கடலும் மனிதனும்: 7- “ரிஸ்க்கு எடுக்குறதெல்லாம் ரஸ்க்கு சாப்பிடுறமாதிரி”
-நாராயணி சுப்ரமணியன்

தனது கூர்மையான கத்தியை அவர் கையில் எடுக்கிறார். விநோதமான தோற்றம் கொண்ட ஒரு மீனின் செதில்களை நீக்கி உப்பு நீரில் கழுவுகிறார்.அதன் கண்கள், இனப்பெருக்க உறுப்புகள் ஆகியவற்றை ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் துல்லியத்தோடு தனியாகப் பிரித்தெடுக்கிறார். அவற்றை வேறு ஒரு தட்டில் வைக்கிறார். அந்தத் தட்டில் எச்சரிக்கை வாசகம் ஒன்று ஒட்டப்படுகிறது.
அந்தத் தட்டிலுள்ள உறுப்புக்கள் தனியாக எடுத்து ஒரு பெட்டியில் வைக்கப்படுகின்றன. பெட்டி உடனடியாகப் பூட்டப்படுகிறது. கதிர்வீச்சு நிறைந்த ஒரு பொருளைப் போல அது கவனத்துடன் கையாளப்படுகிறது. அந்த நாளின் முடிவில் எரியூட்டும் இயந்திரத்தில் அந்த உறுப்புகள் கவனமாக எரிக்கப்படுகின்றன. அதைக் கையாளும் அனைவருமே கையுறை அணிந்திருக்கிறார்கள்.
ஏதோ அறிவியல் புனைவில் வருகிற ஒரு ஆராய்ச்சிக்கூடத்தின் காட்சியைப் போல இருக்கிறதா? ஜப்பானில் சில உணவகங்களின் தினசரி வழக்கம் இது. இந்த வழக்கத்தில் இம்மியளவு கவனக்குறைவு ஏற்பட்டாலும் உயிரிழப்பு நிகழ்ந்துவிடும்!
இத்தனை கவனமாகக் கையாளப்படும் மீனின் ஜப்பானியப் பெயர் ஃபூகூ (Fugu). ஆங்கிலத்தில் pufferfish, blowfish என்று இதற்குப் பல பெயர்கள் உண்டு. தமிழ்நாட்டில் இந்த மீன் “பேத்தை” என்று அழைக்கப்படுகிறது. மீனவர்கள் செல்லமாக “ஆங்க்ரி பேர்ட் மீன்” என்றும் அழைக்கிறார்கள். ஆபத்து வரும்போது பலூன் போல உப்பி தன்னைக் காத்துக் கொள்வதால் ‘பலூன் மீன்’ என்றும் சிலர் சொல்வார்கள். ஜப்பானிய மொழியில் “டெப்போ” என்றால் துப்பாக்கி என்று பொருள். டெப்போ என்றும் இந்த மீன் அழைக்கப்படுகிறது.
இது விஷத்தன்மை நிறைந்த ஒரு மீன். இதில் 120 வகைகள் உண்டு. கடலிலும் கழிமுகங்களிலும் வசிக்கும். எகிப்தின் நைல் நதியில் கூட இந்த மீன் இருந்ததாக சில பழங்கால ஓவியங்கள் சொல்கின்றன.
“விஷம்/நஞ்சு/நச்சு” என்ற சொற்கள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன என்றாலும் பாம்பின் விஷமும் ஒரு தாவரத்தின்/உணவின் விஷமும் ஒன்றல்ல. பாம்பு கொத்தினால்/ தேள் கடித்தால் அந்த விஷம் நமக்குள் செலுத்தப்படுகிறது. பாம்பின் தசைப்பகுதியிலோ தேளின் உடலிலோ அந்த விஷம் இருக்காது. இதுபோன்ற நச்சுத்தன்மை venom என்று அழைக்கப்படுகிறது.
விஷத்தாவரத்தில் இருக்கும் நச்சுத்தன்மை வேறு. அது poison என்று அழைக்கப்படுகிறது. அந்தத் தாவரத்தின் உடல் முழுவதும் விஷம் உண்டு. அதை சாப்பிட்டால் ஆபத்துதான். இதை சுலபமாக நினைவில் வைத்துக்கொள்வதற்கு ஆங்கிலத்தில் ஒரு பிரபலமான சொல்லாடல் உண்டு :
“அது உன்னைக் கடித்து நீ இறந்தால் அதற்குப் பெயர் venom. நீ அதை (உணவுக்காக) கடித்து, பிறகு நீ இறந்தால் அதற்குப் பெயர் poison”.
பலூன் மீன் இரண்டாவது வகை. ஆனால் அந்த மீனின் உடல் முழுவதுமே தீவிரமான விஷம் பரவி இருக்காது. ஈரலிலும் இனப்பெருக்க உறுப்புகளிலுமே விஷம் அதிகம். அதனால்தான் அவை உணவாகப் பரிமாறப்படுவதில்லை.
கி.மு பத்தாயிரத்தின்போதே இந்த மீனை மனிதர்கள் அறிந்திருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் உண்டு. இந்த மீன் பற்றிய முதல் குறிப்பு கி.மு.726ல் எழுதப்பட்டது.
மன்னருக்கு ஊழியம் செய்பவர்களில் எவரேனும் இந்த மீனை சாப்பிட்டு இறந்துவிட்டால் அந்த வம்சத்தையே பூண்டோடு அழிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்கு சொல்லப்பட்ட காரணம் இதுதான் :
“கடமையை மறந்து ருசிக்கு அடிமையாகும் தீனிப் பண்டாரத்தின் வம்சம் உயிரோடு இருக்கக்கூடாது!”
1570ல் பலர் இந்த மீனை சமைக்கத் தெரியாமல் சமைத்து இறந்துபோனார்கள். அப்போது இருந்த தலைவர் ஹிடியோஷி டோட்டொயோமி இந்த மீன் சாப்பிடுவதற்கு நாடு முழுவதும் தடை விதித்தார்.
பல நூற்றாண்டுகளுக்குத் தடை அமலில் இருந்தது. 1885ல் ஜப்பானின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்றார் இடோ ஹிரோபூமி. நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஷிமோனோசெகி என்ற இடத்துக்கு அவர் சென்றிருந்தபோது அங்கே எதுவும் கிடைக்காததால் வேறு வழியின்றி இந்த பலூன் மீன் அவருக்கு உணவாகப் பரிமாறப்பட்டது. மீனை ரசித்து சாப்பிட்ட இடோ, “ஏன் இது வேறு எங்கும் கிடைப்பதில்லை?” என்று விசாரித்தார். இந்த மீனை சாப்பிடுவது தடை செய்யப்பட்டிருக்கிறது என்று மக்கள் விவரித்தார்கள். மீனின் சுவையில் மயங்கிய இடோ உடனடியாகத் தடையை நீக்கினார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் வந்த உணவுப் பஞ்சத்தில் இந்த மீன் அதிகமாக சாப்பிடப்பட்டது. சரியான முறையில் உறுப்புகளை வெட்டாததால் மீனை சாப்பிட்ட பலர் இறந்தார்கள். 1975 “ஜப்பானின் தேசியப் பொக்கிஷம்” என்று பாராட்டப்பட்ட கபூகி நாடக நடிகர் பாண்டோ மிட்சுகோரோக் தெரிந்தே இந்த மீனின் ஈரலை அதன் ருசிக்காக சாப்பிட்டு சில மணி நேரங்களில் இறந்தார். அது இன்றும் பேசப்படுகிற ஒரு செய்தி.
இந்த மீனின் விஷம் பல இலக்கியங்களில் இடம் பிடித்திருக்கிறது. “அவளைப் பார்க்க முடியவில்லை. அவள் என்னைப் பிரிந்துவிட்டாள். ஆகவே ஃபூகூ உணவு சாப்பிடப்போகிறேன்” என்று எழுதுகிறார் ஜப்பானியக் கவிஞர் டோசா பூசான். இந்த விஷத்தின் அளவு கம்மியாக இருந்தால் அதை சாப்பிடுபவர்கள் இறப்புக்கும் உயிர்ப்புக்கும் இடையில் ஒரு ஜாம்பியைப் போல மாறிவிடுவார்கள். “ஷேக்ஸ்பியர் எழுதிய ரோமியோ ஜூலியட் நாடகத்தில் ஜூலியட்டுக்கும் ஒரு ஜாம்பி நிலை ஏற்படும். அது இந்த விஷத்தால்தான் ஏற்பட்டிருக்குமோ?” என்று இன்னும் விவாதிக்கிறார்கள் ஆங்கில இலக்கிய வல்லுநர்கள். “ஜேம்ஸ் பாண்டுக்கு இந்த மீனை உண்ணக் கொடுத்து அவரைக் கொல்ல எதிரிகள் முயற்சி செய்தார்கள்” என்று தன் நாவலில் எழுதுகிறார் இயான் ஃப்ளமிங்.
இந்த விஷத்தால் அப்படி என்னதான் ஆகும்?
இந்த மீனின் உடலில் உள்ள விஷத்துக்குப் பெயர் Tetrodotoxin (TTX). சயனைடை விட ஆயிரம் மடங்கு நச்சுத்தன்மை வாய்ந்தது. 2 மில்லிகிராம் அளவுக்கு இருந்தாலே மனிதனைக் கொன்றுவிடும். சாப்பிட்ட சில நிமிடங்களில் உதடுகள், முகம் எல்லாம் மரத்துப் போகும். வயிற்று உபாதைகள் வரும், பக்கவாதம் வந்து உடல் செயலிழக்கும். நான்கு அல்லது ஆறு மணி நேரத்துக்குள் உயிரிழப்பு நிச்சயம்.
ஆபத்துகள் நிறைந்த மீன் என்பதால் இந்த மீனை சமைப்பதற்கும் பல விதிமுறைகள் உண்டு. எல்லாரும் ஃபூகூ சமைப்பவர்களாகிவிட முடியாது. 11 வருடம் அனுபவம் உள்ள சமையற்கலை வல்லுநர்கள் மூன்று வருடம் சிறப்புப் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். பயிற்சியின் முடிவில் தேர்வு வைக்கப்படும். முதல்நாள் இரண்டு மணி நேரத்துக்கு எழுத்துத் தேர்வு. எழுத்துத் தேர்வில் பயிற்சி பெற்றால் மறுநாள் செய்முறைத் தேர்வு.
செய்முறைத் தேர்வின்போது ஒரு பலூன் மீன், அதற்கான சிறப்புக் கத்தி ஒன்று, இரண்டு பாத்திரங்கள் ஆகியவை தரப்படும். 20 நிமிடங்களுக்குள் மீனை வெட்டி, சாப்பிடக்கூடிய தசைப்பகுதிகளை ஒரு பாத்திரத்திலும், விஷ உறுப்புக்களை தனிப்பாத்திரத்திலும் வைக்க வேண்டும். விஷப் பாத்திரத்தில் சிவப்பு நிற ஸ்டிக்கரையும் இன்னொரு பாத்திரத்தில் கறுப்பு ஸ்டிக்கரையும் ஒட்ட வேண்டும்.
இனப்பெருக்க உறுப்புக்களில் ஆண்மீனின் விந்தகம் மிகவும் ருசியானது; சாப்பிடத்தகுந்தது. பெண்ணின் அண்டகம் விஷத்தன்மை வாய்ந்தது. ஆனால் இரண்டுமே பார்க்க ஒரே மாதிரியாகத்தான் தெரியும். சாப்பிடவேண்டிய உறுப்பை விஷத்தோடு சேர்த்தாலும், விஷ உறுப்பை சாப்பிடும் பாத்திரத்தில் போட்டுவிட்டாலும் ஆபத்துதான்! எல்லாவற்றையும் சரியாகச் செய்தால் தேர்வில் வெற்றி பெற்றவருக்கு இந்த மீனை சமைக்க சிறப்பு அனுமதி உரிமம் வழங்கப்படும்.
தேர்வில் வெற்றி பெற்று உரிமம் வைத்திருப்பவர் மட்டுமே இந்த மீனைக் கையாள வேண்டும். தேர்வில் வெற்றி பெற்ற பிறகும் ஒவ்வொரு நாளும் கவனக்குறைவுகள் எதுவுமின்றி தன் வேலையை செய்யவேண்டும். ஒருவேளை தாங்கள் சமைத்த பலூன் மீன் உணவை சாப்பிட்டு எவரேனும் இறந்துவிட்டால் அந்த பலூன் மீனை வெட்டிய கத்தியாலேயே கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளும் வழக்கமும் ஒரு காலத்தில் இருந்ததாம்!
கழுத்து வரை மணலில் புதைத்துக்கொண்டால் இந்த மீனின் விஷம் இறங்கிவிடும் என்ற மூடநம்பிக்கை கூட ஒரு காலத்தில் இருந்தது. இப்போது வரை இந்த மீனுக்கான விஷமுறிவு கண்டுபிடிக்கப்படவில்லை. பொதுவாகக் குளிர்காலங்களில் இந்த மீன் இனப்பெருக்கம் செய்யும். அப்போது விஷத்தின் வீரியம் குறைவாக இருக்கும் என்பதால் இந்த மீன் குளிர்காலங்களில்தான் உணவகங்களில் விற்கப்படுகிறது.
இத்தனை ரிஸ்க் எடுத்து இந்த மீனை சாப்பிடவேண்டுமா?
“சாப்பிடத்தான் வேண்டும்” என்கிறார்கள் சாகசப் பிரியர்கள். “இந்த மீனின் மெல்லிதான விஷத்தன்மையால் வாயில், நாக்கில் ஒரு சின்ன குறுகுறுப்பு வரும். அந்த சுவையே தனி” என்று சப்புக்கொட்டுகிறார்கள். இந்த மீனின் துடுப்புகளை காரமான சாஸில் சேர்த்து சாப்பிட்டால் சின்ன ஒரு போதைகூட வரும் என்கிறார்கள். “மீனின் தசையில் உள்ள கொலாஜன் நமது தோலுக்கு நல்லது, அது இளமையான தோற்றத்தைத் தரும்” என்கிறார்கள். “ஃபூகூவின் விஷ உறுப்புக்குப் பக்கத்தில் இருக்கிற தசைக்குத்தானே ருசி அதிகம்” என்கிறார் புகழ்பெற்ற நாவலாசிரியர் ஹருகி முரகாமி. ஃபூகூ உணவு சாப்பிட யாராவது அழைத்தால், அந்த அழைப்பை நாம் ஏற்றுக்கொள்வது அவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு அடையாளம்!
“சஷீமி” என்பது ஜப்பானின் புகழ்பெற்ற உணவு. மீனின் தசையை மிகவும் மெல்லியதாக வெட்டி, பச்சையாகப் பரிமாறுவது சஷீமி எனப்படும். சஷீமியைப் பரிமாறும்போது அந்தத் தசைத் துண்டுகளை அலங்காரமாக அடுக்கி வைப்பார்கள். பலூன் மீனின் சஷீமி பொதுவாக சாமந்திப் பூவின் வடிவத்தில் அலங்கரிக்கப்படுகிறது. சாமந்தி என்பது ஜப்பானிய இறுதிச் சடங்குகளுக்கான மலராம்!
பொதுமக்கள் ரசித்து ருசித்து இதை சாப்பிட்டாலும் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஜப்பானிய அரசருக்கு இந்த மீனை சாப்பிட அனுமதி இல்லை. வீட்டிலேயே இந்த மீனை சமைக்க முயற்சி செய்து, தவறுதலாக ஈரலையும் வெட்டி சாப்பிட்டு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள்.விதிமுறைகளை மீறி இந்த மீன்களை விற்பவர்களுக்கு சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது. மீனை சாப்பிட்டு எவராவது இறந்தால் சம்பந்தப்பட்ட உணவகங்கள்மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இப்போது புதிய பிரச்சனை ஒன்றும் முளைத்திருக்கிறது. காலநிலை மாற்றத்தால் கடல்நீரின் வெப்பநிலையும் மாறியிருக்கிறது. குளிரான நீரை நோக்கி இந்த மீன்கள் நகர்ந்து செல்வதால் அங்கே இருக்கும் வேற்று இன பலூன் மீன்களோடு கலப்பு ஏற்படுகிறது. இந்தக் கலப்பினங்களின் விஷத்தன்மை பற்றி இன்னும் எதுவும் நமக்குத் தெரியாது என்பதால் கலப்பினங்களை விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
2004 நாகசாகி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் விஷத்தன்மை இல்லாத பலூன் மீன்களை உருவாக்கிக் காட்டினார்கள். இது ஆராய்ச்சிக்கூடங்களில் உருவாக்கப்படும் மீன் என்பதால் இதன் விலை கொஞ்சம் அதிகம் என்றாலும் விஷத்தினால் வரும் ஆபத்து இல்லை என்று விளக்கினார்கள்.
அதற்குப் பொதுமக்களின் எதிர்வினை என்ன தெரியுமா?
“விஷத்தன்மை உள்ள மீன் என்பதால்தான் அதை சாப்பிடுவதில் எங்களுக்கு ஒரு சாகச உணர்வே வருகிறது. அதிலிருக்கிற ரிஸ்க்தான் தனி ருசி. விஷத்தன்மை இல்லாத மீன் என்பது வாள் இல்லாத சாமுராய் வீரனைப் போல!”
இந்த சாகசங்கள் ஒருபக்கம் இருக்க, இந்த விஷத்தின் மூலப்பொருட்களை வலி நிவாரண மருந்தாகப் பயன்படுத்துவது பற்றிய ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. “ஒருவருக்கு விஷமாகத் தெரிவது வேறொருவருக்கு த்ரில்லாகத் தெரிகிறது. எங்களுக்கோ அது மருந்தாகத் தெரிகிறது” என்கிறார்கள் அறிவியலாளர்கள். ஒரு தட்டு மீன் உணவுக்காக உயிரையே பணயம் வைக்கத் தயாராக இருக்கும் சாகசப் பிரியர்களின் உளவியல் விநோதமானதுதான்!
பலூன்மீனைப் போல நம்மை வீழ்த்தும் மீன்கள் ஒருபக்கம் என்றால், சில கடல்வாழ் உயிரிகளால் மனிதன் மெய்மறந்த கதையும் உண்டு. அது என்ன?
தொடரும்…