
போதம் நொறுங்கி..
ராட்சஸ தயவில் விதிர்த்திருந்த அறையின் நடுக்கம்
இனியும்
மட்டுப்படுவதாக இல்லை
இரண்டு அனுபவங்களுக்கு ஊடே பரிமாற்றம் கண்ட
சொற்களின் அமைதி
யுகாந்திர எல்லைக் கடந்து வெம்மை கூட்டுகின்றது
திறந்திருக்கும் யன்னல் வழியே
சென்றுவிட்ட மனத்தின் மொழியைக்
கவ்விப் பறந்திருந்த
அகக் கழுகு
மெய்கூர்மை பார்வைக் கொண்டு
ராட்சஸம் தைக்கிறது
ஓலத்தைப்
புறக்கணித்து
சிறு தழுவலை வேண்டும் குழைவில்
இளகும் முத்தம்
ஆலிங்கனச் செழுமையெழுதி மீளத் திணறும் அதிர்வில்
ஒடுங்கிட
மேவும் கனவின் நடுக்கம்
குமிழ் குமிழாய் புடைத்து
உகுக்கிறது
உயிரை
**********
அப்படிச் சொல்லுவதாக இருந்தால்..
நாம் பரஸ்பரம் நாடும் நிம்மதி
சற்றுமுன்
கடைசி பஸ்ஸை பிடித்து போயேவிட்டது
கால்கடுக்க
நெடுநேரம் இவ்விரவு தேயத் தேய
நின்றது நின்றபடி
எதுவும் பேசாமல்
காயும் நிலவை
என்ன செய்யலாம்
இதோ
இடைவெளியற்று
கீச்சியலறும் சுவர்க்கோழியின் ரகசியத்தை
பாதியாய் வெட்டிச் சுருட்டி
ஆளுக்கொரு சிகரெட் பிடிக்கலாம்
கமறி கமறி தொண்டையில் ஊறும்
கேவலை
பத்திரப்படுத்தி வெம்மைக் கூட்டி
முதல் கீற்றோடு வந்து சேரும் முதல் பஸ்ஸில்
ஏறி
அவரவர் திசைகளில்
தொலைந்தும் போகலாம்
**********
எதை நினைத்தும் ஒன்றும் ஆகப் போவதில்லை..
கடைசியாக
இங்கே கையெழுத்திடுங்கள் என்றபோது
அதுவரை பழுத்து நிறம் மாறியிருந்த
ஒற்றை இலை
கிளையிலிருந்து பட்டென
தன்னை விடுவித்துக் கொண்டது
ஒரு தனிமையின் கதவைத் தள்ளித் திறந்து
அதனுள் பிரவேசித்த
கணத்தில்
அதுவரை பருத்து மிதந்தலைந்திருந்த மேக இணுக்கிலிருந்து
தாங்கவொண்ணா வெடிப்பாக
முதல் துளி
தம்மை அவிழ்த்துக் கொண்டது
யாவற்றையும் அசை போடும் பொழுதை
வெப்பக் காற்றொன்று தூசு பூசி நகரும்
அழுத்தத்தில்
கடைசியாக
எங்கே கையெழுத்து போட்டால்தான் என்ன
**********
நீங்களும் இருந்திருக்கலாம்..
இரண்டு சதுப்புகளுக்கு நடுவே நுழைந்து
கருநிழலென நீண்டு போகும்
சாலையை
குறுக்கில் கடக்கின்ற
பாம்புகளின் வயிறு திரண்ட அசைவின்
நிதானத்தில்
கெடுதலாகிப் போன
தவளைகளின் வாயை நினைத்து
அவை
கனவு காண்பதில்லை
செரித்த இரையும் நஞ்சாகப் பரிணமிக்கும்
சுழற்சியில்
வரமும் சாபமும்
யாகமாய் வளர்கின்றன
பகல்தோறும் வெயில் தகிக்கும் சாலைகளில்
ஊர்ந்து மறைந்த பசியும்
செத்தொழிந்த ஓலமும்
ஹாரன் சத்தத்தில் செவிடாகின்றன
இரண்டென பிளவுபட்ட சதுப்பின் கரைகளில்
தவளைக் குஞ்சுகள்
மேலும்
பல தவளைக் குஞ்சுகளாய்
**********
குறுவாளின் கைப்பிடி..
அக்கு அக்காய் கழற்றி எறிந்துவிட
எடுத்த முடிவில்
இரண்டு ஃ குகள் இருந்தன
ஃ ஒன்று-
நைச்சியமாக வருகைத் தந்துவிட்ட
நயத்தில் அத்தனையும்
நறுவிசு
ஒவ்வாத இன்முகத்தில் கோணுகின்ற
சிரிப்பின் வளைவில்
அதள பாதாளம்
ஃ இரண்டு-
மறைபொருளின் கூரான மினுமினுப்பை
தந்திரமாய் பதுக்கி காத்திருக்க
நாலாந்திர திசைகளுக்கும்
அப்பாலிருந்து
தருவித்ததாக
ஞானம் பூண்டிருந்தது
கொடிய
நஞ்சென
**********