
(கவிஞர் ந.ஜயபாஸ்கரனின் கவிதைகளை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை)
தமிழ் மரபுக்கவிதையின் வளமான பண்புகளில் ஒன்று காட்சியைப் பாடுதலாகும்; இயல்பாகவும், உவமை முதலான அணிநலன்களைக் கொண்டு உயர்வாகவும், அந்தக் காட்சியை ஓர் இயல்பான புகைப்படம் போலவும், வண்ணமேற்றி அழகு செய்த ஒரு ஓவியம் போலவும் காட்டி, வாசகனைத் திரும்பத் திரும்பப் படிக்கச் செய்து, அக்காட்சி தரும் அழகில் மயங்க வைக்கும் திறம் கொண்டது நம் மரபுக்கவிதை.
இன்னும் அதைக் கொஞ்சம் நெருங்கிப் பார்த்தால் பெரும்பாலான கவிதைகளில், வாசகனை மயங்கச் செய்திருப்பது கவிதை தரும் காட்சி அல்ல; காட்சி பற்றிய கவிதையின் விவரிப்பையே என்பதையும் நாம் கண்டு கொள்வோம். மிகு புனைவுச் சோடனைச் சொல்லாட்சி ஒரு நுட்பமான வாசகனைக் கவிதையில் இருந்து வெளியேற்றும் இடமும் இதுவாகும்.
ஆனால், நவீன கவிதை, மரபின் இந்த குணத்திலிருந்து மாறுபடவே செய்கிறது. நவீன கவிதையில் காட்சியைக் கூறுவதென்பது ஒரு பாவனையாகவே இருக்கிறது. இயல்பான ஒரு காட்சியை வாசகன் மனதில் சொற்சித்திரமாக வரைய மரபுக் கவிதை கொண்டிருந்த ஆயுதங்கள் எவையும் அதனிடம் இல்லை. இது நவீன கவிதைக்கு சவாலான ஒன்று என்பதையும் அது உணர்ந்தே இருக்கிறது. நவீன கவிதையில் ஒரு காட்சியைக் கவிதையில் பேசும் கவிஞனுக்கு அந்தக் காட்சியின் இயல்பை உள்ளதை உள்ளபடி கூறும் நோக்கம் எதுவும் இருப்பதில்லை. அவன் காட்சியைக் கூறுவது என்பதில் வேறுவேறு காரணங்களே முன் நிற்கின்றன.
கவிஞன் தான் உணர்த்த விரும்பும் ஒரு கருத்து, தான் சுட்ட விரும்பும் ஓர் உணர்வுக்குத் தோதான ஒரு காட்சியே கவிதையில் விரிகிறது. இதனால் நவீன கவிதையில் காட்சி என்பது பெரும்பாலும் புனையப்பட்ட ஒன்றாக இருக்கிறது. இந்த உத்தி வாசகனுக்குக் காட்சியையும் அது தரும் இன்பத்தையும் இரண்டாம் தரமாக்கி, கருத்துக்கும் உணர்வுக்குமே முக்கியத்துவம் தருகிறது.
நவீன தமிழ்க்கவிதை மரபில் வாசகனுக்குப் பழகிப்போன இந்த உத்தியைத் தவிர்த்து, மிக எளியசொற்களால் ஓர் உன்னதமான காட்சி அனுபவத்தைத் தந்துவிடுகிற நவீன கவிதைகளும் இல்லாமலில்லை. அப்படி நவீன கவிதையில் சாத்தியப்பட்ட காட்சிகளைக் குறித்தே இக்கட்டுரை பேச விழைகிறது.
கவிதைக்குள் வைக்கப்பட்ட காட்சியானது ஒரு புகைப்படத்தைப் போலவும், ஒரு ஓவியத்தைப் போலவும் இல்லாதிருப்பதே கவிதை தரும் காட்சியின் சிறப்பு; அல்லது கவிதையின் சிறப்பு எனலாம்.
அவ்வாறான கவிதைகளே நுட்மான காட்சி அனுபவத்தை வாசகனுக்குத் தர வல்லவை.
காட்சி : 1
/தங்க ஆபரணக் கடைத்தெருவின் நீட்சிதான்
என்ற போதிலும்
மஞ்சள் வர்ண இலைகள்
கனவிலும் உதிராத மரமற்ற தெரு.
கல்யாணப் பட்டின் செம்புச் சரிகை மட்டும்
அங்கங்கே மின்னுகிறது.
வெள்ளைப் பூண்டுப் பற்களின்
பழுப்புச் சிரிப்பு
உறைந்து கிடக்கிறது
கேதம் விழாதா என்று
நோங்குகிறது
பித்தளைக் கடை மரக்கால்
நர்சரிப் பள்ளியின் கண்ணாடிக் கதவினுள்
மினுங்கும் நட்சத்திரத்தை அழைக்கின்றன
கிளிக் குழந்தைகள்
நிரந்தரமான ஒருவழிப்பாதையில்
படர்ந்து வருகிற
ரசாயனப் பொடியின் படலத்தை விலக்கியவாறு
கம்மி விலைக் கார்ப்பெட்டை வாயிலிருந்து
விரித்துக்கொண்டு வருகிறான்
அயல் மாநில இளைஞன்
நடந்து வருகிறது அதன்மீது
வெண்கலக் கடைத் தெரு./
சங்க இலக்கியங்களிலும் காப்பியங்களிலும் சிற்றிலக்கியங்களிலும் மதுரை நகர்க் காட்சிகளுக்குப் பஞ்சமில்லை. ஒரு பழமையான நகரத்தின் மாறிவரும் காட்சிகள் மொழியின் எல்லாக் கூறுகளிலும் இடம்பெறுவதில் வியப்பில்லை. இங்கு நவீன கவிதையும் அவ்வேலையைச் செய்கிறது.
மதுரையின் பரபரப்பான வணிகத் தெருவான வெண்கலக் கடைத் தெருவைக் காட்சிப்படுத்துகிறது இக்கவிதை. காட்சிப்படுத்தலின் செய்நேர்த்தி நகரத்தின் இயல்பான காட்சியையும் வேறு தளத்தில் வைத்துக் காண்பிக்கிறது.
எந்தவித அர்த்தப் பூச்சோ, அலங்கார வண்ணமோ இல்லாமல் ஒரு காட்சியை வாசகருக்குக் காட்டுகிறது இக்கவிதை.
நாம் ஒவ்வொரு நாளும் கண்டு பழகிப்போன ஒரு காட்சிதான் என்றாலும் கவிஞனின் அனுபவம், மொழியாளுமை எனும் நுண்ணோக்கி வழியாக இக் காட்சியைக் காணும் வாய்ப்பைக் கவிதை தருகிறது.
மிகத் துல்லியமான வெண்கலக் கடைத் தெருவின் சித்திரத்தை வரைகிறது இக்கவிதை. ஆனால், சித்திரத்தின் கோடுகளில், வண்ணங்களில் ஒரு சித்திரம் ஒருபோதும் தர இயலாத காட்சி அனுபவத்தை மொழி வசப்படுத்தி விடுகிறது.
நவீன கவிதை, மரபான தமிழ்க் கவிதையின் சந்தத்தைத் தொலைத்துவிட்டது என்றொரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால், இந்தக் கவிதையைப் படிக்கையில் மரபின் இயைபுத் தொடையால் விளையும் சந்த நயத்தைவிட ஒரு சிறந்த ஓசை நயம் கவிதையின் தொடக்கம் முதல் இறுதிவரை வருவதை உணரலாம். கவிதையில் ஒசை, தொடக்கத்தில் மெதுவாகத் தொடர்ந்து இறுதியில் உச்சம் பெற்று முடிவதை முதல் வாசிப்பிலேயே உணர முடியும்.
மதுரை நகரின் வெண்கலக் கடைத் தெருவின் சாதாரணமான இக்காட்சியைக் கவிஞனின் கண்கொண்டு பார்க்கும் அனுபவம் மகத்தானது. அக்காட்சியில் வாசகன் அடையும் உணர்வு நிலைக்கு எல்லையில்லை.
ஓர் இயல்பான காட்சி விவரிப்பை கவித்துவ மேன்மைக்குள் வைத்துச் சொல்லமுடியும் என்பதற்குச் சான்றாகிறது இக்கவிதை.
கவிஞர் ந.ஜயபாஸ்கரனின் எழுதிய அரை நூற்றாண்டுக் கவிதைகளில், தன்னுடைய வாழ்நாளைக் கழித்த வெண்கலக் கடைத் தெருவைக் காட்சிப்படுத்தி இந்த ஒரே ஒரு கவிதையை மட்டுமே எழுதியிருக்கிறார். இந்த ஒரு கவிதையே போதுமானதாகவும், அதில் எல்லாவற்றையும் கூறிவிட்டதாகவும் அவர் கருதியிருக்கலாம். நமக்கும்கூட அப்படித்தான் நிறைவைத் தருகிறது இக்கவிதை.
காட்சி : 2
/திருவிழா நெரிசலில்
விருப்பமாய் இடிபடும் மூதாட்டி
கைப்பேசியில்
கதைத்துக் கடத்துகிறாள் இரவை
அலட்சியமாக
‘மருதைக்குள்ளே தான் திரியறம் இன்னும்‘
மின்னி அணையும் கைப்பேசி எண்களை
நனைக்காமல்
பதுங்கிச் செல்கிறது வையை
ஆலவாய் நரிகள் தின்ற
அரேபியக் குதிரைகளின் எலும்புகளாய்
எதிரே கிடக்கும் மதுரைத் தெருக்கள்./
மதுரை, திருவிழாவில் திளைக்கும் ஒரு மூதூர். மதுரைக்கு ‘விழாமலி மூதூர்’ என்று சொல் வந்து பதினைந்து நாற்றாண்டுகள் கழிந்துவிட்டன.
சித்திரை திருவிழாவின் இரவில் உலாவரும் சொக்கரையும் மீனாட்சியையும் பார்க்க மாசிவீதிகளிலும்,
வையையில் கால் நனைக்க வரும் அழகரைக் காண வையையின் வடகரையிலும்,
நெருங்கிப் பரவும் மக்கள் கூட்டத்திற்கு விழா முடியும் வரை எல்லா இரவுகளும் பகல்பொழுதுகள்தான். கூட்ட நெரிசலைப் பொருட்படுத்தாமல் வையைப் பெருக்காய் திரண்டெழும் மக்களில் சிறியவர், பெரியவர் என்ற பேதமிருப்பதில்லை.
செல்பேசி வந்துவிட்ட இந்த நவீன காலத்திலும், மாறாத திருவிழாவும் மக்களின் ஈடுபாடும் மிகச் சில வரிகளுக்குள் இக்கவிதையில் காட்சிப்படுத்தப்பட்டு விடுகிறது. கவிதை ‘நெரிசல்’, ‘விருப்பம்’ என இரண்டே இரண்டு சொற்களைக் கொண்டே அதைச் செய்துவிடுகிறது. கவிதையில் ஒலிப்பது பாட்டியின் குரலாக இல்லாமல் ஒரு பழமையான விழாவினுடைய மனதின் குரலாக ஒலிக்கிறது.
கவிதையின் கடைசி மூன்று வரிகள் மதுரையின் தொன்மக் கதைகளில் திளைத்து வெளிவந்தவை. மதுரைத் திருவிழாவின் அசாத்தியமான இயல்பைச் சொல்லி வாசகனைத் திளைக்க வைக்கும் கவிதை, திடுதிப்பென்று ஒரு புராண காட்சியைத் தொடர்புபடுத்தி நிறைவுபெறுகிறது. புராண நிழல் படிந்த கடைசி மூன்று வரிகள் இல்லாமலேயே கவிதை கூறும் காட்சி அனுபவத்தை வாசகன் கண்டடைந்துவிட முடியும்.
ஒரு பழம்பெரும் ஊரின் மாறாத பெருந்திருவிழா நிகழ்வை ஒரு சில வரிகளில் காட்டிவிடும் மாயத்தைச் செய்கிறது இக்கவிதை.
மதுரைக் காட்சிகளைப் பாடிய சங்க நூல்களுக்கும் சிலப்பதிகாரத்திற்கும் நிகரான நவீன கவிதைகளைக் கேட்டால் தயங்காமல் காட்டவேண்டிய கவிதைகள் கவிஞர் ந.ஜயபாஸ்கரனின் இக்கவிதைகளாகும். அது மட்டுமல்ல, எளிய சொற்களால் வாசகனைக் காட்சிக்குள் உலவவிடும் மாயத்தையும் எண்ணி மயங்கச் செய்பவை இக்கவிதைகள்.
உதவிய நூல் :
ந.ஜயபாஸ்கரன் : அரை நூற்றாண்டுக் கவிதைகள், காலச்சுவடு பதிப்பகம்,
நாகர்கோவில் – 629001
அருமையான வரிகள்👌👌👏👏👏