இணைய இதழ் 95கட்டுரைகள்

லாபட்டா லேடீஸ் – ராணி கணேஷ்

கட்டுரை | வாசகசாலை

இந்தப் படத்தைக் குறித்த நல்ல விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. அப்படி என்ன இருக்கிறது இந்தப் படத்தில்? ஏன் பரவலாக எல்லோராலும் பாரட்டப்படுகிறது? மனைவியைத் தொலைத்து விட்டு/ மாற்றி விட்டு தேடுவதுதான் கதை. ஏனெனில் தன் மனைவி என நினைத்து வேறொரு பெண்ணை மாற்றி அழைத்துக்கொண்டு போய்விடுகிறான் கணவன். இது எப்படி நடந்தது? ஏன் அவள் தொலைக்கப்பட்டாள் அல்லது ஆள்மாறாட்டம் எப்படி நடந்தது? இரண்டு பெண்களும் என்னவானார்கள்? தங்கள் அசல் கணவர்களுடன் சேர்ந்தார்களா? இதுதான் லாபட்டா லேடீஸ் படம்.

2003-ல் நடைபெறும் கதை. ரொம்பவே எளிமையான படம். பெரிதாக செலவில்லாமல் எடுக்கப்பட்ட படமாக இருக்கும். ஏனெனில் கல்யாணத்தைக்கூட பெரிதாக காட்டவில்லை. அந்த வகையில் செலவு மிச்சம்தானே. மணம்முடித்த தம்பதி ஊருக்கு கிளம்புவதில் துவங்குகிறது கதை. பஸ், ரயில் என பிராயாணம். மணமகள் முகத்தை முழுவதுமாய் மூடாக்கிட்டு மூடியிருக்கிறாள். ஒரே ரயில் பெட்டியில் மூன்று புதுமணத் தம்பதிகள். குழப்பம் வரத்தானே செய்யும்?

சென்ற வருடத்தில் ஊர் பழக்கவழக்கம் பற்றி பொதுவாக பேசிக்கொண்டிருக்கையில் பீகாரைச் சேர்ந்த ஒரு தோழி தங்கள் கிராமத்தில் சேலையால் முகம் முழுவதும் மூடியவண்ணம்தான் நடமாட முடியும் என்றார். முக்காடை முன்புறமாய் இழுத்து விட்டுக்கொள்வார்கள் என்றார். யாரையும் நேரடியாகப் பார்ப்பதில்லை என்றும், முந்தானையின் வழியாக நிழலாகத்தான் பார்ப்பார்கள் என்றும் தெரிவித்தார். வீட்டிற்கு யார் வந்தாலும் தங்கள் மூடப்பட்ட முகத்தையே காண்பார்கள் என்றார். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. வீட்டுக்குள்ளுமா என்று கேட்டபோது, மாமனார் முன்னிலையில் முகத்தை மூடியபடிதான் வரவேண்டும், பெரிதாக பிற வீட்டு ஆண்களோடு கூட பேச்சு வார்த்தை இருக்காது, சமயத்தில் ஏதேனும் கேட்டால், பதில் கூட கூறவும் இயலாது என்றார். இப்பொழுதும் இங்கே சாமி கும்பிடும் போதும் முக்காடு இட்டுக் கொள்கிறார்கள். ஊரில் தாங்கள் சுதந்திரமாக அடுப்படியில்தான் பழங்க முடியும் என்றும் கூறினார். சுதந்திரமாய் பழங்குவதாய் நம்ப வைத்து அடுக்களையிலேயே அடைத்து வைக்க நல்ல யுக்தி இல்லையா இது?!

அந்தக் காலத்தில் என்று கூறியிருந்தால் கூட பரவாயில்லை. 2023-ல் இப்படியா என்று வியப்பாக இருந்தது. அதுவும் வெளிநாட்டில் வசிக்கும் அந்தப் பெண் ஊருக்கு போகும் போது சிங்கப்பூரிலோ, டெல்லியிலோ சேலைக்கு மாறிவிட்டுதான் வீட்டுக்குப் போவேன் என்றும் கூறினார். வீட்டிற்கு போனபின் எந்நேரமும் புடவைதான் உடுத்த வேண்டும், முகத்தை மூடியவண்ணமே உலா வர வேண்டும் என்று கேட்கும் பொழுதே எனக்கு மூச்சு முட்டிக்கொண்டு வந்தது. எந்நேரமும் புடவையில் என்பதே என்னளவில் கடினம்; அதுவும், முகத்தை மூடிய வண்ணம் யாருக்கும் முகத்தைக் காட்டாமல், நேரடியாகப் பார்க்காமல் எப்படி உரையாடுவார்கள், எப்படி முடியும் என்று தவித்துப் போனேன். இஸ்லாமியப் பெண்கள் அப்படிதானே பழங்குகிறார்கள் என்ற எண்ணம் வராமல் இல்லை. ஆனால், அவர்கள் பார்ப்பதற்கு எந்த தடையும் இல்லை. தங்கள் கண்கள் வழி இவ்வுலகத்தை கண்டுகொண்டுதான் இருக்கிறார்கள். தோழி கூறிய மற்றொரு விஷயம், வீட்டு கல்யாணத்தில் கூட பெண்கள் பெரிதாக கலந்து கொள்ள மாட்டார்களாம். வயதானவர்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. சிறிய வயது பெண்களுக்கு அப்படி மனம் போல செல்ல வாய்க்காது. அவர்கள் பழக்கங்கள் அப்படி இருந்தன.

கொழுந்தனின் கல்யாணம் என்று இந்தியாவிற்குச் சென்றவள், அந்த கல்யாண புகைப்படத்தில் இல்லையே என்ற கேள்வியில் இருந்து துவங்கிதான் இந்தப் பழக்கம் தெரியவந்தது. அவள் கல்யாண மண்டபத்திற்கு செல்லாமல் வீட்டில்தான் இருந்திருக்கிறாள். அவள் வயது பெண்கள் யாரும் போகாத போது, தான் மட்டும் எப்படிப் போக முடியும் என்றாள். வீட்டு மருமகள் இல்லையா, அப்படிப் போக இயலாது என்றாள். நல்ல காலம் மணப்பெண்ணை அனுமதித்தார்கள் என்றேன். எதற்காக இத்தனை தூரம் மெனக்கிட்டு சென்றாய் என்று கடிந்துக் கொண்டேன். தெரிந்துதான் போனேன், பழகிவிட்டது, வீட்டு வழக்கம், ஊர் பழக்கம் என்ன செய்ய முடியும் என்றாள். அந்த நொடியில் எங்கள் வீட்டுக் கல்யாணங்கள் ஞாபகத்தில் வர நல்லவேளை தமிழ்நாட்டில் பிறந்தேன் என்று சந்தோஷப்பட்டுக்கொண்டேன். தமிழ்நாட்டிலும் இன்னமும் பின்தங்கிய கிராமங்கள் இருக்கக்கூடும். ஆனால், முக்கால்வாசிக்கும் அதிகமான இடங்களில் ஓரளவு கல்வி எல்லோர்க்கும் பொதுவாய் இருக்கிறது என்று நம்புகிறேன்.

லாபட்டா லேடீஸ் படம் பார்த்த போது நான் அதிசயித்துக் கேட்ட தோழியின் கதையை அவள் கூறிய வழக்கத்தை கண்ணுற முடிந்தது. முகத்தை முழுவதுமாய் மூடிக்கொண்டு ரயில் பயணம், யார் மனைவி யார் என்று புரிந்து கொள்ள முடியாத குழப்பம், வழக்கத்தின் பெயரில் கல்யாணப்புடவை மூன்று பெண்களுக்குமே நல்ல அடர்சிவப்பு நிறத்தில். இதனால் ஏற்படும் குழப்பம், அது தான் கதை.

இந்தப் படத்தில் மனைவியை தொலைத்த கணவன் தீபக், (ஆம், மனைவி ஒரு பொருள் போலத்தான் இருந்திருக்கிறாள்) அவன் நண்பன், குடிகார பணத்தாசை பிடித்த மற்றொரு பெண்ணின் கணவன், போலீஸ்காரர், ஸ்டேசன் மாஸ்டர், பிளாட்பார பிச்சைக்காரன், சோட்டு தவிர்த்து பெரிதும் கவனத்தை பெறும் பாத்திரங்கள் பெண்கள்தான். எல்லா பெண்களும் எதையோ சொல்லிச் செல்கிறார்கள்.

அவர்களில் ஆகச்சிறந்த பெண்ணாக மனதில் பதிவது ரயில்வே பிளாட்பார கடை நடத்தும் பாட்டி மஞ்சு மாய்தான். அவள் வசனங்கள் அனைத்துமே சிறப்பு. முகத்தை மூடிக்கொண்டு அலையும் அதே ஊரில்தான் அவள் தன் வயிற்றுப்பாட்டுக்கு மல்லடிக்கிறாள் ஒற்றை பெண்ணாக. அவளோடு நிற்கையில் நாயகி ஃபூல் முகத்தை மூடிக்கொண்டிருக்க வில்லை. எங்கு வளர்கிறோம் என்பது நமது செய்கையிலும் வெளிப்படும்தானே. மஞ்சுமாய் கற்றுக்கொடுக்கும் வாழ்க்கைப் பாடம் ஒவ்வொரு தாயும் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டியது.

இப்பொழுதும் சில கிராமங்களில் பெண்களுக்கான வரைமுறைகளை அழிக்க இயலாத மையினால் தீட்டி வைத்திருக்கிறார்கள். வெகுசில பெண்களாலேயே அதனை முழுக்க அழிக்க முடியாவிட்டாலும், தனக்கு விருப்பமான ஓவியமாய் அதனை மாற்றி வரைந்து கொள்ள முடிகிறது. 2024-ல் கூட இப்படியான கட்டுபெட்டித்தனத்திற்குள் உழலும் பெண்கள் இருக்கையில், 2003-ல் தான் வாழ்க்கைப்பட்டு போகும் ஊர் என்னவென சரியாகத் தெரியாமல் பூவின் பெயர் என்று மனதிற்குள் விளங்கி வைத்திருக்கும் ஃபூல் (மலர்) என்ற பெயர் கொண்ட சின்னஞ்சிறு பெண் அறியாமல் முழிப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

யாரையும் தெரியாத இடத்தில் கணவனைப் பிரிந்து அவள் தவிக்கும் காட்சி, திருவிழாவில் அம்மாவை தொலைத்த குழந்தையை ஞாபகப்படுத்துகிறது. கணவன் பெயரை ஸ்டேசன் மாஸ்டரிடம் சொல்லத் தயங்கும் அதே பெண்தான் ரயில்வே ஸ்டேசனில் கணவனை அவசரமாய் பெயர் சொல்லி அழைக்கிறாள். மாயி போன்ற ஒரு தாய் கொடுக்கும் ஊக்கம், தொலைந்து போனவள் தன் ஊரைத் தேடி தனியாகப் பயணிக்கும் அளவுக்கு அவளை தைரியமானவளாய் மாற்றுகிறது. அவள் தன் கணவனை கண்டடைகையில் அத்தனை ஆறுதலாக இருக்கிறது நமக்கும்.

முக்கியமான அடுத்த கதாபாத்திரம் புஷ்பா என்று பெயர் சொல்லிக்கொண்ட ஜெயா. நிறைய பெண்கள் திருமணத்தில் விருப்பம் இல்லாவிட்டாலும் பெற்றோரின் மிரட்டலுக்கு பயந்தே சம்மதிக்கின்றனர் இன்றளவிலும். அதிர்ஷ்டவசமாய் நல்ல கணவன் அமைந்தால் அவள் தன் கனவுகளை துரத்திச்செல்கிறாள். வானத்தை வசப்படுத்துகிறாள். எல்லாருக்கும் அப்படி அமைவதில்லை. சிலர் வாழ்க்கையோ ‘நானே உன் வாழ்க்கையை கொடுத்துவிட்டேனே’ என்று பெற்றோர் புலம்பும் நிலைதான். கல்வியின் முக்கியத்துவம் இப்போதுள்ள காலத்தில் எல்லோருக்கும் தெரிந்தாலும், திருமணம் என்ற சாகித்தியம் வாழ்வின் தவிர்க்கமுடியாத அங்கமென மாறி ஆசைகளை மனதிற்குள் அசைபோட மட்டுமே அனுமதிக்கிறது. யாரையும் இழுத்துக்கொண்டு வரும்முன், சீக்கிரமே கல்யாணம் செய்து கொடுத்து தங்கள் கடமையை முடித்து விடத் துடிக்கும் பெற்றோர்களுக்கு இடையே பெண்கள் விரும்பிய இடங்களுக்கு சென்று, விரும்பிய படிப்பை படிப்பது அத்தனை எளிதல்ல. பள்ளிக்குப் போய் படிப்பதென்பதே பெரும்பாடாய்தான் இருந்தது ஒரு காலத்தில். அதன் பின் பெரியவளானால் படிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு பனிரெண்டாம் வகுப்பு வரை படிப்பு நீண்டது, அதன் பின் ஒரு பட்டம் வாங்கிக்கொள்ள ஏதுவாயிற்று. வெகு சிலருகே மேற்படிப்பும் வாய்க்கிறது, வேலைக்குச் செல்வதற்கும் கூட! இன்னும் வெகுசிலருக்கே திருமணத்திற்கு பின் படிக்க வாய்க்கிறது.

வாய்ப்பு கிட்டும் போது பயன்படுத்திக்கொள்பவள்தானே புத்திசாலி. அப்படித்தான் தான் தொலைக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்திக்கொள்கிறாள் ஜெயா. அழுத பிள்ளைதான் பால் குடிக்கும். வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும். தன் விருப்பத்தை சொல்லியும் நடக்காமல் போக, சோர்ந்து விடாமல் மீண்டும் வாய்ப்பு கிடைக்கையில் முயற்சிக்கிறாள். சமயத்தில் யாரென்றே தெரியாத நல்ல மனிதர்கள் உதவுவார்கள். அப்படி அவள் முன் தோன்றியவர்களின் உதவி அவள் வாழ்க்கையை திருப்பிப் போடும் மாயத்தைச் செய்கிறது. ஒருவேளை அவள் ஒன்றும் பேசாமல் கணவன் பின்னால் போயிருந்தால் அவள் வாழ்க்கை என்னவாகியிருக்கக்கூடும்? தவறவிடப்பட்ட பெண்கள் தங்கள் வாய்ப்புகளையும் தவறவிட்டவர்களாகி விடுவர். ஜெயா தன் கனவுகளை பற்றிக் கொள்கிறாள். ரயில்பயணத்தில் ஆரம்பிக்கும் கதை ஜெயாவின் பேருந்துப் பயணத்தோடு, வாழ்க்கை பயணத்தோடு நிறைவடைகிறது.

தீபக்கின் அம்மா அண்ணி எல்லோருமே தனக்காக வாழாமல், வீட்டு ஆண்களைச் சுற்றி தங்கள் விருப்பு வெறுப்புகளை அமைத்துக் கொள்கின்றனர். சின்ன விஷயமாய் தோன்றினாலும் எத்தனை யதார்த்தமான வசனம், காட்சி. தனக்கு பிடித்ததை ஏன் எந்த பெண்ணும் சமைத்து சாப்பிடுவதில்லை? தன் விருப்பங்களை ஏன் ஒளித்து வைக்க வேண்டி இருக்கிறது? எழுத்தோ, இசையோ, ஓவியமோ, ஆடலோ, பாடலோ ஏன் பெண்கள் மட்டும் அனுமதி கோர வேண்டி இருக்கிறது? நிறைய படங்களிலும், நிஜத்திலும் இப்படி பெண்களை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். பெண்களின் விருப்பங்கள் காலங்காலமாய் அமிழ்ந்தே கிடக்கிறது. அமிழ்த்தி வைக்கப்படுகிறது. எளிமையான எல்லோர்க்கும் புரிந்துவிடக்கூடிய அழகான கவிதை போல இருக்கிறது லாபட்டா லேடீஸ் திரைப்படம். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்.

md@pioneerpac.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button