பேராசிரியர் வ.அய்.சு.: பெயரிலியாக மறைய விரும்பிய பெருந்தகை – தஞ்சாவூர் கவிராயர்
கட்டுரை | வாசகசாலை

எண்பதுகளில் டாக்டர் வ.அய்.சு தமிழ்ப் பல்கலைக்கழத்தின் முதல் துணைவேந்தராகப் பணி ஏற்றார். நான் அவரது தனிச்செயலராகப் பணிபுரிந்தேன். ஆனால், என்னைப் பொறுத்தவரை ஒரு துறவியிடம் பணிபுரிந்தாகவே கருதுகிறேன். அலுவலகத்திலும் குடும்பத்திலும் அவர் பற்றற்ற செயல்பாட்டையே பின்பற்றினார்.
அவருடைய மூத்த மகன் காலமான செய்தி அறிந்தபோது சென்னையில் வசித்த நானும் என் மனைவியும் துக்கம் கேட்கச் சென்றோம். ‘அவங்க குடும்பத்தில் சின்ன வயதில் செத்துப் போவது புதிதல்ல. அதன்படியே அவனும் போய்விட்டான்’ – காலனை மிரட்டும் கனல்பறக்கும் கண்களோடு அவர் இதைச் சொன்னார். அவங்க குடும்பமா? திகைத்தோம். அவங்க குடும்பம் என்று குறிப்பிட்டது அவரது துணைவியார் வழி குடும்பத்தை என்று தெரிந்தது.
‘போயிட்டு வாங்கோ’ என்று கைகூப்பினார் வ.அய்.சு. ‘துக்கம் போதும், தொடரட்டும் உங்கள் பணி’ என்பது இதன் பொருள். அலுவலகப் பணி நேரத்தில் அனுமதி பெற்று நாங்கள் சென்றிருந்தோம்.

நடந்து செல்லும் ஐயனார்!
கிராமங்களில் ஒரு நம்பிக்கை உண்டு. ஐயனார் குதிரை மீதேறி நள்ளிரவில் கிராமத்தைச் சுற்றிவந்து காவல் காப்பதாக! தமிழ்ப் பல்கலைக்கழக குடியிருப்பு வளாகத்தில் அதிகாலையில் தைலமரக் கன்றுகளின் வரிசைகளின் ஊடாக வெள்ளை முண்டாசும் கையில் சிறு கோலுமாக நெடிய உருவம் ஒன்று விரைந்து செல்லும். துணைவேந்தர் காலை நடைப்பயிற்சியின் போது வளாகத்தைச் சுற்றிப் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார். எங்களுக்கு எல்லாம் அவர் நடந்து செல்லும் ஐயனாராகவே தோன்றினார். தமிழ்ப் பல்கைக் கழகத்தின் காவல் தெய்வமாக அவர் காட்சி தந்ததை மறுப்பாரும் மறப்பாரும் உண்டோ?
வாழ்க்கை கொஞ்சம் கலைந்தே இருக்கட்டும்
துணைவந்தர் அர்களுடன் வெளியூர்ப் பயணம் செல்லும் போதெல்லாம் அவரோடு மனம்விட்டுப் பேசுவது வழக்கம். ஒரு தடவை உதகையில் அவரிடம் கேட்டேன்; ‘ஐயா, உங்களைப் போல வாழ்க்கையை ஒரு ஒழுங்கிலும், கட்டுப்பாட்டிலும் வைத்துக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?’
‘தேவை இல்லை’ என்றார் வ.அய்.சு. நான் திடுக்கிட்டுப்போனேன். ‘உனக்கு இதெல்லாம் தேவை இல்லை! ஒரு நிறுவனத்தை நடத்தும் பொறுப்பேற்றிருக்கும் எனக்குத்தான் கடிகார ஒழுங்கு கட்டுப்பாடு எல்லாம் தேவை. உனக்கு Chaos theory தெரியுமா? அதோ வானத்தில் சிதறிக் கிடக்கும் நட்சத்திரங்களைப் பார். எந்த ஒழுங்கும் இல்லாமல் அவை குப்பை போல் காட்சி அளித்தாலும் அதிலும் ஒரு ஒழுங்கு உண்டு. நீ உன் வாழ்க்கையை ஒழுங்கு படுத்த முயற்சி செய்தால் வாழ்க்கையை இழந்து விடுவாய். வாழ்க்கை கொஞ்சம் கலைந்தே இருக்கட்டும். அதுதான் வாழ்வுக்குச் சுவையூட்டும்!’. கலைந்து கிடக்கும் என் படிப்பறை மேசையை என் மனைவி ஒழுங்குபடுத்தி வைக்கும் ஒவ்வொரு முறையும் டாக்டர் வ.அய்.சு சொன்னது நினைவுக்கு வந்துவிடும். ஒழுங்காக அடுக்கப்பட்ட என் மேசையில் எனக்கு வேண்டியதை நான் நெடுநேரம் தேடவேண்டி இருக்கும்!
தமிழ்நாடு ஆச்சரியங்கள்
‘உங்கள் ஊரில் என்னை ஆச்சரியப்படுத்துபவை இரண்டே விஷயங்கள்தான்’ என்பார் வ.அய்.சு. ‘’ஒன்று மழை வந்துவிட்டால் வெளியே நடமாட மாட்டீர்கள் மழையை காரணம் காட்டி அலுவலகம் வர மாட்டீர்கள்! கேரளத்தில் வருடம் முழுவதும் மழை பெய்தாலும் வாழ்க்கை ஸ்தம்பிக்காது! குடையை பிடித்துக் கொண்டு அலுவல் இடங்களுக்கு எப்படியாவது போய்விடுவோம்.
‘இன்னொரு ஆச்சரியம் யாரிடம் எந்த வேலையைக் கொடுத்தாலும் எப்போது முடிப்பீர்கள் என்று கேட்டால் “இப்போ” என்று சொல்லிவிடுகிறீர்கள். அந்த இப்போ என்பதற்கு ‘எந்த கால வரையறையும் இல்லை என்ற ரகசியம் பிறகுதான் தெரிந்தது’ – என்பார்.
கடமையும் காலனும்.
தமிழ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த வயது முதிர்ந்த ஆய்வாளர் ஒருவர் உடல்நிலை குறைவு காரணமாக நீண்ட விடுப்பில் செல்ல நேரிட்டது. அவர் வீட்டில் இருந்தபடி துணைவேந்தருக்கு எழுதிய கடிதத்தில் திரும்பவும் பணியைத் தொடர முடியுமா என்று தெரியவில்லை எனவும், மாத்திரைகளால் வாழ்ந்து வருவதாகவும் தாங்கள் என்னிடம் ஒப்படைத்த பணி பாதியிலே நிற்கிறது எனவும் குறிப்பிட்டு இருந்தார். துணைவேந்தர் அதற்கு எழுதிய பதில் நன்றாக நினைவிருக்கிறது! கடமை முடியும் வரை காலன் உங்களை அணுகான்!. இங்கு வந்து பணியைத் தொடர்க! காலனை வெல்ல இதுவும் வழியோ என்று உணர்ந்தவராய் அந்த முதிய ஆய்வாளர் வந்துவிட்டார். பணியைத் தொடர்ந்து நீண்ட நாட்கள் வாழ்ந்திருந்தார்
எழுதிவைத்த குறிப்புகள்.
டாக்டர். வ.அய்.சு. அவர்களிடம் ஒரு சுவாரஸ்யமான பழக்கம் இருந்தது அவர் மேற்கொண்ட பயணங்கள், சந்திப்புகள் பற்றி எல்லாம் ஆங்கிலத்தில் சின்னஞ்சிறு குறிப்புகளை எழுதி வைப்பார். இந்த குறிப்புகளில் அலுப்பூட்டும் அலுவலக தஸ்தாவேஜூ நடை இருக்காது. சுவையான பத்திரிகை கட்டுரை ஒன்றினைப் படிப்பது போல் இருக்கும்! அலுவலகம் சார்ந்த அனுபவங்கள்தான் ஆனால், பளிச்சென்று இலகுவாக புரிகிற ‘பத்திரிகை நடையில்’ அவை அமைந்து இருக்கும். அவருக்குள் இருக்கும் பத்திரிக்கை ஆசிரியர் தலை காட்டும் தருணங்களாக இக்குறிப்புகள் இருக்கும். Note as a trip to Sembaganoor library kodaikanal, note on a visit to Pondichery French Institute of Indiology note on meeting with an Sivaraman Dinamani Editor. Note on discussion with Finace Minister. Note on the meeting with UGC Chairman – இப்படி நூற்றுக்கணக்கான குறிப்புகள் இப்படி நூற்றுக்கணக்கான குறிப்புகள் அவை நகல் எடுக்கப்பட்டு தொடர்புடைய கோப்புகளுக்கு அனுப்பப்பட்டன.
அவை நடவடிக்கை குறிப்புகளோ, அலுவலக ஆணைகளோ அல்ல; இலக்கு நோக்கி எடுத்து வைக்கும் தனது காலடிச் சுவடுகளை அடையாளம் காண எழுதி வைத்த ‘சுய தரிசனங்கள்’ ஒரு தடவை இப்படியான ஒரு குறிப்பை பார்த்துவிட்டு பதிவாளர் என்னிடம் ஒருவர் அப்பாவியாக கேட்டார். ‘சார்; இதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யட்டும்?’. அப்போது மனசுக்குள் சிரித்துக் கொண்டேன் இப்போது சொல்கிறேன். இவற்றையெல்லாம் தொகுத்தால் பல்கலைக்கழகத்துக்கு ஒரு பல்சுவை நூல் கிடைத்திருக்குமே.
எழுத்தாளனாக நடத்தினார்!
என்னை தனது செயலாளராக அவர் நடத்தியதே இல்லை. ஒரு எழுத்தாளனுக்கு உரிய கௌரவத்தை கொடுத்தார் என் கர்வத்தை வளர்த்தார் கூடவே தஞ்சாவூர்க்காரன் என்ற தலைக்கனம் கேட்க வேண்டுமா? ‘நாமார்க்கும் குடி அல்லோம்; நமனை அஞ்சோம்’ பரம்பரை அல்லவோ நாம்! டாக்டர் வ.அய்.சு. அவர்கள் தனது வரைவுகளை என்னிடம் கொடுத்து எனது கேரள தமிழ் இங்கே வித்தியாசமாக ஒலிக்கும். தேவையான இடங்களில் பொருத்தமான உங்கள் வழக்கு மொழியை பயன்படுத்தி திருத்திக் கொள்ளலாம் என்பார். அவர் அவரை திருத்தும் தகுதி எனக்கேது?
அவர் தமிழ் எழுதும் பாணி தமிழுக்குப் புதியது. சுருக்கமும் ஆழமும் கொண்டது. சுரீரென்று தைப்பது; ஒரு தத்துவ ஞானியின் அலட்சியம் மிக்கது. சிப்பாயின் மிடுக்கோடு நடந்து செல்லும் அவர் சிந்தனைகளின் அணிவகுப்பு பரவசமூட்டுவது, அலங்காரச் சொற்களோ அடுக்குமுறைகளோ இல்லாதது.
அவர் வரைவுகளை அப்படியே தட்டச்சு செய்து நீட்டுவோம் – ‘ஐயா, இதுவே நல்லா இருக்கு இப்படியே இருக்கட்டும்!’ என்பேன். அந்த சிரிப்பில் பல அர்த்தங்கள் இருக்கும்
குன்று என்ன விலை?
பழங்குடியினர் ஆய்வு மையம் உதகையில் அமைய அரும்பாடுபட்டார் வ.அய்.சு. பல்கலைக்கழகப் பொறியாளர் இளங்கோவன் உதகை சென்றார் ஆய்வு மையம் அமைய குறிக்கப்பட்ட இடம் தனியார் ஒருவருக்குச் சொந்தமான குன்றுப் பகுதியில் அமைந்திருப்பதாக தொலைபேசியில் தெரிவித்தார். ‘அது சரி.. குன்று என்ன விலை?’ என்று பட்டென்று கேட்டார் துணைவேந்தர். தமிழுக்காக மலையையே விலை பேசிய மாமனிதர் வ.அய்.சு.
கூனல் முதுகும் கோடி ரூபாயும்.
பேராசிரியர் அவர்களின் முதுகில் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக அவரால் நிமிர்ந்து நேராக நிற்க முடியாத நிலை ஏற்பட்டது. மருத்துவர்கள் கட்டாயம் படுக்கை ஓய்வு தேவை என்று கூறிவிட்டனர். ஆனாலும் துணைவேந்தர் கூன் போட்டபடியே அலுவலகம் வந்தார். கூன் போட்டபடியே அவர் கூடத்திற்குள் அங்குமிங்கும் செல்வதை பார்த்தவர்கள் பயந்து போனார்கள் அம்பாய் இருந்தால் என்ன? வில்லாய் வளைந்தால் என்ன? இலக்குதான் அவர் குறிக்கோள். புது தில்லியில் அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பான துறை கோடி ரூபாய் மான்யம் அனுமதிக்க முடிவு செய்திருந்தது. இதை பெறுவதற்காக புது தில்லி புறப்பட்டார். கூன் முதுகோடு டெல்லி சென்று கோடி ரூபாய்க்கான ஆணையுடன் திரும்பினார். முதுகு சரியானதும் போயிருக்கலாமே என்றோம் ‘சரிதான், என் உடல் நிலையைப் பார்த்ததும் உடனே கொடுத்து விட்டார்கள். நல்லபடியாக போயிருந்தால் நாள் கடத்தி இருப்பார்கள்’ என்றார் நோயைக் கூட நோக்கம் நிறைவேற பயன்படுத்தும் நூதன வழிமுறை கண்டு வியந்து நின்றோம்.
பிழை திருத்தம்.
மெய்ப்புத் திருத்துவது ஒரு யோகம். ஆனால், மெய்ப்பு திருத்துநர்களை இப்போது எல்லாம் காண முடிவதில்லை. அருகிவரும் உயிரினங்கள் வரிசையில் அவர்களும் சேர்ந்து விட்டார்கள். நான் மிகவும் கொண்டாடும் ஒரு நாளிதழில் ஒரு காலத்தில் அச்சுப் பிழைகளையே பார்க்க முடியாது இப்போது அந்த இதழிலும் பிழைகள் மலிந்து விட்டன. போதுமான அளவு பிழை திருத்தம் செய்வார்கள் இல்லாததே காரணம். பிழை திருத்துநர்கள் எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு அச்சிட்ட பக்கங்களில் பிழைகளைத் திருத்தியபடியே பயணிப்பவர்கள். யார் எழுதிய புத்தகமானாலும் பிழைகளைத் திருத்த பின்வாங்கவே மாட்டார்கள். திருத்துவதில் பெருமை கொள்ளவும் மாட்டார்கள். பிழை திருத்தம் ஒன்றே அவர்களின் நோக்கம். இதிலிருந்து பிறழ்வதில்லை பல்வேறு பணிகளுக்கு இடையேயும் ஏதேதோ அச்சிட்ட பக்கங்களை பிழை திருத்தம் செய்தபடி இருப்பார் டாக்டர் வ.அய்.சு. அழைப்பிதழே ஆனாலும் ஆய்வுப் படைப்பானாலும் அச்சுப் பிழைகளை மட்டும் பொறுத்துக் கொள்ளவே மாட்டார். தனது ஆய்வுப் படைப்பில் அச்சிடும் பணியை மேற்கொண்ட ஒரு ஆய்வாளர் பிழை திருத்தம் சரியாகச் செய்யவில்லை. அவரது துறைத் தலைவரை அழைத்து அந்த ஆய்வாளரை பிரித்து விட்டு விடலாமா என்று கேட்டார். அதற்குப்பின் துறைத் தலைவர் அனுப்பிய மெய்ப்புகளில் அச்சுப் பிழைகளையே பார்க்க முடியவில்லை!
செயலாளருக்கு தகுதி உண்டா?
ஒருமுறை ஆட்சிக்குழுக் கூட்டத்திற்கு வருகை தந்த முன்னாள் கல்விச்செயலாளர் திரு சுந்தரராஜன் I.A.S. துணைவேந்தரிடம், ‘உங்கள் செயலாளர் Long Hand-ல் குறிப்புகள் எழுதுவதைப் பார்த்தேன். சுருக்கெழுத்தும் தட்டச்சும் தெரிந்தவரை செயலாளராக வைத்துக் கொள்ளலாமே?’ என்றார். துணைவேந்தர் பதில் பேசாமல் புன்னகை செய்தார். கூட்டம் முடிந்து அன்று மாலை நிகழ்ச்சி குறிப்புகளின் குறிப்புகளின் வரைவை வாசித்துப் பார்த்த திரு. சுந்தரராஜன் என்னை வெகுவாகப் பாராட்டினார். வ.அய்.சு. சொன்னார் ‘சுருக்கெழுத்தாளர்கள் நாம் சொல்வதைத்தான் எழுதுவார்கள். ஆனால், கோபி சொல்ல விரும்பியதையும்’ எழுதுவான் என்றார். ஆர்வம்தான் காரணம்.

விமானத்தை நிறுத்தினேன்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்த துணைவேந்தர் சென்றார். புறப்படுவதற்கு முதல் நாள் தனது உரையை ‘டிக்டேட்’ செய்ய ஆரம்பித்து அன்றிரவும் தொடர்ந்தது பணி. தஞ்சையில் இருந்த தனியார் அச்சகம் ஒன்றை நள்ளிரவில் செயல்பட வைத்து பட்டமளிப்பு விழா வரை சிற்றேட்டினை அச்சிடும் வேலை நீண்டுகொண்டே போயிற்று. பிழை திருத்தத்தில் பெரும்பகுதி நேரம் கழிந்தது. அதிகாலை 5 மணி அளவில் அச்சிட்டு முடித்தோம். துணைவேந்தர் அவர்கள் தமது ஊர்தியில் திருச்சி விமான நிலையம் சென்று விட்டார். வீட்டில் அம்மா கேட்டார்களாம் – ‘Lecture Copy-ஐ எடுத்துக் கொள்ளாமல் போகிறீர்களே?’ என்று. ‘என் வேலை முடிந்தது. அதை அச்சிட்டு கையில் சேர்ப்பது கோபியின் பொறுப்பு. அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை’ என்றாராம். நான் திருச்சி விமான நிலைய கட்டுப்பாடு அறையைத் தொடர்பு கொண்டு, ‘இலங்கை செல்லும் விமானத்தை 10 நிமிடங்கள் நிறுத்தி வைக்க முடியுமா?’ என்று கேட்டேன். என் நண்பர்தான் அவர் என்றாலும், ‘என் வேலைக்கே உலை வைக்கிறீர்களே!’ என்றார். நான் நடந்ததை விளக்கியதும், ‘தமிழுக்காக செய்கிறேன்’ என்றார். துணைவேந்தர் கைகளில் பட்டமளிப்பு விழா உரை சேர்க்கப்பட்டது. அன்று 10 நிமிடங்கள் தாமதமாக விமானம் இலங்கை புறப்பட்டுச் சென்றதற்கு காரணம் என்னவென்று இன்று வரை யாருக்கும் தெரியாது.. துணைவேந்தர் உட்பட.
பட்டத்து யானை!
துணைவேந்தரிடம் பணிபுரிந்த தபேதார் திரு.நடராசன், திருமதி கோசலை, நான், ஓட்டுனர் வடிவேலு எல்லாரும் ஒரே குடும்பமாக இருந்தோம். ஏனைய அலுவலக ஊழியர்களையும் குடும்ப அங்கத்தினர்களாகவே டாக்டர் வ.அய்.சு. கருதினார் சில சமயங்களில் துணைவேந்தர் இல்லத்திலிருந்து பெரிய எவர்சில்வர் தூக்குவாளி நிறைய பாயசம் வரும். கேரளத்து கைப்பக்குவத்தில் அவர் வீட்டு பாயசமும் தின்பண்டங்களும் ருசிக்கும். மணக்கும்.
முறுக்கிய மீசையும், டர்பனுமாக,சீ ருடை கம்பீரமாக காட்சியளிப்பார் தபேதார் நடராஜன். துணைவேந்தர் அரண்மனை வளாகத்தைச் சுற்றி வரும் போது அவருக்கு முன்னால் தபேதார் நடந்து வருவது மன்னர் பின் தொடர பட்டத்து யானை வருவதுபோல இருக்கும்.
துணைவேந்தரைக் காணவரும் வெளிநாட்டவர்கள் தபேதாரைப் பார்த்து விட்டு இவர் தஞ்சாவூர் மன்னர்கள் வம்சாவளியைச் சேர்ந்தவரா என்று வியப்புடன் கேட்பதுண்டு. அப்படி ஒரு கம்பீரமான மீசை. வீரப்பார்வை.
துணைவேந்தரின் அறைக்குள் நடைபெறும் கூட்டங்களில் ஒரு ட்ரேயில் காபி கோப்பைகளை எடுத்து வந்து விருந்தினர்கள் முன்வைப்பது ஏர் இந்தியா மகாராஜா படத்தில் பணிவுடன் குனிந்து வணங்கும் மகாராஜாவை நேரில் பார்ப்பதுபோல இருக்கும்
ஒரு ஞாயிற்றுக்கிழமை துணைவேந்தர் அலுவலகம் வந்து பணிபுரிய நேர்ந்தது. தபேதார் நடராசனையும் வருமாறு பணித்திருந்தார். தபேதார் வந்தார். பட்டுச் ஜிப்பாவும், பச்சை பெல்ட் வேட்டியும், மைனர் செயினுமாய், தலையில் டர்பன் இல்லாமல் ஒரு ஜமீன்தார் போல வந்து நின்றார். ‘என்னங்க இது வேஷம்?’ என்றேன். ‘ஐயா, நேத்து போட்டதுதாங்க வேஷம். இது நெசம்’ என்று போட்டார் ஒரு போடு. துணைவேந்தர் கேட்டார் ‘ஏன் இப்படி வந்திருக்கேள்?’ தபேதார் அமைதியாகச் சொன்னார். ‘ஐயா ஞாயிற்றுக்கிழமைகளில் சீருடை போடுவது கிடையாது’. உடனே அய்யா இனிமேல் ஞாயிற்றுக்கிழமைகளில் தபேதார் அலுவலகம் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார். கடைநிலை ஊழியரின் உணர்வுக்கும் மதிப்பளிப்பது டாக்டர் வ.அய்.சு. அவர்களின் வழக்கம்.
திடீரென்று ஒரு நாள் நடராசன் மாரடைப்பால் காலமானார். பட்டத்து யானை வீழ்ந்து விட்டது. சிறிதுகாலம் கழித்து துணைவேந்தர் பதவி துறக்கும் நிலை ஏற்பட்டது.
தபேதார் நடராசன் பெயரில் அவர் நினைவைப் போற்றும் விருந்தகம் இருக்கிறது.
சின்ன சின்ன நினைவலைகள்:
- டாக்டர் வ.அய்.சு. விரும்பி படிக்கும் நாளேடு ‘மாலை முரசு’
- அடிக்கடி சொல்லும் அறிவுரை. Be impartial. It is not only Important that you are impartial but you should also appear to be so. நடுநிலையோடு செயல்பட்டால் மட்டும் போதாது அவ்வாறு தோன்றவும் வேண்டும்.
- திருச்சியில் வாழ்ந்த சைவப்பெரியார் கோ. வன்மீகநாதன் அவர்களைச் சந்தித்து ஆலோசனையும் ஆசிகளும் பெறுவது வழக்கம்.
- தமக்கு குற்றேவல் செய்ய ஆர்வம் காட்டுபவர்களை பிடிக்காது.
- நல்ல தமிழ் நடை எழுத வேண்டுமானால் பெரியாரைப் படிக்க வேண்டும் என்பார்.
- சில சமயம் கோப்புகளை அவர் எடுத்து வந்து என் மேசைமீது வைத்து விட்டு போவார்.
- ஒரு கருத்தரங்கு முடியும் தருவாயில் அடுத்த கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை தொடங்கி விடுவார்.
- வெற்றிகளில் திளைக்க விரும்பவே மாட்டார். பல்கலைக்கழக மான்யக்குழு தமிழ் பல்கலைக்கழகத்திற்கு அங்கீகாரம் அளித்து விட்டது என்ற தகவல் தொலைபேசிவழி அவரிடம் தெரிவிக்கப் பட்டபோது ‘நன்றி’ என்ற ஒற்றைச் சொலுடன் தொலைபேசி தொடர்பைத் துண்டித்தார்.
- யாழ்பாணப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உரையை ‘அளவற்ற வாய்ச் சொல்லன் அறிஞன் ஆசான்’ என்ற தம்மபத வரியோடு முடித்திருப்பார். நீ நிறையப் பேசுவதால் இனி எழுத்துவழி சீட்டொன்றை அனுப்பி செயல்படுக என்றார். அதிலிருந்து துண்டு சீட்டுகளில் எழுத்து மூலம் அவருக்கு தொடர்பு கொண்டேன். பல நாட்கள் சந்திக்காமலேயே வேலை நடக்கும். ‘வெளியே மழை பெய்கிறது’ என்று ஒரு முறை சீட்டு அனுப்பியது நினைவுக்கு வருகிறது.
- எட்டு மணிக்கெல்லாம் அலுவலகம் வந்துவிடுவார்.
- கவிஞரும் செனகல் நாட்டு குடியரசுத் தலைவருமான லியோ போல்டு செங்கார் அவர்களுடன் நெருங்கிய கடிதத் தொடர்பு கொண்டிருந்தார்.
- நீண்ட நாள் வாழ எளிய வழி அதிகாலை எழுந்து கொள்வதே; பிறரை விட நீளமான நாள் கிடைத்துவிடும் என்பார்.
- Quit when going is easy – என்பார்.
- துணைவேந்தர் ஆனதில் அவருக்கு உள்ளூர வருத்தமிருந்தது. ‘திருவனந்தையில் அமைதியான என் ஆய்வு பணி நின்று விட்டது. புத்தக வாசிப்பும் போய்விட்டது’ என்று காரை ஓட்டியபடியே சாலையைப் பார்த்துக் கொண்டு என்னிடம் சொன்னார்.
- முன்னாள் நிதி அமைச்சர் நெடுஞ்செழியன் தமிழ்ப் பல்கலைக் கழகம் வந்த போது அவர் முகம் கடுமையாக இருந்தது. துணைவேந்தர் அவரைப் பார்த்ததும் அவர் முதுகில் தட்டி கொடுத்து, ‘அம்பி சௌக்கியமா?’ என்றார். அமைச்சரின் முதுகில் தட்டிக் கொடுக்க வ.அய்.சு. தவிர யாரால் முடியும்? அமைச்சர் முகத்தில் புன்முறுவல் பூக்க இருகரம் கூப்பி துணைவேந்தரை வணங்கினார்.
- அவர் சுருக்கமாகவும், வேதாந்த பரமமாகவும், அறிவுப் பூர்வமாகவும் எத்தனையோ வழிகாட்டும் வாசகங்களை எழுதியிருக்கிறார். அவற்றில் ஒரு வாசகத்தை என்றென்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வாசகமாகவே நான் மதிக்கிறேன். அந்த வாசகத்தோடு இக்கட்டுரையை முடிக்கிறேன். “பெருஞ்செயல்களை ஓசையின்றிச் செய்து விட்டு பெயரிலியாக மறைவதே நன்று.