
1. ஓட்டுக்கண்ணாடி வழி
ஊடுருவிய சூரியன்
அம்மாவின் இடத்தை
பிடித்துக்கொண்டது
பொழுதுசாய்வதற்குள்
ஒற்றைச் சேலையை நெய்தது
வாரநாள் முடிவில்
வரவுசெலவு கணக்கு தீர்க்க
அப்பன் கொண்டுபோன சேலையிலொன்று காணமல்போனது
சூரியன்மீது சந்தேகம்
சந்தேகம் உண்மையானது
ஆம், அன்று சூரியகிரகணம்.
2. பாண்டிநாட்டில் சேலை விற்கப்போன
தாத்தாவைக் காணவில்லை
சூரியன் கடத்தியிருக்கலாம்.
3. அழகர்மலை கல்வெட்டிலிருக்கும்
அறுவை வணிகன்
தொலைத்த காழகம்
கொடுமணலில்தான் இருக்குமோ?
சொல் மதுரைக்காஞ்சியே…
நானும்
தலையானங்கானத்து செருவென்றவன் சந்ததியின் மிச்சம்தான்.
4. அப்பாவின் வேட்டியில்
தூமைத்துணி அளவிற்கான
பகுதியை யாரோ வெட்டியிருக்கிறார்கள்
நெடுஞ்செழியனே
உன் மனைவியின் யோனியை
சோதிப்பாயாக.
5. பல
..டட்டக் டட்டக் டட்டக் டட்டக் டட்டக் டட்டக்..
ஒரு நூற்சேலை தயார்.
6. புற்களுக்காக அலைந்த பசுவொன்று
என் வீட்டினுள் நுழைந்தது
பாவோ(ட்)டி கொடுத்துப்போன
பச்சைநிற ஊடைநூலை
மேய்ந்து தள்ளியது
துடைப்பம் கொண்டு
சாபம்விட்டபடி துரத்தியடித்தாள் அம்மா
‘ஆசேந்தவழி மாசேப்ப’
மாங்குடி மருதனின் இவ்வாக்கு பலிக்க…
7. என்ன செய்யலாம்?
தறி ஓட்டலாம்…
8. ஐம்பது வயதில் அம்மா கர்ப்பமாயிருந்தாள்
அவமானப்பட இதிலே என்ன இருக்கிறது
அழகான ஒரு தறியை ஈன்றெடுத்தாள்.
9. சாயக்காரனிடம்
சிகப்பு வண்ணம் பற்றாக்குறை
மாதவிடாயிலிருந்த மகளை
சாயத்தொட்டிக்குள் அனுப்பி வைக்க
‘செந்துவர்’ வண்ண நூல் தயார்.
10. கரிசல்மண்ணின்
‘நெய்தல்’வாசி
நாங்கள்.