
சின்னஞ் சிறுவர் நான்குபேர்
சேர்ந்து ஒன்றாய்க் கூடியே
கண்ணன் வீட்டுத் தோட்டத்தில்
காய்கறி விதைகள் நட்டோமே.
தினமும் பள்ளி முடிந்ததும்
திரண்டு அங்குச் சென்றோமே
மனம் ஒன்றித் தோட்டத்தில்
மகிழ்ந்து வேலை செய்தோமே.
ஆடு மாடு கன்றுகள்
அழித்திடாமல் காக்கவே
பாடு பட்டு வேலியைப்
பையன்களாய்க் கட்டினோம்.
கிணற்றுத் தண்ணீர் இறைத்துதான்
காய்கறி செடிக்குப் பாய்ச்சினோம்
உணர்ந்து களைகள் நீக்கினோம்
ஓடி நன்றாய் ஆடினோம்.
காலம் சிறிது சென்றதும்
காய்கள் அதிகம் காய்த்தன
பாலர் நால்வர் சேர்ந்ததை
பறித்துக் கடைகளில் விற்றோமே.
செடிகள் போல நாங்களும்
சிறந்த பயனைத் தந்திட
படித்து முடித்து நாட்டினை
பாரில் உயர்த்த முயலுவோம்.