
1) ஹல்கின் நிர்பந்தங்கள்
ஹல்க் யார் என்பதில்
ஹல்க் உள்பட
பலருக்கும் குழப்பங்கள்
இருக்கிறது….
ஹல்க்கை பார்த்துவிட்டு
சிலர்,
‘ஹல்க் ஏன்
இத்தனை குள்ளமாக இருக்கிறான்?”
என்கிறார்கள்…
ஹல்கின் நிறத்தைப்
பார்த்துவிட்டுச் சிலர்
‘மனித ரூபத்தில் பாசி
வளர்ந்திருக்கிறது’
என்கிறார்கள்…
ஹல்க் ஆக்ரோஷத்துடன் உறுமுகையில்
‘இடி இடிக்கிறது.
ஆனால், மழையைக் காணோம்’
என்கிறார்கள்…
இப்படிச் சொல்பவர்கள் தான்
‘போருக்கு ஆட்கள் தேவை’
என்ற கேள்வி எழும்போது
ஹல்க்கை காட்டிக்கொடுத்துவிட்டு
ஒதுங்கிக்கொள்கிறார்கள்…
இவர்களிலிருந்து தான்
ஹல்கிற்கு
நண்பர்களையும்,
உறவினர்களையும்
தேர்வு செய்ய வேண்டியும் அமைகிறது…
2) ஹல்கின் தடுமாற்றங்கள்
ஹல்க் எல்லோரிடமும் திமிருடன்
முஷ்டியை முறுக்குவதில்லை…
அவனின் தசைகள்
இயல்பிலேயே இறுகித்தான்
இருக்கிறது…
இது புரியாத ஸ்பைடர் மேன்கள்
தங்கள் வலைகளுடனும்,
இன்னபிற தற்காப்புக் கருவிகளுடனுமே
அவனை எப்போதும் அணுகுகிறார்கள்…
ஹல்க் எவ்வளவுதான்
அன்புடன் பழக அணுகினாலும்
அவனை
சந்தேகக்கண்ணுடனே
ஸ்பைடர்மேன்கள் எதிர்கொள்கிறார்கள்….
ஹல்க் நட்புக்கரமே நீட்டினாலும்
பதிலுக்கு ஸ்பைடர்மேன்கள்
துப்பாக்கியையே காட்டுகிறார்கள்…
ஹல்க்
எத்தனை தான் இறங்கி வந்தாலும்
அது
ஸ்பைடர்மேன்களுக்கு
எட்டாத உயரமாகவே இருக்கிறது…
நெகிழ வேண்டிய இடத்து
இறுகிய தசைகளுடனும்,
வன்மம் கொள்ள வேண்டிய இடத்து
இறங்கி வந்தும்
எப்போது எவ்விதம் இயங்கவேண்டுமென
ஹல்க் தடுமாறுகிறான்…
அவனது அந்தத் தடுமாற்றத்தையும் கூட
அவனது இறுகிய தசைகள்
மொத்தமாக விழுங்கி செரித்துவிடுகிறது….