
1.போதி மரத்தடியில் புழுக்கத்தில் புத்தன்.
ஞானத்தின் எல்லையை
கண்டடைந்த புத்தன்
தனது பிக்குகளுக்கும் மக்களுக்கும்
போதித்த களைப்பாலும
வருத்தும் வெக்கையின்
புழுக்கத்தாலும்
வழக்கம் போலவே
இளைப்பாற ஒதுங்குகிறான்
அந்த போதிமரத்தடியில்.
சுற்றியிருந்த யாவற்றையும்
பார்க்காமல் கவனம் சிதறி
அன்னார்ந்து
அசையாமல் அமைதியாயிருக்கும்
அந்த கிளைகள் மீது குவிகிறது
அவன் கவனம்.
அசைய மறுக்கும்
கிளையைக் கண்டவுடன்
தவிர்க்க முடியாதபடி
மீண்டும் மெல்ல மேலெழும்பி
நினைவுக்கு வருகிறது
சாமரம் வீசப்பட்ட சித்தார்த்தனின்
அரண்மனை நினைவுகள்.
இப்போது எதை கொண்டும்
துடைக்க முடியாத
மனப் புழுக்கத்தில் மரத்தின் மேல்
கண் மூடி தலை சாய்க்கிறான்
புத்தனுக்குள் மறைந்திருக்கும்
அந்த சித்தார்த்தன்.
இப்போது அவன் கனவுக்குள்
உரக்க சப்தமிட்டபடி
ஓடிப்பிடித்து விளையாடுகிறான்
ராகுலன்.
மெல்ல அவன் உடல் மேல் உதிரும்
காய்ந்த சருகொன்று
அவன் கனவைக் களைத்து
மீண்டும் துரத்துகிறது அவனை
முழுதாய் துறவுக்கு.
*************
2. துறவும் தற்கொலையும் வெவ்வேறல்ல
சித்தார்த்தன் தனது
சுருக்குப் பையைப் பிரிக்கையில்
சிதறியோடிய சில்லறைகளின் சப்தம்
அவனுடைய ஞானத்தின்
இறுக சாத்திய கதவை
தட்டியிருக்கலாம்.
புணர்ச்சியின் முடிவில்
சிறிதே மூச்சவாங்களுக்கு பின்பு
பசித்தீர்ந்த காம இச்சை
இவ்வளவு தானா வாழ்க்கையென்ற
அவனுடைய ஞானத்தின்
சிக்கலான முடிச்சுகளை
அவிழ்த்திருக்கலாம்.
அரண்மனை யாமத்தின்
நிசப்தத்தை உடைத்து பசிக்காய்
கதறி வீரிட்டழும் தனது
பிள்ளையின் பெருங்கூச்சல்
அவனை ஞானத்தின் வாசலுக்கு
விரட்டியிருக்கலாம்.
அரண்மனை சேவகர்களின்
போலியான புன்னகைகளை
பார்த்துச் சலித்தப் பின்
உண்மையான புன்னகையைத் தேடி
அவன் ஞானத்தின் குகையை நோக்கி
நடந்திருக்கலாம்.
யசோதரையின்
பிரசவ சுருக்கம் விழுந்த
உப்பிய வயிற்றை
பகலில் காண சகிக்காது
மனித உடல் குறித்தான
வினோதத்தை அறிய
அவன் ஞானத்தின் வாசல் தேடி
கிளம்பியிருக்கலாம்.
ஞானத்தை தேடி
வீட்டை விட்டு வெளியேறுவதாய்
காரணம் சொல்லும் சித்தார்த்தன்கள்
கடைசி வரை சொல்லவதேயில்லை
எது அவர்களை ஞானத்தை நோக்கி
துறவை நோக்கி
நடக்கச் சொன்னதென்று.
தற்கொலையும்
ஞானத்தை நோக்கிய துறவும்
வெவ்வேறல்ல
இரண்டுமே எல்லாவற்றிலிருந்தும் தன்னை
முற்றிலும் துண்டித்துக்கொள்ளுதல்…
உறவை, உறவின் சிக்கல்களை,
அவமானங்களை,துரோகங்களை
புறக்கணிப்புகளை,பொறுப்புகளை
என யாவையும் விட்டு வெளியேறுதல்…
இரண்டிற்குமான முடிவு கண நேரத்தில்
எடுக்கப்படுகிறது என்றாலும் கூட
முடிவுக்கான காரணம்
முடிவில்லாமல் விரட்டும் அந்த
இறந்தகாலத்தில் இருக்கிறது.
புத்தனாய் துறவுக்கு மாறிய பின்
அல்லது தற்கொலை செய்து
மரணித்தப் பின் விரக்தியில்
இதழின் விளிம்பில் கசியும்
அவர்களின் மெல்லிய புன்னகையில்
நீங்கள் காணலாம்
அதற்கான அழுத்தமான பதிலை.
அது “சிலவற்றை வெளியில்
வெளிப்படையாய் சொல்லாமல் இருப்பதே
அல்லது காட்டிக்கொடுக்காமல் இருப்பதே
ஞானத்தை அல்லது துறவை அடையும்
முதல் படிநிலை” என்று.
அதனால் தான் பெரும்பாலான
தற்கொலை மரணங்களில்
காரணங்கள் சொல்லப்படுவதில்லை.
மேலும் நீங்கள் அந்த புன்னகையை
கொஞ்சம் கையில் ஏந்தினால்
உங்களுக்கு புரியும்…
“தற்கொலையென்பது
உடனடி மரணம்
துறவென்பது
தாமதிக்கப்பட்ட மரணம்”.
*************
3. காக்கா கவிதைகள்
i. காக்கையின் நிறம் சிகப்பு:
இனத்தின் மரணத்திற்கு
கூட்டம் கூடி முற்றுகையிடும்
காக்கைகளின் நிறம்
நாம் பார்க்க விரும்பா
அடர் சிவப்பு.
ii. விருந்தினர் வருகையை
அறிவிக்க வந்த காக்கையை
விரட்டுகிறது
மாநகரத்து வீட்டுக் குக்கரின்
விசில் சப்தங்கள்.
iii. உப்பிட்டு ஆய்ந்து முடித்த மீனை
கள்ளத்தனமாய் சட்டியிலிருந்து
கவ்விச் செல்லும் காக்கைக்கு
வெண்ணெய் திருடிய
கண்ணனின்
நிறம் குணம்.
iv. கவிச்சிக் கடை விடுமுறையான
காந்தி ஜெயந்தி அன்று
அலைகளுக்கு மேல் பறந்து
கடலில் மீன் பிடிக்க கற்றுக்கொண்டன
கடற்காகங்கள்.
v. மாநகரத்தின்
தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப
கணக்கில் வராத வாடிக்கையாளராக
தன்னையும் இணைத்துக்கொண்டது
அலைபேசி கோபுரங்களில்
வாடகையின்றி கூடமைத்துக்கொண்ட
காக்கை.
iv. காக்கையின் கூட்டில் தான்
குயிலின் பிரசவம் என்றாலும்
காக்கைகளைப் போல்
குயில்களுக்கு வாய்ப்பதில்லை
கூட்டாளியின் மரணத்திற்கு
கூட்டாய் சேர்ந்து
இரங்கல் தெரிவிக்கும்
இரக்க குனம்.
*************