தொடர்கள்
Trending

“சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை- 15

பறவை பாலா

15. பூச்சியியல் மேலாண்மை.

நன்கு வளர்ச்சியடைந்த தாவரங்களை விட இளந்தளிர்களே பூச்சிகளுக்கு சுவை மிகுந்த உணவு.

விலங்குகளில் சைவம், அசைவம் இருப்பதைப்போல பூச்சியினங்களிலும் சைவம், அசைவம் உண்டு. ஆம்! தாவரங்களை உண்ணும் பூச்சியினங்களை ‘தீமை செய்யும் பூச்சிகள்’ என்றும், பூச்சியினங்களை மட்டும் வேட்டையாடி உணவாக எடுத்துக்கொள்ளும் பூச்சிகளை ‘நன்மை செய்யும் பூச்சிகள்’ என்றும் இயற்கைவழி வேளாண்குடிமக்கள் பிரித்து வைத்திருக்கிறார்கள்.

1. தீமை செய்யும் பூச்சிகள்:

தீமை செய்யும் பூச்சிகளுக்கு இருவிதைத்தாவரங்கள் என்றால் மனிதர்கள் ‘பிரியானி’ சாப்பிடுவதைப்போல அவ்வளவு குஷியாகிவிடும்.

அதனால் தான் அகத்தி, கொத்தவரை, செடிஅவரை போன்ற விதைகள் முளைத்து வெளியேறும்போதே அவற்றை வளரவிடாமல் உடனுக்குடன் உணவாக்கிக்கொள்ளும்.

தீமைசெய்யும் பூச்சிகளிலிருந்து நம் பயிர்களைப்பாதுகாக்க நாம் ஏற்கெனவே பகுதி பகுதியாக பிரித்து வைத்திருக்கும் பாத்திகளின் வரப்புகளில் அகத்தி, ஆமணக்கு, தட்டைப்பயறு உள்ளிட்ட இருவிதைத்தாவரங்களை அதிகளவில் உற்பத்தி செய்து ஒரு பாதுகாப்பு அரண்போல அமைக்க வேண்டும். அவற்றிக்குப்பிடித்தமான உணவுவகைகளை அதிகமாக உற்பத்தி செய்து கொடுக்கும்போது நாம் பயிர்செய்யும் கீரைகள், காய்கறிகள், கிழங்கு வகைகள், சிறுதானியங்கள் மற்றும் நெற்பயிர்கள் பாதுகாக்கப்படும்.

2. நன்மை செய்யும் பூச்சிகள்:

நமது தோட்டத்தில் தீமைசெய்யும் பூச்சிகளின் வருகையை உறுதி செய்து கொண்டபின் அவற்றை உணவாகக்கொள்ளும் நன்மை செய்யும் பூச்சியினங்களும் வந்து சேரும்.

அவற்றை வரவேற்பதற்கான வழிகாட்டியே மஞ்சள் பூ தாவரங்கள் தான். செவ்வந்தி, சூரியகாந்தி, ஆவாரை, துத்தி போன்ற செடியினங்களை வரப்பினூடே வளர்த்தெடுப்பதின் மூலம் நன்மை செய்யும் பூச்சியினங்களின் வருகையை அதிகரிக்கலாம்.

நன்மை செய்யும் பூச்சிகளும், தீமை செய்யும் பூச்சிகளும் சரிசமமாக நமது தோட்டத்தில் உலாவரும்போது நமக்கு எந்தவிதச்சிக்கலும் இல்லை. ஆனால் இதுபோன்ற பூச்சியியல் மேலாண்மை நிகழ சிலகாலம் காத்திருக்க வேண்டும். நாம் விதைக்க விதைக்க உடனுக்குடன் வேட்டையாடி அழிக்கத்துடிக்கும் தீமைசெய்யும் பூச்சியினங்களைக்கண்டு தற்சோர்வடையாமல் கருமமே கண்ணாக இருந்து பூச்சியியல் மேலாண்மைத்தாவரங்களை வளர்த்தெடுக்க வேண்டும்.

அப்படியொரு கட்டமைப்பு நிகழும் வரை பூச்சிகளின் தொல்லையிலிருந்து பயிர்களை பாதுகாக்க தற்சார்பிலேயே வழி இருக்கிறது. அவை இஞ்சி, பூண்டு கரைசல்; ஐந்திலைக்கரைசல்; பத்திலைக்கசாயம் என்று வெவ்வேறு வடிவங்களில் இருக்கிறது.

இஞ்சி பூண்டு கரைசல்:

இஞ்சி 200கிராம், பூண்டு 200கிராம், பச்சை மிளகாய் 200கிராம் எடுத்துக்கொண்டு ஆட்டுரலில் இடித்து இரண்டு லிட்டர் கோமியத்துடன் கலந்த கலவையிலிருந்து 100மி எடுத்து,10லிட்டர் தண்ணீரில் கலந்து பயிரில் தெளிக்க பூச்சி தொல்லை கட்டுப்படும். இந்தக்கலவையின் வீரியம் கூடக்கூட பூச்சிகள் செத்து மடியும்.

ஐந்திலைக்கரைசல்:

ஒடித்தால் பால் சுரக்கிற பப்பாளி, கசக்கினால் கெட்டவாடை வருகிற நித்ய கல்யானி, நுகர்ந்தால் வாசம் வருகிற துளசி, சுவைத்தால் கசப்பு தருகிற வேப்பிலை, கலவையாக்கினால் அதிக பிசுபிசுப்பைக்கொண்டிருக்கிற கற்றாலை போன்றவற்றை மூழ்கும் அளவிற்கு தண்ணீரிலோ, அல்லது கோமியத்திலோ பத்து நாட்கள் ஊறவைத்து, அதிலிருந்து 300மி எடுத்து பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களுக்கு தெளித்தால் அதன் சுவாசத்தில் பூச்சிகள் குழப்பமடைந்து வெளியேறும்.

பத்திலைக்கசாயம்:

ஐந்திலைக்கரைசலைப்போல, பத்துவகையான குணங்களையுடைய தாவர இலைகளைகளைத்தேர்ந்தெடுத்து செய்தால் பத்திலைக்கசாயம் தயார்.

ஆனால் பூச்சிகளை கொல்வது, பூச்சிகளை விரட்டுவது, பூச்சிகளை மடைமாற்றுவதைவிட சிறந்த செயல் அவைகளை அவற்றின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமலும், அதே நேரத்தில் நமது பயிர்களையும் பாதுகாக்கிற பூச்சியியல் மேலாண்மை தான் எப்போதுமே சிறந்தது. அதைக்காலம்தான் உங்களுக்கு கற்பிக்கும்.

இடுபொருட்கள், பூச்சிவிரட்டி இரண்டுமே உங்களுடைய இயற்கைவழி வேளாண் பயணத்தின் பாதைக்கு பாதுகாப்பாக, உறுதுணையாக கொண்டு செல்லப்பயன்படும் ஒரு ஆயுதம் தானே தவிர, அதுவே உங்கள் பயணத்தை தீர்மானிக்கும் சக்தியல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும். காரணம் கையில் ஆயுதம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பயணத்தை பாதியில் நிறுத்த முடியாதுதானே!

பாதை விரியும்…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button