ஆஹா…சில நட்களாகவே சற்று மந்தகதியில் சென்று கொண்டிருந்த பிக் பாஸ் வீடு கடந்த இரண்டு நாட்களாக டாப் கியரில் பறந்து கொண்டிருக்கிறது. “வித்யாபதி இன்று முதல் உமக்கு பேசும் வல்லமையைத் தந்தோம்.” என திடீரென கலைவாணி கனவில் தோன்றி அருளியது போல சாண்டியும், லாஸ்லியாவும் கூடப் பேசத் தொடங்கியிருக்கின்றனர்.
வனிதாவின் வருகையை சமூகவலைதளங்களெங்கும் தாக்கிப் பேசி கலாய்த்து வருகின்றனர். அவரால் தான் பிரச்சனை வருகிறதாம். என்னவோ அதற்கு முன்னால் அது அமைதிப் பூங்காவாக இருந்தது போலவும் இப்போது வனிதா வந்து அனைத்தையும் கெடுத்து கலவரத்தை உண்டு பண்ணியது போலவும் தான். அங்கு பிரச்சனை ஏற்கனவே இருந்தது. வனிதா வினையூக்கியாக மட்டும் தான் அனுப்பப்பட்டிருக்கிறார். அந்த வினையூக்கி தன் வேலையை அதி அற்புதமாக செய்திருக்கிறது.
முகேன்-அபிராமி பஞ்சாயத்திற்கு ஆளாளிற்கு ரிவ்யூ எழுதித் தீர்த்துக் கொண்டிருக்கின்றனர். ஏனெனில், அது பெரும்பாலான இளைஞர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலை. அதை எப்படிக் கையாள்வது என்பதில் அனைவருக்கும் ஒரு குழப்பம் இருக்கும். அவரவர்க்கு சௌகர்யமான நியாயத்தைக் கற்பித்துக் கொண்டு அவ்வுறவில் தொடர்வார்கள். நாமும் ஏதோவொரு புள்ளியில் இந்த நிலையைக் கடந்திருப்போம்.
காதல் என்ற வார்த்தையே இங்கு பெரும் குழப்பத்திற்கும், விவாதங்களுக்கும் இடையில் தான் சுற்றிக் கொண்டிருக்கிறது. இதில் யாரை எங்கு நோவது. இந்த விஷயத்தில் முகேன்-அபிராமி இருவர் மீதும் தவறு இருக்கவே செய்கிறது. ஆனால் என்ன அபியின் தவறை நாம் ஒரு ரொமாண்டிசைஸ் செய்ய முடியும். முகேனின் தவறை அவ்வாறு செய்ய இயலாது. நாளை இந்த உறவால் அபி அல்லது முகேன் யாருக்கு எந்த பிரச்சனை வர நேர்ந்தாலும் அதற்கு ஒரு இன்ச் அதிக பொறுப்பாளி முகேன் தான். ஆனால், பிக்பாஸ் வீட்டில் நிலைமை அப்படியே தலைகீழ். முகேன் அப்படியே பாதுகாக்கப்பட்டு அபிராமி டார்கெட் செய்யப்படுகிறார். அப்படி செய்யும் சமயங்களில் அதை ஆதரிப்பது போல முகேன் அமைதி காக்கிறார். இது அபி மனதில் உறுத்துகிறது. அதை சரியாக வனிதா சுட்டிக் காட்டுகிறார். சுயமரியாதை முக்கியம் என ஓதுகிறார் அவ்வளவே.
ஒருவர் நம்மோடு நட்பாக இருக்கும் வரைக்கும் எந்தப் பிரச்சனையுமே இல்லை. ஆனால், அவர் நம்மை நேசிப்பதாக வெளிப்படையாக அனைவர் முன்னிலையிலும் அறிவித்த பின்பு அதை சற்று கவனமாகத் தான் கையாள வேண்டும். அவரிடம் இருந்து விலகத்தான் வேண்டும். அங்கு பாவம் பார்ப்பதற்கெல்லாம் எதுவுமே இல்லை. அபி ஐ லவ் யூ சொல்லும் போது, “நீ ஹஸ்கி வாய்ஸில் பேசுவது கேட்க நல்லாருக்கு.” எனச் சொல்லி விட்டு பிறகு விலகியிரு என்று சொல்வதெல்லாம் வேலைக்காகாது. அது நாம் அவருக்குத் தரும் நம்பிக்கையைப் போன்றது தான். இன்று இல்லாவிட்டாலும் என்றைக்காவது மனசு மாறலாம் என்று தான் தோன்றும். கையை இறுகப் பிடித்துக் கொண்டு விலகிப் போ எனச் சொல்வதில் எந்தப் பிரயோஜனமும் கிடையாது. இந்த “நான் லவ் பண்றேன். நீ நட்பா இரு. நம்ம இப்டியே உறவைத் தொடர்வோம்” அப்டிங்குற கதையெல்லாம் எந்த வகையில் வருகிறதென்றே தெரியவில்லை. தன்னை ஒரு பெண் காதலிக்கிறாள் எனத் தெரிந்த பின் அவளை நட்பாக மட்டுமே ஒரு ஆணால் பார்க்க முடியுமா என்ன?
முகேனுக்கு ஏற்கனவே வெளியில் ஒரு காதலி காத்திருக்கிறாரம். ஆனால் அதிலேயே பல குழப்பங்கள் இருக்கின்றன. இந்நிலையில், உள்ளே அபிக்கு இடம் கொடுப்பதெல்லாம் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத செயல். அன்பு, அன்பிற்காக ஏங்குகிறார் என்றெல்லாம் என்ன சமாதானம் சொன்னாலும், அங்கு அன்பென்பதே கேள்விக்குள்ளாகும். காதல் என்று வந்து விட்டாலே அங்கு எதையும் எதிர்பார்க்காத அன்பிற்கெல்லாம் சாத்தியமே இல்லை. ஆனால், இதையெல்லாம் கையாளும் அளவிற்கு முகேனும் வயது இல்லை என்பதும் ஒரு காரணம். அதேநேரம், “ஃப்ரெண்டுனு சொல்ற அப்றம் அந்த புள்ள கட்டிப்புடிக்கும் போது சும்மா இருக்க. மணிக்கணக்குல உக்காந்து பேசுற. இதெல்லாம் நட்பில் வருமா?” என சேரன் கேட்கும் கேள்வியும் ஏற்க முடியாதது. இதைப் பற்றிப் பேசிப் பேசியே தாவு தீர்கிறது. ஆனால், சேரன்களும் மதுமிதாக்களும் திருந்துவதற்கெல்லாம் பல மாமாங்கம் ஆகும். நண்பர்கள் மகிழ்ச்சியை, துயரத்தை, அன்பைப் பரிமாற அணைத்துக் கொள்தல் எல்லாம் அன்பை வெளிப்படுத்த மட்டும் தான் மங்குணிகளே. அதில் பாலின பாகுபாடெல்லாம் கிடையாது. இதே ஆண் ஆணையோ, பெண் பெண்ணையோ கட்டிப்பிடித்தால் அது உங்கள் கண்களை உறுத்தவே உறுத்தாது தானே. அப்படித் தான் இதுவும். ஆனால், இருவரில் ஒருவர் காதலில் விழுந்து விட்ட பிறகு அவற்றையெல்லாம் அனுமதித்தல் அபாயம் தான் என்பதையும் மறுப்பதற்கில்லை. முகேன் சறுக்கிய இடம் இது தான். காதலைத் தெரிவித்த பிறகு அதிலிருந்து விலகாமல் அந்த அன்பிற்கு ஆசைப்பட்டு அதிகமாக நெருங்கினார். முகேன் மட்டுமல்ல நம்மில் அனேகம் பேர் சறுக்கும் இடம் இது தான். யாரின் உணர்வுகளோடும் தெரியாமல் கூட விளையாடத் துணியாதீர்கள். உங்களது உணர்வில் கூட.
கவின் சொன்னதைப் போல இது இப்படி அனைவர் முன்னிலையிலும் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் இல்லை தான். இந்த விவகாரத்தில் மொத்த ஆண்களும் முகேன் பக்கம் நிற்கின்றனர். அது பிரச்சனை இல்லை. ஆண்களின் குணம் அது தான். ஆனால், “எல்லாத்தையும் சொல்லு எல்லாத்தையும் சொல்லு” என தர்ஷன் அழுத்தி அழுத்திக் கூறியது தான் உறுத்துகிறது. அபி பதற்றமானதும் கூட அதனால் தான் எனத் தோன்றுகிறது. அபிரமிக்கும் முகேனுக்கும் இடையில் என்னவோ நடந்திருக்கிறது. அதை முகேன் ஆண்களிடம் பகிர்ந்திருக்கிறார். பெண்கள் யாருக்கும் அந்த விஷயத்தைப் பற்றி எதுவுமே தெரியாது. அதை சபையில் சொல்லச் சொல்லி தர்ஷன் மீண்டும் மீண்டும் வற்புறுத்துகிறார். இதுவே ஒவ்வாத விசயம். தங்களுக்குள் நடந்த தனிப்பட்ட விசயத்தை மற்றவர்களிடம் பகிர்வதே தவறு தான். ஆனால் இதையெல்லாம் ஒரு பொழுதுபோக்காக காலங்காலமாக ஆண்கள் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். திருந்துங்க ப்ரெண்ட்ஸ். உங்கள் போதைக்கு பெண்களுடனான உறவை ஊறுகாய் ஆக்காதீர்கள்.
இடையில் “இவன் வேற என்னைய ரொம்ப டார்ச்சர் பண்றான்டா..” டெம்ப்ளேட் இப்போது பிக்பாஸ் போட்டியாளர்களுக்குத் தான் பாந்தமாகப் பொருந்திப் போயிருக்கிறது. கஸ்தூரியை அங்காங்கே பார்ப்பதற்கே அவ்வளவு இரிட்டேட்டிங். கவின் பாவம் வெளிப்படையாகவே புலம்பி விட்டார். சம்பந்தமே இல்லாமல் கண்டதையும் பேசி எரிச்சலூட்டிக் கொண்டிருக்கிறார். அனைவரிடமும் எதையாவது பேசி பல்பு வாங்கிக் கொண்டிருக்கிறார். பிக்பாஸ் ப்ரோமோவில் வந்த காட்சிகள் அவருக்குத் தான் பொருந்திப் போகின்றன.