
சூரியக்கணங்கள் கடக்கும் ஒரு காலையின் சுவடுகளில்
நீரல்லியின் சாயலில் ஒருத்தி
கடந்து போகிறாள்
தவறவிடப்பட்ட கடைசிப் பேருந்தின்
பாடல் திசைக்கொன்றாய் சிதறி
நழுவுகிறது
இமைமீதோ நுதலிலோ மீள்வருடும்
முத்தங்களில் ஒரு இரவு
பூர்த்தியாகிறது
உதிரும் மஞ்சள் நுணா பூக்களின்
மயக்கும் அனிச்சை வாசங்களில்
நெகிழும் இக்கணத் தேடல் போதுமென்றாகிறது.
***
தவறுதலில் நொறுங்கிவிடும்
என் வானத்தின் எரி நட்சத்திரங்கள் உன் உறக்கத்தின் புன்னகை
பூக்களின் மஞ்சள்
பனித்துகளின் சிலிர்ப்பு
உயிரைப் பிழியும் நீராடலின்
மிச்ச ஈரம்
ஒரு நதியின் நிழலில் தனை
காணும் பறவை இறகில்
திணிக்கப்படும் அம்பு
உயிர் பிரியும் அந்தக் கணங்கள்
நீட்டப்படும் வளைக்கரங்கள்
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக
காத்திருக்கிறது நிசப்தங்கலையாத
அந்த கடல்.
***
ஒழுகி இறங்கும் சாம்பல் நிற
அழுக்குகளில் வழுக்கும் நீர் குமிழிகளில்
சற்று மேலேறிய உன் சிரிப்பின் மர்மத்தை
தேடிக்கொண்டிருக்கிறேன்
நாம் பார்த்துக்கொள்ளாத இந்த அந்தகாரப் பொழுதுகள்
கனவுகளுக்கு அப்பால் உறைய
பருத்திக்காட்டு வெண்பூக்களில் புலரிச் சொட்டுகள் உறைந்து கனக்கின்றன
அன்பே
இந்த கார்கால இன்மைப் பொழுதுகளில் உருளும்
கூழாங்கற்களில் ஒரு துளியாகி
காற்றசைவில் ஏதுமில்லாமல் ஆகிறேன்
நினைவின் பெருங்கடலில் ஆற்றலிழந்து
மரம் வெறுத்த இலையின்
பரிதவிப்பில் மனம்
காற்றுக்கும் இடங்கொடாது முகமேந்திய
நம் முத்தங்கள் எங்கோ ஒரு
ஜன்னலோரம்
கைதவறிக் கிடக்கிறது
ஏதோவொன்றாய் எப்போதுமெனைச்
சுற்றிக் கொண்டிருக்கும் உன் ஞாபகச் செதில்களில் மீனாகித் துவண்டு
நடுங்கும் இந்த உயிர்
உன் கரைப்படிவுகளில் தானே மணலாகும்
ஏக்கத் தேம்பலில் விடியாத என் இரவுகள்
இன்னும் நீண்டு
கணத்தாண்டல்களில் இழப்பின் வாதையில்
பற்றி எரியும் நாமாகிய எம் பிரியங்கள்
கால இழுபாடுகளில் நானென்பது
உன் ஞாபகங்களின்றி வேறெதுவாக
இருக்க கூடும் பேரன்பே.
******