எழுத்தாளர் பெருமாள்முருகனின் கூளமாதாரி நாவல் வாசிப்பனுபவம் – உதயபாலா
கட்டுரை | வாசகசாலை

ஆடு ஓட்டியைப் பின் தொடர்ந்து நானும் ஒரு ஆடு ஓட்டியைப் போலவே மாறிவிட்டேன் என்று சொல்லும் அளவிற்கு இந்த நாவல் என் மனதிற்குள் லயித்துவிட்டது. கூளையன் எனும் சிறுவன் ஒரு தோட்டத்தில் பண்ணையத்திற்கு இருக்கிறான். அவனுடைய முதன்மையான வேலையே பட்டியாடுகளை ஓட்டிக்கொண்டு போய் மேய விடுவது, அவற்றை இரவு பகலென பாதுகாப்பதும்தான். ஊடாக, பண்ணாடிமார்கள் ஏவும் அத்தனை வேலைகளையும் மாட்டேன் என்காமல் செய்ய வேண்டும். அவனைப் போலவே, மொண்டி, செவிடி, வயிறி, நெடும்பன் என்ற சிறுவர்களும் அருகருகேயுள்ள தோட்டங்களில் பண்ணையத்திலிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றுசேரக் கூடும் இடம்தான் ஆடு மேய்க்கும் பொட்டல் காடு. அப்படிக் கூடும்போது அந்த மண்ணில் கலந்துவிட்ட அவர்களின் சொட்சபட்ச மகிழ்ச்சிகளையும் தேடித் தேடி மனதெங்கும் பூசிக்கொள்கிறார்கள். வயதிற்கேற்ப மன வளர்ச்சியோடும், உடல் வளர்ச்சியோடுமே அங்கேயுள்ள இயற்கையை ரசிக்கவும், ருசிக்கவும் பழகிவிடுகிறார்கள். அதாவது, வலி மிகுந்த வாழ்வினுள்ளும் இவ்வளவு வாழ வழிகளா என்பதுபோல அவர்களை ரசிக்க முடிகிறது. ஆடு வளர்ப்பு பற்றியும், அதை மேய்ப்பதிலுள்ள தேர்ச்சியையும் வாசிக்கும் ஒவ்வொருவராலும் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும், பண்ணாயாள் சிறுவர்களோடு செல்வன், மணி என்று பண்ணாடிமார்களின் குழந்தைகளின் வாழ்வியலையும் மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறது கதை.
புழுதி, கொழிமண், வறள் எனும் மூன்று பகுதிகளாப் பயணிக்கும் இந்த வாழ்வியல் செம்மண் காட்டின், இயல்பை, நம்பிக்கையை, அழகியலை, மூர்க்கத்தை, பரிதவிப்பை, ஆங்காரத்தை, அமைதியை, அடக்க முடியாத அழுகையை, பீரிடும் ரத்தத்தை அச்சசலாக நம் நெஞ்சில் பதித்து விடுவதில் கைதேர்ந்தவர் எழுத்தாளர் பெ.மு என்பதை ஒவ்வொரு வரியிலும் நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

ஒடுக்கப்பட்ட சமூக மக்களில் குறிப்பாக அருந்ததிய மக்கள் தம் வாழ்வாதாரத்திற்காக விவரம் தெரிந்த தன்னுடையகு ழந்தைகளை தான் வாழும் பகுதிகளில் உள்ள தோட்டக்காரர்களுக்கு அடிமை வேலையாட்களாகச் சேர்த்து விடுவார்கள். அப்படி சேர்த்து விடும் குழந்தைகளின் பெற்றவர்களுக்கு வருடக் கூலியாக முன்பணமாகவோ அல்லது பின் பணமாகவோ கொடுத்து விட வேண்டும். அக்குழந்தைகள் பண்ணையத்திலிருக்கும் வரை அந்த தோட்டத்திலேயேதான் தங்கி பண்ணாடிகள் ஏவும் எந்த மாதிரியான வேலையையும் மாட்டேன் என்காமல் செய்ய வேண்டும். வேலையில் சிறு தவறென்றாலும் பண்ணாடிமார்கள் தோலை உரித்துவிடுவார்கள். உயிரே போனாலும் கூட இவர்களுக்காகக் கேட்க நாதியிருக்காது என்பதுதான் யதார்த்த உண்மை.
இந்த நிலை தொண்ணூறுகளுக்கு முன்பாக பெரும்பான்மையான தலித் மக்களின் வாழ்வியலென்றே சொல்ல வேண்டும். எளியவர்களின் உழைப்பைச் சுரண்டும் போது சாதி எப்படி இலகுவாகிறது, ஆதிக்கவாதிகளின் தேவையின்போது எவ்வளவு இறுக்கமாகிவிடுகிறது என்பதை பல நிகழ்வுகளில் எழுத்தாளர் விளக்கியுள்ளார்.
மொண்டி வேலை பார்க்கும் தோட்டத்தில் வயதான பண்ணாடிமாரை கவனித்துக்கொள்வதற்காக அவன் படும் வேதனையை நினைக்கும்போது நெஞ்சம் பதறுகிறது. அவர்கள் பேண்டு மேண்டதை களையத்தில் ஏந்திக்கொண்டுபோய் கொட்ட வேண்டும். பின் அந்த களையத்தை கைகளால் கழுவி வைக்க வேண்டும். பீயென்றோ! நாற்றமென்றோ! முகம் சுழித்தால் உயிர் நாடியில் விழும் உதை. அதேபோல், இன்னொரு பன்னாடிமார் பிள்ளை வளர்ப்பிற்காக செவிடியை செவிலித் தாய்போல் ஆக்கிக்கொள்வது. வேலையில் கவனம் சிதறியதால் நெடும்பனை கொண்டு பேய் அடியடிப்பது, பண்ணையார் பையன் செல்வன் செய்த தவறை கூளையன் மேல் சுமத்துவது, பசிக்காகத் திருடிய கூளையனை அடித்து வறுத்தி, கிணற்றில் தழைகீழாகத் தொங்கவிடுவது என ஒவ்வொன்றும் வாழ்வியல் கொடூரம். அதனை இயல்பான கதைக் களத்தோடு, எளிய மனிதர்களின் சொல்லாட்சியோடு எழுத்தாளர் பெ.மு அவர்களால்தான் சொல்ல முடியும் என நினைக்கிறேன்.
சாதியைத் தலையில் வைத்துப் பீற்றிக்கொள்ளும் ஆதிக்கவாதிகளுக்கும், சாதியால், பொருளாதாரத்தால் நைந்தவர்களுக்குமான வாழ்வியல் பாடமாகவே இந்த சிறுசுகளின் வாழ்வு நமக்கு பாடம் புகட்டும் என நம்புகிறேன். அதேவேளையில், கதையின் முடிவை சில பக்கங்களுக்கு முன்பாகவே யூகிக்க முடிவதும் குறிப்பிடத்தக்கது.