
நம்முடன் பிறக்கிறார்கள்
அல்லது நம்முடன் இருக்கிறார்கள்
பெருந்துயரில் நம்முடன் அழுதபடி
தோள்களில் சாய்த்துக் கொள்கிறார்கள்
பெருங்கொண்டாட்டத்தில் நம்முடன் சிரித்தபடி
இறுகத் தழுவிக் கொள்கிறார்கள்
ஒருபோதும் விடியாத நாளொன்றில்
நம்பிக்கையின் நல்வெளிச்சமும்
அவநம்பிக்கையின் அடர் இருளும்
அலைபுரளுமொரு கொடுந்துயரின் ஆழ்பாதாளத்தில்
நம்மைத் தள்ளிவிட்டு
துளி இரக்கமுமற்ற உலர்ந்த மனதுடன்
நம்மை விட்டு மறைந்து விடுகிறார்கள்
காணாமல் போகிறவர்கள்.
***
பரிதாபப்படுகின்றனர் சிலர்
கேலி செய்கின்றனர் சிலர்
கண்கலங்குகின்றனர் சிலர்
உதவி செய்ய முயல்கின்றனர் சிலர்
சலனமின்றிக் கடக்கின்றனர் சிலர்
சிதையத் தொடங்கும் குட்டியின் உடலைக்
கைகளில் இறுக்கியபடி
அங்குமிங்கும் அலைபாய்கிறது தாய்க் குரங்கு
பார்த்துக் கொண்டிருந்த நான்,
வாசனைத் திரவியங்கள் மேலும் பூசி
யாருமறியாமல்
ஆழமாய் மறைக்கிறேன்
காலமெல்லாம் சுமந்து திரியும்
அழுகிச் சொட்டுமொரு அழகிய உறவை.
***
“நல்லா ஒக்காருங்க, ப்ரைவேட் பஸ்ல
ஒன்றரை பேர்தான் உட்கார முடியும்”
சொல்லிச் சிரித்தவனின் பல்வரிசை
சீராக இருந்தது.
“எத்தன பேருக்கு நான் சில்லரை தர்றது?
அடுத்த ஸ்டாப்ல எறங்கிக்கங்க” என்ற
நடத்துநரின் வார்த்தைகளில் தடுமாறிய பெரியவரின்
ஐநூறு ரூபாய் நோட்டுக்கு நூறுகள் தந்தான்.
கன்னங்களை உப்பி உடைத்து
முன்னிருக்கைச் சிறுபெண்ணைச் சிரிக்க வைத்தான்.
’நான் சூடான மோகினி’ என்று
மதுரை பழனி பேருந்தினுள் அதிர்ந்த குரலுக்கு
அவன் விரல்களின் நடனம்
அத்தனை அற்புதமாயிருந்தது.
மலைப்பாதை வளைவில் பேருந்து
சரிவிலிறங்கியது மாதிரி
ஒரு அலைபேசி அழைப்பு வந்தது.
”சொல்லு” என்றவன்
”ஏய், எதுக்கு இப்படியெல்லாம் பேசறவ?”
என்றதிர்ந்து
அழைப்பு துண்டிக்கப்பட்ட அலைபேசியை
கலங்கிய கண்களுடன் பார்த்திருந்தான்.
அலைபேசியினுள் நழைந்து
அந்த எண்களைப் பற்றி நடந்து
அப்படியெல்லாம் பேசின
முகமறியாத அந்தப் பெண்ணின்
கைகளைப் பற்றி
அவனுக்காக மன்றாடிக் கொண்டிருக்கிறேன்.
*******