கட்டுரைகள்

இன்று நீர்… நாளை ?

-புகழின் செல்வன்

            சாதிய அடக்குமுறைகள்,சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள்,வர்க்கரீதியான பிரச்சனைகள்,பெட்ரோல் டீசல் விலையேற்றம்,பொருளாதார சிக்கல்களுக்கெதிரான மனக்குமுறல், நம்மில் பலருக்கும் எட்டாக்கனியாக இருக்கும் தங்கத்தின் விலையேற்றம் குறித்த கவலை இவையெல்லாம் தான் நமக்குத் தெரிந்த, நமக்கு முன் இருக்கும் பிரச்சனைகள்.மேலுள்ள பிரச்சனைகள் குறித்த கவலையும் கொதிப்பும் ஒருவருக்கொருவர் வேறுபடும். ஆனால், நம்மில் பலரின் அலட்சியப்போக்கால் வேறு ஒரு பிரச்சனை பூதாகரச்சிக்கலாக நம்முன் வளர்ந்து நிற்கிறது. அது ஒரு பிரச்சனை என்ற புரிதலே பலருக்கும் இல்லை என்பதே வேதனையான விஷயம்.

உலகில் பெரும் குற்றம் என்னவென்றால் அத்தியாவசியத்தை ஆடம்பரமாக்குவது தான். அதைத் தெரிந்தே பலரும், தெரியாமல் பற்பலரும் தொடர்ந்து செய்து கொண்டே வருகின்றோம். இவ்வரிகளை எழுதும் இந்நொடியிலும்  அக்குற்றம் நிச்சயமாக பல இடங்களில் அரங்கேறிக்  கொண்டுதானிருக்கும். அதுதான் சமூகத்தின் சாபக்கேடு.

இயற்கை நமக்கு கொடையாய் கொடுக்கும் ஒரு பொருளிற்கு அதற்குரிய மரியாதையை நாம் கொடுக்கத்  தவறினால் அது கண்டிப்பாகத் தன் எதிர்வினையையாற்றும். அப்படியிருக்கும் பொழுது ஜீவராசிகளுக்கு அத்தியாவசியமாய் திகழும் ஒன்றை அலட்சியப்படுத்தினால் அது எப்பேற்ப்பட்ட விளைவுகளை மனிதகுலத்திற்கு ஏற்படுத்தும் என்ற அச்சம் கிஞ்சித்தும் யார் மனதிலும் எழவில்லை என்பது தான் நிதர்சனம். நாம் செய்யும் தவறுக்கு  யாரோ ஒருவன் தண்டனையை வலியுடன் ஏற்கிறான். அவன் அந்த வலியைத்  தாங்கும் வலுவற்று போனதற்கு நாமும் ஒரு காரணம் என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை.

எதைப்பற்றி இக்கட்டுரை என்று இதுவரை யாரும் கணித்திருக்க வாய்ப்பில்லை. அறியாமையால் அலட்சியமா இல்லை அலட்சியத்தால் அறியாமையா?? ஏதோ ஒன்று. ஆனால், வந்து சேர்ந்திருக்கிற இடம் உணவுத் தட்டுப்பாடு, பற்றாக்குறை, போதிய ஊட்டச்சத்தின்மை ஆகியன. உணவை மதிக்கத் தவறியதால் வந்த விளைவுகள் தான் இவை. இவையனைத்தும் நேரடியாக ஏற்படும் விளைவுகள் தான். இதைத்தவிர  வேறு பலவும் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று மேற்சொன்ன பொருளாதார ஏற்றயிறக்கம். நீரை நாம் மதித்திருந்தால் அதன் பயன்பாட்டை கவனத்துடன் பயனுள்ள வகையில் கையாண்டிருப்போம். தவறியதால் பிறரிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.  இதற்கும் உணவிற்கும் என்ன சம்மந்தம் என்று தோன்றும் இந்த வேளையிலும் நிச்சயமாக யாரோ ஒருவர்  உணவை வீணடித்துக் கொண்டிருப்பார். உங்கள் அருகாமையிலோ அல்லது கண் காணா ஏதோவொரு  இடத்திலோ யாரோ ஒருவர் உணவில்லாமல் சிறிது சிறிதாகச்  சிதலமடைந்து கொண்டிருப்பார். இல்லாவிடில் முற்றிலுமாக மடிந்திருப்பார்.

பொருளாதாரத்திற்கும் உணவை வீணடிப்பதற்கும் என்ன சம்பந்தம் எனத் தோன்றலாம்..எந்தவித தங்கு தடையுமின்றி உணவு கிடைப்பவனுக்கு எந்த வருத்தமுமில்லை. அதனால் அவனுக்கு வீணடிப்பதில் எந்த ஒரு குற்றவுணர்ச்சியும் தோன்றாது. தோன்றப்  போவதுமில்லை. ஆனால், இது எங்கோ இருப்பவனை மறைமுகமாக பாதிக்கத்தான் செய்கிறது. இங்கு இவன் வீணடித்த உணவு, பசியால் வாடும் அவனது உணவாகக்கூடயிருக்கலாம். என்ன இருக்கலாம் அவன் உணவு தான். மற்றொருவனின் உணவை வீணடிப்பதற்க்கு நாம் யார். இதுபோல் பலர் செய்யும் தவறால் தான் மனித ஆற்றல் குறைகிறது.மனிதவளமில்லா நாட்டில் எந்தவொரு கார்ப்பரேட் நிறுவனமும் வேலைவாய்ப்பை வழங்க முன்வராது. வேறொரு நாட்டிற்கு இடப்பெயரும். அதன் விளைவு இங்கு நிகழும் பொருளாதார வீழ்ச்சி. நம்மால் நம்மீது தூவப்பட்ட மணல் துகள்கள். நாம் அனைவரும் கண்ணிற்குப்  புலப்படாத சங்கிலியால் இணைக்கப்பட்டிருக்கிறோம். அது தான் சார்புநிலைச் சமூகத்தின் மிகப்பெரிய பலமும் பலவீனமும். ஒருவனின் தவறு நிச்சயமாக இன்னொருவனை பாதிப்பிற்குள்ளாக்கும். நம்மிடமும் அது கால தாமதம் ஆனாலும் வந்து தான் தீரும்.

உணவு பலவகையில் நமக்கு நண்பனாகத்  திகழ்கிறது. நம்மிடம் அதிகம் பாசம் காட்டும் ஒருவரை எப்படி கையாள்கிறோமோ அதே நிலையில் தான் உணவை வைத்திருக்கிறோம். இதன் விளைவாக உடல் ரீதியாக பல சவால்களை நாம் அனுபவித்து வருகின்றோம். உணவில்லாதவன் தான் பலகீனமாக இருக்க வேண்டுமென்பதில்லை. சரியான முறையில் உபயோகிக்காதவனும் பலகீனமாக இருக்கக் கூடும் என்பதே வரையறுக்கப்படாத நியதி. உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். குறிப்பாக ஆண்களுக்கு மிகப்பெரிய மன உளைச்சலைக் கொடுக்கும்  மலட்டுத்தன்மைக்கும் தவறான உணவுப்பழக்கங்கள் தான் காரணியாக செயல்படுகின்றன. எப்படி நாணயத்திற்கு இருபக்கம் இருக்கின்றதோ அதே போல் உணவிற்கும் இருக்கிறது. சத்தான உணவுகளை சரியாக எடுத்துக் கொண்டால் நிமிர்ந்து நிற்கலாம். ஆனால், அதற்கு நம்மிடம் உணவு இருக்க வேண்டுமல்லவா. வளர்ந்த நாடுகளில் டன் கணக்கில் தானியங்களைப்  பராமரிக்கத் தவறுகின்றனர். என்ன செய்வதென்று தெரியாமல் கடலில் கொட்டுகின்றனர். அதேவேளையில் மிகவும் பின்தங்கிய நாடுகளிலுள்ள மைந்தர்கள் கைப்பிடி உணவு கூட இல்லாமல் தவித்து மாய்கின்றனர்.

புள்ளி விவரங்களைக் கொண்டு வந்து தீர்க்கமாக வாதிடலாம். ஆனால், முடித்து விட்டு மீண்டும் அதே தவறுகளைத் தான் செய்யப் போகிறோம். வாதிடுவதை விட பட்டினியில் மடிபவர்களை காப்பதுதான் அவசியம். ஜீவஊற்றுத்  தரிக்கும் எல்லாவற்றிற்கும் இருமுகம் இருந்தே தீரும். ஆனால், உணவிற்கு மட்டும் ஒரே முகம் பிறரைக் காப்பாற்றும் நன்முகம். தன் உயிர் துறந்து பிற உயிரைக் காக்கும் வல்லமை உணவின் மேன்மை குணம்.  அப்பேற்பட்ட பொக்கிஷத்தை நாம் இழந்து கொண்டே வருகிறோம். இதனால் அவற்றிக்கு எந்த வலியும் வேதனையும் இல்லை. வருங்காலத்தில் நாம் வீணடிப்பதற்க்கு அல்ல பசியில் உண்பதற்குக்  கூட போதிய உணவு இங்கு இருக்கப் போவதில்லை. அதற்கு பல காரணங்கள் இருக்கும்பட்சத்தில் நம் அலட்சியபோக்கும் பிரதானமான ஒன்று என்பதை நாம் ஒத்துக் கொள்ளதான் வேண்டும். வருடாவருடம் பல்லாயிரம் கிலோக்கணக்கில் நாம் வீணாக்கும் உணவிற்காக ஏங்கும் பலரை நம் உயிரைக் கொடுத்து  தான் காப்பாற்ற வேண்டுமென்கிற கட்டாயமில்லை. நாம்  மதிக்கத்தவறிய உணவின் வழியாகவே அவர்களின் உயிரைக் காக்கலாம். அவ்வகையில் நாம் ஒவ்வொருவரும் காப்பான் தான்.

நம் அலட்சியத்தின் விளைவால் சேவையின் தேவைக்காக மக்கள் அல்லல்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. இக்கணம் வரை உணவு தன் சேவையை செய்து கொண்டிருக்கிறது. அதை அனைவருக்கும் கிடைக்கும்படி செய்ய வேண்டிய பொறுப்பும், அச்சேவையை சீராகத் தொடர இயற்கைக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button