
1. செல்லங்கள்
〰️〰️〰️〰️〰️〰️
வீட்டில் பூனைகள் வளர்ப்பதில்லை
நாய்களும் தான்
நடு வீட்டில்
மியாவ்கிறது ஒரு பூனைக்குட்டி
எட்டிப் பார்க்கிறேன்
என் மகள் ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறாள்.
அன்றொரு நாள்
நாய் குரைக்கும்
சத்தம் கேட்டது.
2. ஏக்கம்
〰️〰️〰️〰️
பிடிமானம் இல்லாது
நிற்கிறது தேவதை
ஒட்டியாணமாய்
அவனது ஒற்றைக் கை
மெதுவாகத் தோள் சாய்தலிலும்
மெல்லிய நாணப்
படர்தலிலும்
அவரவர் இளவயதுக் காதலை நினைவுபடுத்தி
ஓடிக் கொண்டிருக்கிறது
புறநகர் மின்சார ரயிலொன்று.
3.உயிர் உருகும்
〰️〰️〰️〰️〰️〰️
வினாடி
〰️〰️〰️〰️
நினைவில் நிற்க வேண்டுமென்பதற்காய்
வளைந்து நெளியாது
என் கவிதை.
தானாக வந்தமர்ந்து விடுகிறது
ஆழ் துளைக் குழாய்
உறிஞ்சிய நீராய் வெளியே துள்ளி வந்த வார்த்தைகள்
உள்ளே பசை போட்டு ஒட்டிக் கிடந்தவை.
உயிர் உருகும் வினாடிகளில்
சோகத்தின் அணைப்பில் ஆறுதல் கண்டவை
அழுகையின் ஒலியில்
வரிகளில் தேற்றியவை
மகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பில்
முத்துகளாய் விளைந்தவை
ரசனையின் உச்சத்தில்
என்னைக்
கண்டு கொண்டவை
எழுத்துகள் அதிகம் கொண்ட மொழியில்
அதிக சொற்களைக்
கையகப்படுத்திக் கொண்டவை
நின்று அவதானிக்கிறது
தலைப்பு பெரிதில்லை
வரிகள் தவறில்லை
அளவு முடிவில்லை
ஞாபக ஊற்றினில்
பொங்கிய எண்ணங்கள்
கவிதையின் வண்ணங்கள்
வாழ்க்கைக் கண்ணாடியில்
தெளிவுமிகு
பிரதிபலிப்புகள்.