
1) நைஸ் DP
துயிலெழும்
இருபதாம் நூற்றாண்டுச் சிற்றோடை
கரையோரம் விளையாடிய சிறுவர்களின்
காலடித் தடங்களை மடித்து வைத்திருக்கிற
அலமாரியைப் பார்த்தவாறு கண் விழிக்கிறது.
தேநீர் சுவைத்தபடி மனக்கலக்கத்தில்
இலக்கற்று கற்களைத் தன்னுள் சுண்டிய
இளைஞனின் முகத்தை எதிரொளிக்கிறது.
சிறுமியர் கட்டிய மணல் வீடுகளுக்குள்
சற்றே நண்பகல் வெம்மைக்கு
இளைப்பாறிக் கொள்கிறது.
தனது நீரோட்டத்தின் சலசலக்கும் ஒலியை
தியானித்தபடியே கழிக்கிறது மதியப் பொழுதுகளை
காதலர்களின் வரவிற்கு பிந்தைய கணங்களுக்குள்
நாணியபடியே சாய்கிறது அந்திக்குள்
இரவிற்கு மடி தந்து
கனவினின்று விழிக்கிறது
இருபத்தியோராம் நூற்றாண்டுச் சிற்றோடை
யுவதியொருத்தியின் மிடுக்குப் பேசியின் சுவர் படமாக
டிஜிட்டல் திருத்தங்களுடன்
இந்த நொடிவரை பதிமூன்று தோழியரிடமிருந்து
‘நைஸ் DP’ – பின்னூட்டம் வந்துள்ளது
கண்களின் வெளியே துருத்தியபடி துடிக்கும்
சிவப்பு இதய இமோஜிக்களோடு.
**************************
2) சிணுங்கும் டார்சன்
காலடியில் புலியும்
தலைக்கு ஆமையின் முதுகுமாய்
தன் பிங்க் நிற புசுபுசு யானையை
கட்டிக் கொண்டு கனவிலாழ்கிறான் மழலை
டார்சானாய் எழுந்து
கற்பனை நரம்பெடுத்துக் கோர்த்த
விழுதுகள் பற்றி காற்றில் தாவியேறி
மிதந்து பறக்கிறான் உற்சாகம் பொங்க
கார்த்திகை மாத மழையிரவு செய்தளித்த
கூரான ஒரு சிறுநீர் கத்தி
அவ்விழுதுகளை அறுக்கத் துவங்குகிறது
இன்னும் சில விநாடிகளில் எதற்குமஞ்சா
டார்சன் சிணுங்கப் போகிறான்
வரப் போகிற அழுகையின் முன்னறிவிப்பாய்