
ஞாபகம் – 1
சின்னக் காலங்களிலிருந்து வெளியேறிக்கொண்டிருப்பதென்பது
ஒரு நண்பனை கைவிடத்துணிவது
மறந்திருந்த மனதொன்றை மிகத் தற்செயலாய் எதிர்கொள்வது
இன்னும் மிகக்கச்சிதமாக
எல்லாவற்றையும் விட்டுவிட்டு முடிவற்றதை நோக்கி நகரத்துவங்குவது.
இவ்வளவு பெரிய நதியில் மிதந்து கொண்டிருக்கும் போது
வாழ்வின் எல்லைகள் மிகச் சிறியதாகத்தான் தோன்றுகிறது.
நிலவு கடந்து போகும் போது
அந்நிலம் தன்னிருளை அர்த்தப்படுத்திக்கொள்கிறது.
அந்நதி தன்னலைகளை வன்மமாக்கிக்கொள்கிறது.
ஞாபகம் – 1 ( I )
அவர் இறந்திருப்பாரானால் ஒரு சிறிய வரியையும் சேர்த்து
அவருடன் புதைக்க வேண்டும்.
“இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில் நிழலைத் தேர்ந்தெடுத்தவன்!”
ஞாபகம் – 2
இந்தச் சிறிய பாதை முடிவடையும் போது தான்
இந்நகரம் துவங்குகிறது.
பெரும் நெருக்கடிகளுக்கிடையில் கண்டுபிடித்த
சிறு பூச்செடியொன்றை அந்நகரிலிருந்து எடுத்து வந்து
இந்த களிமண்ணில் வைத்துவிட்ட பிறகும்,
ஒரு தனித்த இதயம் அந்தச் சிறிய பாதை வரை
வந்து வந்து திரும்பிக்கொண்டிருக்கிறது.
நேசித்துக்கொண்டிருத்தலே
ஒரு திசையை உருவாக்குகிறது,
அதற்கான மிகத்தனிமையான தேவையையும்.
அதற்கான மிக நெருக்கமான பாடலையும்.
ஞாபகம் – 2 ( I )
பூச்செடிகள் வளர்ந்து பெருகிவிட்டன.
ஒரு வேறுபாடுமற்ற அவைகளிடத்திலிருந்து பறிக்கப்பட்டப்
பூக்கள்
நெரிசல் மிகுந்த நகருக்குத் திரும்பிகொண்டிருக்கின்றன
அதன் பருவத்தில்
ஒரு தேவைக்கென
ஒரு பாடலுக்கென
தினந்தோறும்.
ஞாபகம் – 3
எல்லாவிதப் பிறழ்வுகளுக்குப் பிறகும்
சிறு கைகளின் வெம்மைகளிலிருந்து துவங்கும் மொழியை
இரகசியமாய் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்.
ஞாபகங்கள் ஒரு மொழியாகி இடம்பெயர்ந்து கொள்கின்றன.
வாழ்வு தன் இன்னிசையை இறுக்கமாகப் பற்றிக்கொள்கிறது.
ஒவ்வொரு முறை பிரித்துப் பார்க்கும் போதும்
கிடைத்திடாத அவ்வெம்மைகளின் சிறிய வெளிச்சங்கள் தான்
இம் மனநலக்காப்பகத்தின் இரவுகளில் ஒட்டிகொண்டிருக்கின்றன
பிரத்தியேகமான ஒளியின் சாயலுடன்.
ஞாபகம் – 3 ( I )
இப்பிரபஞ்சத்தின் அர்த்தங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதற்கு
மிக அருகிலிருந்து கொண்டிருக்கின்றன
இந்த ஞாபகங்கள்.
அல்லது
மிகத்தனிமையான ஒரு அலையில் நனைத்துக்கொண்டிருக்கும்
வெற்று பாதங்களுக்கான குளிர்ச்சியென யிருக்கின்றன.
அல்லது
வீசியெறியப்பட்ட மஞ்சள் நிற மலர்களை ஒவ்வொன்றாக
சேகரித்துக்கொண்டிருக்கும் சிறிய விரல்களின் மென்மையென யிருக்கின்றன.
அல்லது
வாழ்வதைப் போலவும் சாவதைப் போலவும்
கடவுளுக்கும் அற்புதங்களுக்கும்
இடையிலிருக்கும் எஞ்சிய மகத்தானவைகளைப் போலவும்.