![](https://vasagasalai.com/wp-content/uploads/2020/01/tamilmani.jpg)
சுகத்தின் மோட்சம்
பிரயத்தனத்தின்
பெருவெளியில்
நுரைத்து திரளும்
ஆன்மாவின் கட்டளை
மீச்சிறு வடிவம் எய்துமுன்
களியாட்டம் ஆடிவிடுகிறது
தொங்கும் தோட்டம்
ஊசலிற்கு ஏற்ப
பிரம்மைகளை கூட்டித் திரியும்
பாழ் மனிதர்களின் வன்முறை
வெற்றிடம்
சரீரத்தில்
புல்லரிப்பின் தயவால்
நீண்டிருக்கும் கேசம்
தூண்டல் விளைதலின்
முதற்கட்டம்
இருளுக்குள் ஒளிந்திருக்கும்
ஒளி புறப்பட்ட பிறகே
விடியல் வெளிக்கிட
அலுப்புத்தட்டும் கவசமாய்
காதல்.
மௌனத்தின் முடிச்சை அறிந்தவன்
வெட்டவெளியில்
ஏற்பட்ட களேபரம்
நிற்கதியில் மௌனத்தை
கொப்பளிக்கிறது
மீளாதென்று தெரிந்தும்
கலைத்துவிட எத்தனிக்கும்
அவளின் இதழ்கள்
ஒரேபிடியாய் உணர்ச்சிகளில்
பயணிக்கிறது
பேருவகையை
அன்பளிப்பாய் வைத்திடுவதால்
தடுமாறும் உள்சிறையை
விலங்கு பூட்டி வைத்துள்ளேன்
துயிலிலும் எனது அவதானிப்புகள்
உனை நோக்கியவைகள்
பதில்களை எதிர்பார்த்து
நைந்து போகும் கேள்விகளுக்கு
பொறுப்பேற்கும் நிலையில் இல்லாத
காதலன் நானென்று நினைவில் கொள்.