01 நதியை மொழி பெயர்க்கவும்
—————————————————
நதியின் பேச்சினை
காலம்
மொழி பெயர்த்த போது
நாகரீகம்.
நதியின் ஆன்மாவை
மொழி பெயர்த்த போது
வேளாண்மை.
நதியை உள்குடைந்து போய்
மொழி பெயர்த்து
சிலிர்க்கையில்
இரண்டாவது கருவறை
தரிசனம்.
கால ஆட்டத்தில்
பேராசை கோபுரங்கள்
தரைவந்து தடம் கெட்டு
நதித் தடத்தை
இயந்திரம் கொண்டு ஆழ மொழி பெயர்க்கையில்
மணல் பிணங்கள்.
காணாது அலைந்து
நதி சுவடுகளை
மொழி பெயர்த்த போது
நிதி விழுங்கும் பேய்கள்.
பெருஞ்சாந்திட்டு பிணங்களை அடுக்க அடுக்க
கட்டங்கள்
நதியின் நரம்புகளில்…
கடைசியாய் இப்போது
நதியையே பெயர்க்க
தொழில் நுட்பத்தைப்
தேடிக் கொண்டு இருக்கிறோம்.
அதுவரை
அவைகள் நதிகள் என்றே
நம்பிக் கொண்டிருங்கள்.
02. ஆலமர பெருவேர்களுக்கு அடியில் சிறு படகுகள்
————————————————-
வாழ் தொட்டியில் பெருகிய கால நொடி குமிழ்களின்
பரிணாம புணரலில்
பிறந்த நீர் பரப்பில்
கண் அறியா விதை
முந்தி சென்று முளைக்கிறது
கனவிலும் கை உரசி,
காற்று வீசம்
வித்தை கற்றிருக்கிறது.
முதிய முத்தத்தில்
காட்சியை சிதறாது வீசுகிறது
நனவலி நிலம்.
பிறழ் பேச்சை
மொழி பெயர்க்க
வாழ்ந்த வாழ்வு
பேருரூ எடுக்கிறது
ஆலமரமாய்…
எங்கெங்கும் வேர் முடிச்சுகள்
அரண் போல
தப்பிக்கும் தடங்களை மறித்து
உணர்ந்து பார்க்கையில்
ஒரு இலட்ச எண்ண படிமங்கள்
வேர் முடிச்சுகளிடையே சுவாசித்த படி பார்த்துக் கொண்டிருக்கின்றன.
சேதிகளையும்
உணவையும்
உயிர் மகிழ் நீரையும் தந்திட வந்து போய்க் கொண்டிருக்கின்றன.
சிறு படகுகள் நினைவு துடுப்பிட்ட படி.
ஈகவிஞர் மதிபாலா அவர்களின் நதி பெயர்ப்பு கவிதை
உறையவைக்கும் உண்மை.