டா இருப்பீங்க. போய் குளிச்சிட்டு வாங்க. சாப்பிடலாம். ஷப்னம் அப்பாவுக்கு டவல், ட்ரெஸ் எடுத்து குடு!” என்ற போது தான் அந்த பெண்ணை பார்த்தார்.
“வாங்க அங்கிள்!” என்ற பெண்ணை மீண்டும் ஒருமுறை பார்த்தார். மொழி தெரியாத படத்தை தமிழில் மொழிபெயர்த்தது போல இருக்கிறதே என நினைத்துக்கொண்டார். கல்லூரி காலங்களில் கவிதை மாதிரி எழுதியது தற்போது பயனளிப்பததாக நினைத்துக்கொண்டார்.
குளித்துக் கொண்டிருக்கும் போது தன்னை தானே நொந்து கொண்டார். “என்ன இருந்தாலும் அந்த பொண்ணு மருமக மாதிரி, நம்மளே ஒரு மாதிரியா பாக்குறது நல்லாவா இருக்கும்?” என்றாலும் குளித்து முடித்து விட்டு அந்த பெண் உடை மாற்றும் அறையை பாந்தமாய் காட்டியது சண்முகத்திற்கு மீண்டும் ஒரு கவிதை எழுத தூண்டுதலாக அமைந்துவிட்டது. “அதான் ஃப்ரெண்டு ன்னு சொல்லிட்டானே. ரெண்டு பேருக்கும் கல்யாணமானா பாத்துக்கலாம்!”
சண்முகம் தலை துவட்டிக்கொண்டே வீட்டை சுற்றி பார்த்தார். வீட்டில் இருந்த பொருட்கள் யாவும் தற்காலிக வாழ்க்கைக்கு ஏற்படுத்தப்பட்டது போல தெரியவில்லை.
“அப்பா, எனக்கு வெளிய வேலை இருக்கு. நீங்க வீட்ல ரெஸ்ட் எடுங்க. ஷப்னம் உங்களுக்கு தேவையானதை செஞ்சு கொடுப்பா!” சண்முகம் உளப்பூர்வமாக தலையாட்டி வைத்தார். ராஜா வெளியே சென்றதும் வீடு இன்னும் அமைதியானது. எட்டாவது மாடியில் இருந்து பெங்களூர் நகரத்தை உற்று நோக்கினார்.
“அங்கிள்” சப்தம் கேட்டு திரும்பினார். மகனின் தோழி!
“அங்கிள், டிபன் ரெடி!”
அவளைப் பார்த்தார். சமையல் செய்து முடித்ததற்கான எந்த சோர்வும் அவளிடம் இல்லை. சகுந்தலா இந்நேரம் யுத்தமே நடத்தியிருப்பாள்.
“இல்லாமா எனக்கு பசிக்கல!” என்றார் பசியுடன்.
“உங்க முகத்தை பாத்தாலே தெரியுது. பசில இருக்கீங்கன்னு, வெளிய வேணா ஆர்டர் பண்ணவா?” என்றாள் நாகரீகமாக!
சண்முகத்திற்கும் என்னவோ போல ஆகிவிட்டது. “இரும்மா வர்றேன்!”
மேசையில் அமர்ந்தார். “ஏம்மா, உங்க வீட்டுக்கு இதெல்லாம் தெரியுமா?” என மெதுவாய் ஆரம்பித்தார்.
“சின்ன வயசுல இருந்து ஹோம்ல தான் வளந்தேன்!” என்றதும் இனி குடும்பம் பற்றி கேட்பதில் பலனில்லை என முடிவு செய்தார்.
பாத்திரங்களை எடுத்து திறந்து மூடும் சப்தத்தைத் தவிர வேறு எந்த சப்தமும் இல்லை. அவள் கட்டியிருந்த புடவை நிறத்திற்கு எடுப்பாய் இருந்தது. சகுந்தலாவுக்கு இது போல ஒரு சேலை எடுக்க வேண்டும் என நினைத்துக் கொண்டார். பரிமாறும் பொழுது அவளின் இடதுபுறம் திறந்த வெளியாக இருந்ததை சண்முகத்தால் பார்க்காமல் இருக்க முடியவில்லை. மகன் தன் மனைவியை தியாகம் செய்துவிட்டு அனுபவிக்கும் விஷயத்தை தான் இலவசமாக பயன்பெறுவது போல நினைத்து துணுக்குற்றார். எனினும் அவரால் அதைக் கடந்து வேறு பக்கம் கவனத்தை செலுத்த முடியவில்லை. நான்கு கோடுகளில் அவள் இடுப்பு மூன்று அலையாக உருவெடுத்து நின்றது. அதன் வழியே வியர்வை உற்பத்தியாவதை சண்முகம் ஒரு ஆன்மீக நிகழ்ச்சி போல பார்த்துக்கொண்டிருந்தார்.
“அங்கிள் போதுமா?” என்றதும் திடுக்கிட்டு வாய் அருகே கொண்டு போன இட்லி மீண்டும் தட்டில் விழுந்தது.
“போதும்மா!” என அவசரமாக கை கழுவினார்.
“என்ன அங்கிள் நீங்க சரியாவே சாப்பிடல?”
“இல்லம்மா, இவ்வளவு தூரம் வந்தது ஒரு மாதிரியா இருக்கு!” என முகத்தை பார்க்காமல் பேசினார்.
“அப்ப போய் ரெஸ்ட் எடுங்க அங்கிள்!” என்றாள் ஷப்னம். அவள் முகத்தை பார்க்கவே சற்று கூச்சமாக இருந்தது. ஆகவே மீண்டும் இடுப்பைப் பார்க்கும்படி ஆகிவிட்டது. சகுந்தலாவை மனதில் நிலைநிறுத்திக் கொள்ள நிறைய முயற்சி செய்து பார்த்தார்.
சண்முகத்திற்கு ஒரு அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொள்வது நல்லதெனப்பட்டது. ஆரம்பத்திலிருந்து அலைந்து கொண்டிருந்த புத்தியை பிடித்து கட்டாதது தவறு என நினைத்தார். இன்னும் அரைமணி நேரம் அப்படியே இருந்தால் தன் மனநிலையை அந்தப்பெண் எளிதில் கண்டறிந்துவிடுவாள் என சண்முகத்திற்கு உரைத்தது.
வீட்டில் வலது புறம் இருந்த அறைக்குள் புகுந்து கொண்டார். வெளியில் அவள் நடந்து செல்லும் கொலுசொலி சண்முகத்தை அலைகழிப்பு செய்தது. ஒரு கட்டத்தில் தூங்கியும் போனார். கதவு தட்டப்பட்டது. எழுந்து உட்கார்ந்து நெட்டி முறித்தார். கதவைத் தட்டியவர்கள் அதற்கெல்லாம் அவகாசம் கொடுத்தது போல இருந்தது. கதவைத் திறந்தார், ராஜா!
“நல்ல தூக்கமாப்பா?” துண்டை கட்டிக்கொண்டுதான் நின்றான்.
“ஆமாப்பா, நைட்டு முழிச்சது அசத்திருச்சு. அதான் தூங்கிட்டேன்!”
“வாங்கப்பா வெளிய போகலாம்!”
சண்முகத்திற்கு வெளியே சென்றால் நன்றாக இருக்கும் என தோன்றியது. இருந்தாலும் அந்த ஷப்னம் தன்னை கவனித்துக் கொண்டே இருப்பதால் கொஞ்சம் தயங்கினார். முக்கியமாய் அவர் வெளியே செல்ல முடிவெடுத்த காரணம், இன்னும் நான்கு வெளி பெண்களை பார்த்தால் இந்த பெண்ணின் மீதான ஈர்ப்பு கொஞ்சம் குறைகிறதா என்பதை கவனித்து ஆராயத்தான். இந்த வயசுக்கு மேல் இதுபோன்ற ஆராய்ச்சி செய்வார் என்று கனவிலும் நினைத்தது இல்ல.
அப்பாவின் அமைதியைப் பார்த்து ஏதோ விளங்கியவனாய், “வாங்கப்பா கிளம்புவோம்!”
ஷப்னம் பின்னால் உட்கார்ந்து கொள்ள ராஜாவும் சண்முகமும் முன்னால் உட்கார்ந்து கொண்டார்கள். சண்முகத்தின் கண்கள் பின் கண்ணாடியை நோக்கியே சென்றது. ராஜா ஷப்னத்திடம் கூறினான், “எங்கப்பாவும் நானும் நடந்து போனா ரெண்டு பேரையும் அண்ணன், தம்பின்னு தான் சொல்லுவாங்க!” என்பதை ஆங்கிலத்தில் கூறி சிரித்தான். பதிலுக்கு ஷப்னம், “அப்ப நானும் இவரை இனி அத்தான்னு கூப்புடுறேன்!” என சிரித்தாள். எனக்கும் ராஜாவுக்கும் இருபது வயசுதான் வித்தியாசம் அதுனால கூட இருக்கலாம் என சொல்ல நினைத்து சண்முகம் வெறும் பெருமித சிரிப்போடு நிறுத்திக்கொண்டார்.
ஒரு பூங்காவில் வண்டியை நிறுத்தினான். இறங்கியதும் ஷப்னம் எதையோ வாங்க ஆர்வமாக ஓடினாள். அவள் ஓடுவதை ராஜாவோட சேர்ந்து சண்முகமும் பார்த்தார்.
“ரொம்ப நல்ல பொண்ணுப்பா!”
சண்முகம், “ஆமா, இருந்தாலும் இப்ப நீ பிரச்சினையில இருக்க. மறந்துடாதா!”
“தெரியும்ப்பா, இன்னும் கொஞ்ச நாளைக்கு இப்படியே இருந்துறேன். நீங்க கவலைப்படாதீங்க. என்னோட ஃப்ரெண்டு இங்க மல்டிகேர்ன்னு பெரிய ஹாஸ்பிட்டல் ஓப்பன் பண்றான். அதை மேனேஜ் பண்ணிட்டு இங்கேயே செட்டிலாகுற ஐடியாவுலதான் இங்க வந்தேன்!”
சீக்கிரமே அந்த பொண்ணுகிட்ட இருந்து விடுதலை வாங்கிட்டு இந்த பெண்ணை கல்யாணம் பண்ணிக்க!”
“கண்டிப்பா முயற்சி பண்ணுறேன்ப்பா!”
“இதுல முயற்சி செய்ய ஒன்னுமே இல்ல. முழு மனசோட பண்ணு. அப்பா சொன்னா ஒரு நியாயம் இருக்கும்!”
“ஒரு வருஷம் போகட்டும்ப்பா!”
“இந்தப் பொண்ண கல்யாணம் பண்ணிரு. அதான் எல்லாத்துக்கும் நல்லது!” என்ற போது ஷப்னம் அருகில் வந்துவிட்டாள். “அப்படியே என்னய பஸ் ஏத்திவிட்ருப்பா!”
சண்முகம் பஸ்ஸில் ஏறி உட்காந்த போதுதான் மனைவி சகுந்தலா அழைத்தாள்.
“என்னங்க அவளவிட்டுட்டு வரேன்னு சொல்லிட்டானா?” எடுத்த எடுப்பில் சகுந்தலா கேட்டாள்.
“என்னாலேயே முடியல. அவனால எப்படி விட்டுட்டு வரமுடியும்?” என்றது சகுந்தலாவின் காதுகளுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை!
*********