தியானப் புத்தனின் தேநீர் இடைவேளை; நூலறிமுகம் – கோ. பாரதிமோகன்
கட்டுரை | வாசகசாலை

‘ஹை கூ’ கவிதைகள், ஜப்பானிய ஜென் துறவிகளால் பிறவி எடுத்த ஒரு குறுங்கவிதை வடிவம். அது, ‘ரெங்கா’ எனும் மரபு வடிவ தளைத் தொடர்கவிதையின் கண்ணிகளாய்ப் பின்னிக் கிடந்தது. ஜென்னின் மூலம், போதிதர்மரிலிருந்து வேரரும்பியது. ஜென் கவிதைகள், தியானத்தின் விழிப்பு நிலையிலிருந்து தோன்றியவை எனில் ஹைகூவோ அதன் உள்ளொளியிலிருந்து கிளைத்தது!
வானத்தில் சட்டெனத் தோன்றி மறையும் மின்னல்வெட்டைப் போன்றது ஹைகூ. அது ஒரு கடவுளின் தரிசனம்! இயற்கையும் இறைமையும் வேறுவேறு இல்லைதானே? தரிசனமென்பது, ஒருசாரர் காணக் கிடைக்கும் காட்சியல்ல. கடவுளின் கண்களும் பிரார்த்தனையற்ற பக்தனின் கண்களும் நேருக்கு நேர் தரிசிக்கும் பரவச அனுபவமே ஹைகூ.
கடவுளைக் கண்டுவிட்ட கண்கள் கதாகலாட்சேபம் நிகழ்த்திக்கொண்டிருக்காது. மௌனித்துவிடும். ஆனால் அந்தத் தரிசனத்தை ஒளிப்படம் எடுத்துவிடும். அந்த ஒளியின் நிழல்தான் ஹைகூ.
*
‘உலகின் எல்லாக் குளத்திலும் ஒரே நிலவுதான்
ஒளிர்ந்துகொண்டிருக்கிறது’ எனும் மார்க்வெஸ்ஸின் வரிகளை, தான் படித்திருப்பதாகத் தனது ஜென் கவிதை குறித்த நூலொன்றில் நினைவுகூர்ந்திருப்பார் எழுத்தாளர் எஸ். ராமாகிருஷ்ணன். அஃகுதொப்பப் பார்த்தால், நிலவுக்குக் குளங்கள் உண்டு; ஆனால், குலங்கள் இல்லை என்பதாகிறது.
நிலவுக்குக் குலங்கள் இல்லையெனில் ஹைகூவிற்கும் அவை இல்லை. எனவே எங்கெங்கு காணிணும் இயற்கையோடு அது தன்னை பின்னிப் பிணைத்திருக்கிறது. ரெங்காவிலிருந்துதான் அது விட்டு விடுதலையாகியிருக்கிறதே தவிர, இயற்கையிடமிருந்து இல்லை. இந்த இயற்கையுடனான ஒன்றிய விடுதலையின் குறியியீடாகத்தான் ஹைகூ கவிதைகளில் வண்ணத்துப் பூச்சிகள் சிறகு விரித்திருக்கின்றன.
*
பி.ஹெச். பிளித் என்பவரின் கட்டுரையிலிருந்து தான் மொழிபெயர்த்த சில ஹைகூ கவிதைகளை சுதேசிமித்திரன் வழி தமிழுக்கு அறிமுகப்படுத்திய மகாகவி பாரதிக்குப் பின் வெகுகாலம் பிடித்து, தனது, ‘பால்வீதி’யில், ‘சிந்தர்’ எனும் பெயரில் ஹைகூவை முன்னோட்டமிட்டார், உலக இலக்கிய வடிவங்கள் பலவற்றை சோதனை முயற்சியாகவும் முன்மாதிரியாகவும் தமிழுக்குத் தந்த கவிக்கோ அப்துல் ரகுமான்.
அந்தத் தடத்தில் வடம் பிடிப்போர் வரிசையில் ஹைகூ பிடித்து வந்திருக்கிறார், கவிஞர் க.ராஜகுமாரன்.
ஆனால், பிள்ளையார் பிடிக்கப் போய் பிழையாரைப் பிடித்ததாக அல்ல; இந்த, ’மிடறுகளின் இடைவெளியில் புத்தன்’ வழி, புத்தனைப் பிடிக்கப் போய் புத்தனையே பிடித்திருக்கிறார், ராஜகுமாரன்.
தியானம் உள்ளொளித் தேடல் மிக்கது. தனக்குள் தன்னைக் கண்டடைய ஆயுள்முழுக்க அலைந்து திரிவது அது. அதன் பாதை புறத்தில் இல்லை; அகத்தில் நீள்கிறது. ஆனால், அதன் உட்காட்சியை புறப்படிமங்கங்களால் சுவடு தரித்துச் செல்கிறது. வெளிச்சம் அதை காட்சிப் படுத்துகிறது; ஒளி அதைத் துலங்கச் செய்கிறது. வெளிச்சம் வந்ததும் பொருள் தெரிகிறது. ஒளி அதில் ஞானத்தை உணரச் செய்கிறது.
தேவை என்பதெல்லாம் கண்களுக்குப் பார்வைதான். ஆனால், வெறும் பார்வை என்பது கவனித்தல் ஆகாது. கவனித்தல் என்பது உள்ளுணர்வில் நிகழ்வது; குருட்டுத்தனம், நீரைத் தொட்டுணர்வது போல. பார்வை கொண்ட கண்ணுக்கு நீர் தெரியும். ஆனால், அது தண்ணீரா – வெந்நீரா எனும் பண்பை உணராது.
கவனித்தல் என்பது ஒளியை ஒளி கண்டுகொண்டு ஆரத்தழுவிக் கொள்வது. அந்த இடைவெளியறு ஆலிங்கணத்தில்தான்,
“வைகறை வெளிச்சம்
உதிர் இலைகள் நகர
மேலும் ஒரு கிளையில் பூ”
எனும் தரிசனம் வாய்த்திருக்கிறது கவிஞருக்கு.
வெற்றுப் பார்வை இலையுதிர்வை மட்டுமே கண்டுகொள்கிறது.
கவனித்தலோ அடுத்து மலரும் பூவை தரிசனப்படுத்துகிறது.
ஆனால் இந்தத் தரிசனம், ஒரு பிரார்த்தனையைக் கோரி நிற்கிறது. அதுதான் விழிப்புணர்வு. விழிப்பணர்வில் ஒரு நதி நகர்ந்துகொண்டே இருக்கிறது. காலத்தை நதி என்றும் சொல்வதுண்டு. உதிர் இலைகளை நதி நகர்த்த காலம் மலர்தலைக் காட்டுகிறது.
உலகம் பருப்பொருள்களால் ஆனது. இயற்கை பருவங்களால் ஆனது. உலகமும் இயற்கையும் இயங்கிக்கொண்டே இருப்பவை. அவற்றின் இயக்கம் சுழற்சியால் ஆனது. ஜென், சுழலும் பருவங்களைப் பாடுகிறது. இலையுதிர் மூலம் அது வசந்தத்தை வரவேற்கிறது. உள்ளொளியின் விழிப்புணர்வில் எதுவும் உறங்குவதில்லை. அதனால்தான்,
“பழுதான காற்றாடி
இறக்கையைச் சுற்றிச் சுற்றி
பறக்கிறது தேன் சிட்டு”
என்று எழுதுகிறார் கவிஞர்.
இதுஒரு புறக்காட்சியில் விரியும் அகதரிசனம்.
புறம் செயற்கை; அகம் இயற்கை. ஒருபோதும் ஓய்வதில்லை இயற்கை. இயங்கிக்கொண்டே இருக்கும் அது இமைகள் இறங்கிய மோனத்தில் உள்ளே விரியும் சிறகு! மோனத்தின் இனிமை உரைப்பதில் இல்லை; உணர்வதில் இருக்கிறது. அதனாலேதான் அது தேன்சிட்டு!
பிரபஞ்சம் அணுத்துகள்களால் ஆனது. அதன் கீழ் பருண்மை அல்பருண்மை எனும் பொருண்மை எதுவும் இல்லை. அடர்த்தி, கனபராமாணம் கொள்கிறது. கட்புலனாகாதவை நுண்ணிமைகள் அவ்வளவே. ஒன்றுக்கும் மற்றொன்றுக்குமான இடைவெளி அதனால் தெரிவதே. ஒளியும் இருளும் அதனதன் தன்மையில் பூரணமானவை.
ஒளி இடம் எனில் இருள் இடைவெளி. ஆனால் இவை இடைவெளியின்மையால் இணைந்திருக்கின்றன.
இந்தத் தரிசனம் நிலா பார்த்தலில் கிட்டியிருக்கிறது கவிஞருக்கு.
அதனால்தான்,
“மெல்ல நகர்ந்து
தனித்தனி மலைகளை
இணைத்தது நிலா”
என்பதைக் கவனிக்க வாய்த்திருக்கிறது ராஜகுமாரனுக்கு.
மலைக்கும் மலைக்குமான இடைவைளியை இணைத்த புத்தவொளிப் பூர்ணிமை கிட்டியிருக்கிறது கவிஞருக்கு. உலகில் பெரியது சிறியது என்பதெல்லாம் ஒன்றுமில்லை. ஒளி துளி எனில் இருளும் துளிதான் இருள் துளி எனில் ஒளியும் துளிதான்.
ஒரு கணத்தின் இருள் எவ்வளவோ மறுகணத்தின் ஒளி அவ்வளவு. இவற்றை,
“தெருவிளக்கின் மேல்
பறக்கும் இருளுக்கு
நீண்ட சிறகுகள்”
என்றும்,
“நதி நடுவே
துள்ளும் மீனுக்கு
ஒரு கணம் வானம்”
என்றும் காட்சிப் படுத்துகிறார், கவிஞர். இது அகவொளியில் அகப்படுகிற ஞானதரிசனம்!
அதனால்தான்,
“மழை விட்ட பிறகு
குளம் வைத்திருக்கிறது
அதே வானத்தை”
வாழ்வு புற்கள் அடர்ந்த சாலை. புற்கள்தானே வளருகின்றன! வாழ்வும் அப்படித்தான்.
இந்த புற்களடர்ந்த சாலைதான் நம்மை கோயிலுக்கு அழைத்துச் செல்கிறது. ஆனால் அங்கே கோயில் திறக்கப் படாமல் இருக்கிறது.
மகிழ்ச்சியும் துயரமும் வேறுவேறு அல்ல. கண்ணீரும் புன்னகையும் சமமானவை. வாழ்வு இரண்டிலிருந்தும் விலகி நிற்பதில்லை.
‘சங்கிலியால் பூட்டி சிறுமை படுத்தும்போதும் வாழ்வு உங்களோடுதான் இருக்கிறது’ என்பான் கலீல் ஜிப்ரான். இன்பம் என்பது ஒரு கோயில்தான். ஆனால், அதன் கதவு சாத்தப்பட்டு இருக்கிறது. பேதம் எப்போது அறுபடுகிறதோ அப்போது அதன் கதவு திறந்துகொள்கிறது. அதுதான்,
“மழை வெயில் அறியாமல்
மண்மூடிய வேர்.
ஆனால் அங்கே, அது உறங்குவதில்லை; இறந்துவிடுகிறது.
மூடிய இமைகளுக்குள் விழுந்து இறந்தவைதான்,
புத்தரின் கண்கள்”
விதை என்பது அறியாமை. அது நிலத்தில் விழுந்து இறக்கையில்
அதன் வேர்கள் உறங்குவதில்லை. புத்த ஞானம் என்பது, மூடிய இமைகளுக்குள்ளான ஆகப்பெரும் விழிப்புணர்வு!
விழிப்புணர்வு ராஜகுமாரனுக்குக் கிட்டியிருக்கிறது.
இத்தொகுப்பின் வழி, பசிக்காதோர் பந்திக்குப் பதறும் அவசர ஆக்கிகளுக்கு மத்தியில் நிதானித்துத் தீத்தள்ளி, பானைச் சோற்றையும் பதம் பார்த்தே இறக்கியிருக்கிறார் கவிஞர். அகப்பைக்குத் தப்பிய பருக்கைகள் போக மற்றவையனைத்தும் விருந்திற்கு வந்த தலைவாழைச் சோறு!
இதில் ஒவ்வொரு பருக்கையும் பசியாற்ற மட்டுமல்ல; பாடமா(க்)கவும் ருசித்திருக்கிறது. மிடறுகளின் இடைவெளியில் புத்தனைத் தரிசித்தவாரே கோப்பைத் தேநீரைப் பருகியிருக்கிறார், கவிஞர் ராஜகுமாரன்.
இதோ வைக்கப்பட்டிருக்கிறது, உங்களின் முன்பும் ஒரு கோப்பைத் தேநீர்.
எத்தனை பேர் புத்தனைத் தரிசிக்கப் போகிறீர்கள்?
***
மிடறுகளின் இடைவெளியில் புத்தன்
(ஹைகூ கவிதைகள்)
ஆசிரியர்: க. ராஜகுமாரன்
வெளியீடு: வேரல் புக்ஸ்
முதல் பதிப்பு: செப்டம்பர் – 2022
பக்கம்: 104
விலை: ₹ 100
********