
அவரவர் முகம்
சதுரத்தின் மீது
ஒரு சிலுவை விழுந்ததும்
உலகின் கருணை மிகுந்த செவ்வகங்கள் உருவாயின
ஒன்றில் தேவன்
ஒன்றில் சாத்தான்
மற்ற இரண்டிலும் குழந்தைகள் என நின்றார்கள்-
ஏதோ அளவெடுக்க வந்த கணக்கு ஆசிரியர்
சிலுவையை அருகிலிருந்த
வட்டத்தின் மீது நகர்த்தியதும்
அதிலிருந்து உருவான விசிறிகளை எடுத்து
நால்வரும் காற்று வீசினார்கள்
அப்போது,
அடுத்த சில மூச்சிற்குப் பிறகு
இறப்பவனைப் போல
காற்று திக்குமுக்காடியது
தேவனும் சாத்தானும் முறைத்தபடி இருந்தார்கள்
எங்களை முடிந்தால் பிடியுங்கள் என
செவ்வகங்களை மாட்டிக் கொண்டு ஓடிய சிறுவர்கள்
வீட்டுப் பாடம் எழுதிய சிலேட்டுகளில்
ஆளுக்கொரு உருவம் கிறுக்கியிருந்தார்கள்
வீடுவரை துரத்திவந்த தேவனும் சாத்தானும்
இரண்டு உருவத்திலும் அவரவர் முகத்தையே கண்டார்கள்.
*********
மனிதனை மீனாகவும் மீனை மனிதனாகவும் மாற்றுதல்
தண்ணீரில் விழுந்த அவனிடம்
“நீயும் மீன் தான் ~ நீயும் மீன்தான்” என
பல முறை சொன்னபிறகுதான் நீந்தத் தொடங்கினான்
அவனை மீனென நம்பவைக்க
சுண்டு விரலைப் புழுவென காட்டி
கையை தூண்டில் போல வீச வேண்டி இருந்தது.
நீந்தி கரையேறிய பிறகு
அவனை மனிதன் என்று நம்பவைக்க
பெரிய சிரமமேதும் படவில்லை
தள்ளிவிட்டது நான் தான் என்று சொன்னேன்
என்னைத் துரத்தியபடி மனிதனாகி விட்டான்.
*********
எதிர் நீச்சல் போடும் மீனாக படைப்பாளிகளின் இலக்கிய நதியில் எதிர் நீச்சல் போடும் படைப்பு எதார்த்த கவி பூ
பூவிதழின் சிதறல் சிறப்பு .அண்ணா வாழ்த்துகள்.