1. இடுகுறியெனும் இயலாமைக் களஞ்சியம்
*
இதற்குமேல் சொல்ல ஒன்றுமில்லை
குறீயீட்டு மௌனம்
கொன்று குவிக்கிற ஓராயிரம் அர்த்தப் பிரேதத்தின் முன்
மண்டியிடுகிற மனமாய் இருக்கிறது
உன் தேவை
காடள்ளி
கனலள்ளி
நீரற்று
வெறும் வாய் நிறைக்கும் காற்றின் களமாகி
நிலம் அவிழ்க்க முனையும்
கணம் என்ன கனம்
நான் தான் உடன்பட்டேன்
தெரிவுகள் தொந்தரவாகி
தொந்தரவின் நிராயுதத்தை
கூர் தீட்டும் சொல் அவிழ
இடும் குறி
உன் சமாதானம்
நானதை உண்மையென்றே நம்புகிறேன்
அறியாமையின் தொலைவு
அறியச் செய்யும் பொருளை
கையில் வைத்திருக்க
வெறிச்சோடும் பயணத்தின்
முரண் இழைகள்
பழுக்கிறது
நுட்பத்தின் கண் பார்த்து
புறக்கணிப்பை சுமக்கும் வலுவாகி
படர்கிற குரலின் ஒற்றை பொருள்
போதுமென்பதாய் வனைகிறது
இருப்பை
***
2. உறைதலின் தோற்ற மாற்றம்
*
உன்னைத் திரும்பிப் பார்க்கிறேன்
கொண்டுவந்ததை
நீ கொடுத்துச் சென்றதை
திறந்து பார்க்கிற காலமாய் இருக்கிறது
இன்றைய நிதானம்
அழகள்ளி
ஆலகாலம் அமுதாகி
அருந்தித் தீர்ந்த அந்த தாகம்
இன்றைக்கும் மிச்சம் வைத்திருப்பது
எனதல்லாத கோப்பையைத் தான்
தவிர்க்கும் சொல் அளவை
தந்து சென்ற மலையளவை
ஒரு சிறு மணலின் துகளாக்கி
நகர்கிற பயணம்
கோடை
குறிச்சி கொடுத்து
முல்லை கோர்க்கும் மணம்
விளைகிற கணத்தில்
சுடர்கிற முத்தம்
அலையடிக்க கால் நனைக்கிறது
இன்னும் தீர்ந்திடாத மீன் குஞ்சுகள்
பொரித்துக்கொடுக்கும் தூண்டிலில்
இரை சிக்க உறையும் கண்
இப்போதும் நானாகிறேன்
***
3. வருகையின் நிறப்பிரிகை
*
கழுவேற்ற செய்யும் காலத்தின் முன்
காதலுடைய கண்களைக் கண்டுகொண்ட
அந்த தினம்
தினம் போலில்லாதது
நீ வந்தாய்
செக்கச் சிவந்திருந்த கூட்டின் அந்தி
திறந்துகொண்டது
செங்காந்தள் பூவேந்தி
உன் வருகை
மலையளவின் கனத்தை
நிழல் அளவாய் உயர்த்திக் கொடுத்ததில்
நாம் தங்கிக்கொள்ளமுடிந்த அந்த நிம்மதிக்காய்
காத்திருந்தோம்
அவரவர் வயதேந்தி
கற்றுக்கொண்ட பறத்தல்
களவு போன தொலைதல்
முன் சொன்னவைகளின் பழித்தலென
யாவையும்
நீ அழித்தாய்
உன் ஒற்றை வாசத்தால்
கமழக் கமழ
மனம் கோர்த்த வழித்தடம்
திறந்துகொண்ட பெருவானில்
பறக்கிற திசைக்குள் வெயில் குடித்த குரல்
இருள் கிழித்து நுழைகிறது
மேற்கு நோக்கி
அங்கே
பறவையின் பெயராய்
நீ பறந்துகொண்டிருக்கிறாய்