கவிதைகள்
Trending

கவிதைகள்- இரா.கவியரசு

கண்ணாடிச் சில்லுகள்

பிம்பம் 1.
வறண்ட கிணற்றில்
தள்ளாடியபடியே ஏறுகிறது வாளி
கற்களில் மோதி இழுபடும் ஓசை

அறவே பிடிக்கவில்லை
கொம்புடைந்த மாட்டுக்கு
முட்டிக் காயம் செய்த வேப்பமரம்
பூக்களைக் கொட்டுகிறது
தோலை அலங்கரிக்கும்
கடிமணம் பிடிக்காமல்
தூரத்திலிருந்து விரட்டும் முதியவர்
அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய தலைவியின் பாதங்களை
உடலெங்கும் ஓடி மிதிக்க விடுகிறார்

பிம்பம் 2.
நடுப்பக்கத்திலிருந்து
யாரோ கிழித்திருக்கிறார்கள்
பகலெல்லாம் தேடியும்
சிக்கவே இல்லை
இரவில் சுவரெல்லாம்
வழிந்து கொண்டிருக்கிறாள்
வெளிச்சத்துக்கு பயந்து
வெளியே சென்றால்
விண்மீனில் குளித்துக் கொண்டிருக்கிறது
வேறொரு உடல்
குற்ற உணர்ச்சி ஏதுமின்றிப் பெருகுகிறது
தூங்கவிடாத கடல்

பிம்பம் 3.
கோழிகளில் தொடங்கியது
நாய்களென்றால் ஓரக்கண்
குழந்தைபோலக் கத்தும் பூனைகளை
இப்போதும் விடமுடியவில்லை
விலங்குகள் எப்போதும் தூய்மையானவை
முகமூடி அணிந்து பார்க்கும்

நள்ளிரவு சேனலில்
நடித்துக் கொண்டிருக்கும் உடல்களுக்கு
திரும்பிச் செல்ல
எப்போதும் இருக்கிறது
ஒரு வீடு

பிம்பம் 4.
இரவு நாடகத்தில்
சரியாகப் பொருந்தாமல்
அடம்பிடிக்கிறது
மூளைக்குள் சிரிக்கும் முகம்
அந்த செவிகளை இழுத்தால்
நசுங்குகிறது இந்த மூக்கு
நெற்றியைப் பெரிதாக்கினால்
கடிக்க வருகிறது தெற்றுப்பல்
சோர்ந்து உட்காருபவனின்
உடலெங்கும் சுழல்கின்றன
சரணடையாத மரவட்டைகள்

*********

ஒத்ததிர்வு

முன்பு நின்றிருந்த எலும்புகள் பேசுகின்றன
இன்னும் கொஞ்சம் அடித்தால் போதும்
ஒத்ததிர்வு உள்ளே தோன்றிவிடும்
அவனுக்குப் பின்னால் நின்றிருந்தவர்கள்
அடிக்கும் முன்பே பொருந்தி
இவ்விடத்திலிருந்து
விடுதலை பெற்று விடுவோமென்று
தண்டுவடத்தை உலுக்குகிறார்கள்
வயிற்றுக்கு வருகிறது இசைக்கவை
பதினைந்துதானே எங்கள் கணக்கு
உனக்கெப்படி பதினெட்டு காட்டுகிறது
கணக்கிடும் கருவியை எட்டி உதைக்கின்றனர்
வலியில் கதறுகிறது தொப்பூழ்
பேரியந்திரங்களின் நடைபாதையில்
மண்முழுவதும் அடங்கி
ஒடுங்கியிருக்கிறது
ஒத்ததிர்வில்
செடிகளில் இனி
முளைத்தெழும் நாவுகள் இல்லை
ஒரே சாயலில் மலர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு விட்டன
நெஞ்சுக்கு நேரே நிற்கும் இசைக்கவையிடம்
சீக்கிரம் கொல் என்கிறான்
மூன்றைக் குறைத்து விட்டாயா என
மீளவும் வருகிறார்கள் வீரர்கள்

*********

உரையாடல்

தலைகீழாக உறங்குகிறோம்
பித்த வெடிப்புற்ற பாதங்களை
அழுக்கேறிய நகங்களை
தடவிக் கொண்டே இருக்கும் கைகளை
கால்களுக்கு அறிமுகம் செய்கிறோம்
முத்தங்கள் ஒளிந்து கொண்ட செய்தி
பரவுகிறது விரல்களுக்கிடையே
பிடித்து விடுவதன் வாயிலாக
தப்பிக்க நினைக்கும் முகங்கள்
வலியைத் தொடும் கணத்தில் விசும்புகின்றன
மிக நீண்ட உரையாடலுக்கு
தயாராகும் உடல்களை
நீரூற்றி அமிழ்த்துகிறது இரவு

*********

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button