கூழாங்கற்கள் மறைத்து வைத்திருக்கும் உலகு
1. நான் மிகச்சிறிய கூழாங்கல்லாக யிருந்த போது தான்
இப்பிரபஞ்சம் உருவானது.
ஆனால்
நான் இவ்வளவு பெரிய மலையாகிவிட்ட பிறகும்
அதன் காரணம் தான் தெரியவில்லை!
2. தூக்கியெறியப்பட்ட அந்த சிறிய கல் பழகிக்கொள்கிறது
புதிய இருப்பிடத்திலிருந்து தன் புராதனத்தை
தன் இறுகிய அடையாளத்தை,
மேலும்
மழையில் குளிர்ந்துகொள்வதற்கும்
வெய்யிலில் தன்னை உலர்த்திக்கொள்வதற்கும்.
வாழ்வு எல்லாவற்றிலிருந்தும் மிகத்தனிமையாகிக் கொள்வது தான்!
3. மிக லாவகமாகத் தன்னுணவைக் கொத்திப்பறக்கிறது மீன்கொத்தி,
அவ்வொரு மீனற்ற அந்நதியின்
உள்ளிருந்து கிளம்பும் அலைகள்
சிறிய கற்களை மெதுவாகத் திருப்புகின்றன,
அனைத்திலும் படர்ந்திருக்கும் ஒரு யுகத்தின் காய்ந்தத் தடங்களை
மெதுவாகப் பார்க்கத் துவங்குகிறது
அவ்வுலகம்.
4. நீருறிஞ்சிய கூழாங்கற்களுக்கு இடையிலிருக்கும்
சிறிய டேபிள் ரோஸ்கள்
ஒவ்வொன்றாக
வாழ்வின் ஓரத்தில் மலர்ந்திருக்கின்றன,
தன் மொக்குகளை மூடிக்கொள்ளும்
மாலைக்கு முன்பாக
அக்கற்களுடன் முடிந்தளவு பேசிவிடவேண்டும்,
அவைகளுக்கு மிக நெருக்கமாகயிருக்கும் மனிதர்களிடமும்.
5. அந்தியில் சாய்ந்து கொண்டிருக்கும் பாடலை
பின்தொடர்ந்து கொண்டிருக்கிறேன்,
பிறகெப்போதோ
சிறிது தூரத்திற்கப்பால் தொடங்கிடும் வனத்தில்
நான் சேகரிக்கப்போகும் கூழாங்கற்களை,
கடவுள் சொல்லிக்கொண்டிருக்கும் கதையினுள்
ஒவ்வொன்றாக எறிய வேண்டும்
எல்லாவகையிலும் நிதானமாக.
6. நீ இவ்வளவு குளிர்ந்து விட்டாய்
இந்நதியின் கறையொதுங்கும் போது காலத்தை எப்படி புரிந்து கொள்வாய்?
நான் காய்ந்து மேலுமிறுகி
உன் காலத்தை சமன்செய்து கொள்வேன்.
ஆனால்
ஒரு போதும் அதை புரிந்து கொள்ள முயலவே மாட்டேன்.
7. அந்த மலையின் உச்சியில் தனித்திருக்கும் கூழாங்கல்
இப்பிரபஞ்சத்தை தன் மிருதுவான கைகளால் இறுக்கிப்பிடித்திருக்கிறது.
தன் தியானத்தின் மிக அற்புதமான கணமாக
அதையே திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிற தது.
ஒரு குறியீடுமற்ற பயணத்தில் அங்கு வந்து சேர்ந்தவர்கள்
தங்களின் கைகளால் அதைத் தொடும் போது
அது தன் மெல்லிய சிலிர்ப்பை
இறுகியத்தனிமையை
உலகம் முழுமைக்குமானதாக
மாற்றிக்காண்பிக்கிறது,
அவ்வளவு சிறியவைகளின் அனுபவங்களை
உணர்ந்து கொள்வதற்கு
உலகம் இன்னும் தயாராகவில்லை
இது நாள் வரை,
உலகை மூடிக்கொள்ளும் இரவு இப்பொழுது துவங்குகிறது
மிகச்சரியாக.
8. சிறிய
குளிர்ந்த
அவ்வளவு வழுவழுப்பற்ற,
கூழாங்கல்லின் மனதுனக்கு.