
பிறப்பு
இவ்வளவு மௌனமான
கவனத்திலோ காணும் வெளியிலோ
இல்லை அவன் வாழ்க்கை
அவன் பிறந்த கணத்தில்
திறந்த புத்தகம்
இறந்த கணத்தில்
மூடப்பட்டு விட்டது
அவனது பயணத்தின் பாதை
திறந்தபடி இருக்கிறது
அது அவனை ஆள்கின்றது
அவனை மறுக்கின்றது
அது ஒரு பொருளாக இருக்கிறது
அதற்கென்று உருவம் இல்லை
உயிரும் இல்லை
அவன் மட்டும் அயர்ச்சி அடைகிறான்
துடித்துக் கொண்டிருக்கும்
இதயத்தின் ஓசை
அவனை ஏமாற்றுகிறது
மெய் உருக
அவன் கையருகே
வரும் கனவுகளில்
மூழ்கிப் போகிறான்
மற்ற நேரங்களில்
அழுதிடும் மனம்
கண்டுபிடிப்பைக் காண ஏங்குகிறது
தீட்டிக் கொண்டே இருக்கிற
சத்தத்தை உற்று நோக்கினால்
இடைவிடாத சர்ச்சை
சரியெனச் சொல்லும்
காலம் பிறக்கும்
***
நிலை
பிழை திருத்தப்பட்ட பிரதி
ஒன்று என்னிடம் இருந்தது
அது ஒரு நபரைப் போல்
என் பக்கத்தில்
அமர்ந்து இருந்தது
என் நண்பன்
என்னை விட்டு
விலகியிருக்கிறான்
எந்தப் பொருளும்
யார் சொல்வதிலோ இருக்கும்
அர்த்தத்தில் இருக்கிறது
அல்லது அர்த்தம் பிறழ்கிறது
வஸ்துக்கள் தன்னைப் போலவே
என்னையும் கல்லாகச் சமைக்கின்றன
இல்லாமல் இருக்கும் நான்
இருப்பவனைப் பற்றிச் சொல்கிறேன்
அதைத்தான் நம்புகிறார்கள்
அப்படித்தான் இருக்கிறார்கள்.
******