
அம்மாக்களை
மாமியார்களை
சம்பளமில்லா
ஆயம்மாக்களாக
ஆக்கிக்கொள்ளும்
பாசக்காரப் பிள்ளைகள்
இலவச அரிசியை
விலைக்கு
விற்றுவிடுகிற
கண்ணம்மக்கா
தன் வீட்டு பூவை
அடுத்தவர் பறித்து
விடக்கூடாதென்றே
தவறாது
பறித்து
தொடுத்து விடுகிற
ராமாத்தாள் பெரியம்மா
பேச்சு சாதுர்யத்திலேயே
பொய்யை
உண்மையாக்கிவிடுகிற
முத்தம்மா
பால்காரர் கறந்த
மாட்டில் மீண்டும்
முக்கால் லிட்டர் பால்
கறந்து விடும்
கெட்டிக்கார
சரஸக்கா
என
பிழைக்கத்
தெரிந்தவர்கள்
நிறைந்த
இந்நக் காலத்திலும்
தின நாள்காட்டியின்
தாள்களை கிழிக்காமல்
கோவிலுக்கு விபூதி மடிக்க தரும்
சின்னத்துரை சித்தப்பா
வீட்டுத் தோட்டத்தின்
காய்களை விலைக்கு
விற்காமல் எல்லோருக்கும்
இனாமாகவே தந்து பழகிய
தனம் அம்மா
கடனை அடைக்க
வந்தவளின்
தோளில்
உறங்கும் குழந்தையைப்
பார்த்து
பாதி பணத்தை
திருப்பிக் கொடுத்துப் போகும் அரிசிக்கார
மணியண்ணன்
என பிழைக்காத் தெரியாதவர்களின்
பட்டியலிலும்
இருக்கின்றன
மேலும்
சில பெயர்கள்
*********
வண்ணத்துப்பூச்சி
ஒன்றை
இரு விரல்களில்
அதன் இளமஞ்சள்
வண்ணம் படிய
பிடித்து பின்
பறக்கவிடுகிறேன்
கொட்டாங்குச்சியில்
ஈரமண் நிரப்பி
குப்புற போட்டு
தட்டி இட்லி சுட
பவனிக்குட்டிக்கு
பயிற்சி தருகிறேன்
புளியங்கொழுந்தை
பற்கள் கூச
உப்பு மிளகாயோடு
அரைத்து சுவைக்கிறேன்
பரண்மேல் கிடக்கும்
நடவண்டியை எடுத்து
சக்கரங்களை
கைகளால் உருட்டி
சிரிக்கிறேன்
அறியா வயதில்
ஓடித்திருந்ந
தடம் வழிகளில்
தான் இப்போதெல்லாம்
நடக்கிறேன் கனவில்
இப்படியாக
நிரப்ப வேண்டியிருக்கிறது
என் இருத்தலுக்கும்
வாழ்தலுக்குமான
இடைவெளியை
*********