கவிதைகள்
Trending

கொரோனா கால வரிகளும், கோடுகளும்

கவிதைகள்: லீனா மணிமேகலை ஓவியங்கள்: மணிவண்ணன்

கவிதை 1:

சற்றும் இறக்கி வைக்கமுடியாமல்
மடியில் அவ்வளவு கனத்துடன் அமர்ந்திருக்கும்
காலத்தின்
தலையை சற்று தடவி தந்தால்
இடுப்பில் ஏறி உட்கார்ந்துக் கொண்டு
முலைப்பால் கேட்கிறது
சரி போகட்டும் என நெஞ்சோடு புதைத்தால்
வயிறு முட்டப் பால் குடித்த
குழந்தையின் மதமதர்ப்போடு
முதுகில் தொற்றிக்கொண்டு யானை விளையாட்டுக்கு வா என்கிறது
முட்டி தேய தவழ்ந்துக் கொடுத்து
சிரிப்புக் காட்ட காட்ட
விடுவேனா என காலைக்கட்டிக் கொண்டு
செல்லம் கொஞ்சுகிறது
குழந்தையைப் பறவையாய்
மாற்றிவிடும் மந்திரம் தெரிந்த
மூதாதை யாரையாவது அறிந்திருந்தால்
தயவுசெய்து சொல்லியனுப்புங்கள்
காலத்திற்கு தாயாய் இருப்பது
களைப்பாய் இருக்கிறது.

**கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் முடக்கப்பட்டுள்ளன. தொற்றின் பரவல் தீவிரமாக உள்ளதால் இந்தியாவில் மார்ச் 25-ல் தொடங்கிய ஊரடங்கு உத்தரவு நான்காவது முறையாக மே இறுதி வரை நீட்டிக்கப்படுகிறது.

கவிதை 2:

நடக்க நடக்க வீடு தொலைவாகிக் கொண்டே போகும்
ஒரு கொடுங்காலப் பொழுதில்
அரசர்களாலும் கடவுளர்களாலும் கைவிடப்பட்ட
பசித்த கால்களைத் தாங்கிக் கொள்ள
ஒரு மந்திரக் கம்பளம் வேண்டி
தேம்புகிறது கையாலாகாத கவிமனம்
பொதியும் சுமையுமாய்
குழந்தையின் கொதிக்கும்
பாதமொன்று நிழல்தேட
இளைப்பாறலுக்காவது பயன்படட்டுமென
என்  இரு கைகளையும் நீட்டுகிறேன்.

**முன் எச்சரிக்கை எதுவும் இல்லாமலும், கவனமான முன்னேற்பாடுகள் எதையும் செய்யாமலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 24 அன்று அறிவித்த ஊரடங்கு உத்தரவால், பட்டினியாலும், பணப்பற்றாக் குறையாலும் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் நகரங்களில் இருந்து வெளியேறி பல நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தங்கள் சொந்த கிராமங்களுக்கு நடந்தே செல்லத் தொடங்கினர்.

கவிதை 3:

தன் கூட்டை தலையில் சுமந்துக் கொண்டு செல்லும் தாய்மரம்
வேர்களையும் இழுத்துச் செல்கிறது
மிகக் கூடிய விரைவில்
புவியின் ஓடு பிளந்து
கற்குழம்புகள் வெடித்து
ஒருவேளை வைரஸ் விட்டுவைக்கும்
அரசர்களையும் அரசவைகளையும்
பூண்டோடு புதைக்கும்.

**ரமேஷ் மினா என்ற ஆதிவாசித் தொழிலாளி அகமதாபாத்திலிருந்து 200 கிமீ தொலைவில் இருக்கும் தன் ஊருக்கு கால் ஒடிந்த மனைவியை தன தலை மேல் சுமந்து நடந்தே சென்ற காட்சி, இந்திய- பாகிஸ்தான்-வங்கப் பிரிவினையின் போது நடைபெற்ற கொடூரமான மனித இடப்பெயர்வுகளுக்கு அடுத்து தற்போது கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக கொத்து கொத்தாய் இடப்பெயர்வுகள் நடைபெறுவதற்கு சாட்சி.

கவிதை 4:

தொடும்தூரத்தில் யாருமில்லாது
பாதரசமாய் மனம்
விண்ணுக்கும் மண்ணுக்கும்
தளும்புகிறது
தனித்த இருப்பின்
சிறு கேவல்
சுவர்களுக்குத் தப்பி
ஆளில்லா தெருக்களில்
ஆவியாய் சுற்றுகிறது
உங்கள் கதவை தட்ட நேர்ந்தால்
ஒரு இறுக கட்டிய
அணைப்பின் கதகதப்பையும்
முத்தத்தின் ஈரத்தையும்
தோலின் ப்ரிய மணத்தையும்
எந்தப் பையிலாவது அடைத்து அனுப்புங்கள்
முகக்கவசங்களையும் சானிடைசர்களையும்
கைவிடும் நாட்களுக்கான சாத்தியத்தை அடைகாத்துக் கொண்டிருக்கும்
எனக்கு வேண்டும்
உங்கள் அன்பின் நீருபூத்த சூடு.

**புதிய நோய், புதிய சொற்கள்.
Virus – தீ நுண்மம்
Social Distancing – சமூக விலகல்
Quarantine – தனிமைப்படுத்துதல்
Herd Immunity – குழு நோய் எதிர்ப்பு சக்தி

கவிதை 5:

i) என் ப்ரியனுக்கு,
நீ என்னை நினைக்கிறாயா
எனக்கு உன் நினைப்பில் தான் நாட்களை மடிப்பதும் பிரிப்பதும்
எதை தடவிப் பார்த்தாலும் ஈரமாயிருக்கிறது.
ஆனாலும் என் இடது கண்ணின் வலதோரம் கிழக்கு பார்த்துக் கொண்டிருக்கிற இமை முடி உன் முத்தம் கேட்டு வதைக்கிறது
ஊரடங்கு முடியும் வரை உதிராமல் இருக்குமா என்று தெரியவில்லை.
வந்துவிடு.

ii) நாம் கூடியிருந்த அந்த கடைசி இரவு
உலர மறுக்கும் ஓவியப்பிரதியென
சொட்டியபடியிருக்கிறது
காற்றுப் படாமல் அவ்வளவு பத்திரமாக என் நெஞ்சுக் கூட்டின் ஏழாவது எலும்பின் மஜ்ஜைக்குள்
இப்போதைக்கு வைத்திருக்கிறேன்
வைரஸ் அங்கேயும் ஊடுறுவி விடுமா என்ற கவலையில்
இணையத்தில் இருக்கும் செய்திக் கட்டுரைகளை ஒன்றுவிடாமல்
பித்துப்பிடித்து வாசிக்கிறேன்.
வண்ணங்கள் வடிந்து முடிவதற்குள்
தொட்டு விடு.

iii) நீ என்னை மடியில் உட்கார வைத்த போதெல்லாம்
உனக்கு கனக்க கூடாதென்று
பருத்திச் செடியாக மாறுவேன்
உனக்கது தெரிந்ததே இல்லை
புணர்ந்தடர்ந்து சாயும்போது
பருத்திக் காய்கள் சடசடவென
வெடிக்கும்
உனக்கது கேட்டதும் இல்லை
எல்லாம் அடங்கியிருக்கும்
இந்த நாட்களில்
எப்போதும் சாத்தியிருக்கிற
அந்த சன்னலை திறந்துப்பார்
வெறும் பருத்திக்காடு
நோய் கொண்டு போகப் போகிறதாம்
கலந்து விடு.

iv) நீ என் மார்பைத் தீண்ட தீண்ட
ஊர்க்குருவிகளாகத் திரிந்துக் கொண்டிருந்த இரண்டும்
ராஜாளிகளாக மாறி ஊர்கோலம் போயின
பறந்த வேகத்தில்
மேகங்களோடு
மோதி திரண்டு பெறுகியதில்
மழையாய் கொட்டி முடித்தோம்
அதே மயக்கத்தில்
இது ஒரு தீவினைக்காலமென்றுப் புரியாமல்
சதா ஈரக்காற்று கேட்கிற
சதுப்புக்கு
சமாதானம்
சொல்ல முடியவில்லை
காத்திருப்பு காலம் பெரும் மோசடி
பதில் சொல்லிவிடு

v) மழை ஓய்ந்தது
அணைத்தும் மல்லாந்தும் படுத்திருந்தோம்
கீழே பூமியும் இல்லை
மேலே வானமும் இல்லை
சுற்றிக் கடலும் இல்லை
தூரத்தில் மலையும் இல்லை
காலக் கம்பளம் நம்மை
ஏதோவொரு பால்வெளியில்
பெயரற்றுப் போன நட்சத்திரங்களாக
கிடத்தியிருந்தது
தீர தீர எரிய வேண்டும்
மூச்சுக் குழாய்களை அடைக்கும் தீ நுண்மமென்றாலும்
உன்னை மட்டும் அனுமதிப்பேன்
தொற்றிவிடு.

**கொரோனா கொள்ளை நோய் பரவுதலை தடுக்கும்பொருட்டு வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்பியவர்களையும், சொந்த ஊருக்கு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களையும் தனிமைப் படுத்தி பரிசோதிப்பதை கட்டாயப் படுத்தியிருக்கிறது மத்திய சுகாதாரத் துறை.

கவிதை 6:

கைகளைக் கழுவினேன்
என் பெரிய அவ்வா இறப்பதற்கு முன் பரிசளித்த செம்பு விளக்குகளை
அவ்வளவு பத்திரமாய் கழுவுவதைப் போல
உடல் சுகவீனமான காதலியின் கூந்தலை வகிடு பிரித்து சிக்கெடுத்து
வெந்நீர் விட்டுக் கழுவுவதைப் போல
குல தெய்வங்களின் உடல்களை
தேரோட்டம் போவதற்கு முன்
சந்தனம் தேய்த்து கழுவுவதைப் போல
பிறந்த குழந்தையின் பச்சை உடலை
கால்களில் கிடத்தி உறுப்புகளை மெல்ல தட்டிக் கொடுத்து மென்தசைகளால்
அதி ஆதுரமாய் கழுவுவதைப் போல
மேற்கு தொடர்ச்சி மலையின் அத்திமரக் காடுகளின் அடர்வைக் கடந்து அட்டைகளுக்கு ரத்தம் ஈந்து
பள்ளிக்கால நண்பன் கொண்டுவந்த
ஏழுகன்னிமார் தெப்பத்தின் தாமிரச்
சுனைநீர் கொண்டு கழுவுவதைப் போல
ஆயுளும்
வாழ்வின் அதிசயமுமாய்
ஒரு பிரார்த்தனையைப் போல
வழியும் நீரில்
கைகளைக் கழுவிக் கொள்ள
எனக்கிருப்பது போல
உங்களுக்குமிருக்கும்
ஆயிரம் நினைவுகள்.

**கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தும்மும் போதும் அல்லது இருமும் போதும் வெளிப்படும் நீர்த்திவளைகள் பொருட்கள் மீது படுகின்றன. நாட்கணக்கில் படிந்திருக்கும் அக்கிருமிகளை யாராவது தொட்டால் அவர்களுக்கும் தொற்றி விடுகிறது. அதனால் கைகளை சுத்தமான நீரில் அடிக்கடி நன்றாக கழுவி வர வேண்டும்.

கவிதை 7:

முகக் கவசங்கள் அணிவது
அவசியமானது என்றானபின்
எல்லோரையும் அவ்வளவு துல்லியமாக
அடையாளம் தெரிகிறது
எனக்கே என்னையும் கூட
மிக அவசியமானதைப் பேசிக் கொள்ளக்கூட
சமிக்ஞை மொழி தான் என்றாலும்
சற்று அதிகப்படியாகவே புரிகிறது
பேச நினைத்து சொற்கள் கூடாதவை கூட
அருகாமையில் தூரம் என்கிற
இத்தீ நுண்மக் காலத்தின்
புதிய வாதையைக் குறைக்க
புலன்கள் படும் பாட்டில்
உடலின் பாகங்களிலிருந்து
அமானுஷ்யக் கைகள் நீண்டு
தம்மைத் தாமே தீண்டிக் கொள்கின்றன.

**கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து, முகக்கவசம் அணிவது பல உலக நகரங்களில் கட்டாயமாகி இருக்கிறது.அப்படி அணியவில்லை என்றால் வித்தியாசமாக பார்ப்பதும் சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்கள் போல நடத்துவதும் அதிகரித்துள்ளது.

ஓவியர் மணிவண்ணன்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button