
ஓயாது பேசிய இதழ்களுக்கு
உரையாட மொழி தீர்ந்திற்று
காரணமறியா நிராகரிப்பின்
காயங்களுக்கு மருந்தில்லை
உன் விருப்பம் எதுவாயினும்
மறுதலித்து பழக்கமில்லை
அவ்வாறே பிரிந்திட்டாலும்
ஓங்கியடிக்கும் நினைவலையில்
உடைந்து ஒதுங்குகிறது மனம்
தொட்டுத் தீண்டிய கரங்கள்
என்றாவது எனை நோக்கி
நீளுமென்ற நப்பாசையில்
அடங்க மறுக்கின்றன
என் ஆசைச் சிறகுகள்
கொடுத்தே பழகிய இதயம்
யாசிக்க கற்றுக் கொண்டது
காலம் மாறுமென்று நம்பித்தான்
பல யுகங்களும் கழிந்திட்டன
ஆம்..காலம்தான் மாறுகிறது
உன்னையும் என்னையும் தவிர
**********
உதடுகளின் உச்சரிப்பில்
உண்மைகள் சிதையலாம்
உள்ளக் காயங்களுக்கு
மருந்திடச் சொன்னால்
மறந்திடச் சொல்கிறாய்
மரணிப்பதை காட்டிலும்
காயங்களோடு பிழைப்பதில்
சமாதானம் கொள்கிறேன்
கடும் பிரயாசத்தில்
கல்லினை துளைத்திடும்
வேர்களின் விளிம்பில்
துளிர்த்திடும் நம்பிக்கை
உன் கண்கள் உரையாடுகையில்
மின்னிடும் காதல் கண்டு
காலம் திருடியதாய் நம்மை
இருவருமே தேடிக் கொள்கிறோம்
தேடுவதை உணர்த்திடாமல்
**********
வான் பார்த்து ஏங்கும்
வறண்ட நிலமாய்
பிளவுற்ற நெஞ்சத்தில்
சின்னதொரு தூரலாய்
நனைத்துப் போகிறது
உன் இதழின் குறு நகை
கொட்டித் தீர்ப்பதில் தான்
எத்தனை கஞ்சம்
நனைந்திடும் முன்பே
கரைந்திட்ட நெஞ்சை
தேடிப் பார்ப்பதுதான்
என் வாழ்வின் சாபம்
**********
மழை
ஊடல் கொண்ட நிலமகளின்
கோபத்தீயை குளிர்விக்க
உன் முத்தங்களை
துளிகளில் நிரப்பி
தூது விட்டாயோ? வானே!
பூமகள் அகம் மகிழ்ந்தாள்
பச்சை வண்ணம் அணிந்தாள்
குறிப்பால் தனை உணர்த்த
*இமைகளே இப்போதே
இளைப்பாறி கொள்
என்னவன் முன் நின்றால்
இடைவேளை கிடைக்காது
*என்னிடம் பேச முயன்று
நீ தோற்கும் போதெல்லாம்
உன்னில் ஏற்படும்
தடுமாற்றம் கண்டு
ரசிப்பதில் தான்
எனக்கு பேரின்பம்
**********