இணைய இதழ்இணைய இதழ் 100கட்டுரைகள்

சுக்ருதம்: உறவுகளின் பொய் முகங்கள் – ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

கட்டுரை | வாசகசாலை

புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.வி. வாசுதேவன் நாயரின் எழுத்தில், இயக்குநர் ஹரிகுமாரின் இயக்கத்தில் வெளிவந்த ‘சுக்ருதம்’(தமிழில் ‘நற்செயல்கள்’ என்று பொருள்) என்ற மலையாளத் திரைப்படம் குறித்து கட்டுரை எழுதுவதற்காக, மீண்டும் ‘சுக்ருதம்’ திரைப்படத்தை யூட்யூபில் பார்க்கலாம் என்று முடிவெடுத்தேன். உடனே எனது மனைவியிடம், “இன்னைக்கி ஒரு அருமையான மலையாளப்படம் பாக்கலாம். உக்காரு” என்றவுடன் என் மனைவி என்னை திகிலுடன் பார்த்தார்.

கட்.

ஃப்ளாஷ்பேக்

பத்து நாட்களுக்கு முன்பு.

இரவு, சென்னை.

ஒரு பிரபல மலையாள கலைப் பட இயக்குநரின் ஒரு திரைப்படத்தை “அற்புதமான படம்’ என்று எனது மனைவியை வற்புறுத்தி என்னுடன் சேர்ந்து பார்க்க வைத்தேன். படம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே ஒரு சிறுவன் ஆற்று நீரில் மூழ்க… கரையிலிருந்த இன்னொரு சிறுவன் “ஒண்ணு… ரெண்ணு… மூணு…” என்று எண்ண ஆரம்பித்தான். உடனே எனது மனைவி, “அய்யய்யோ…. அந்தப் பையன் செத்துப் போயிடுவான் போலருக்கு…” என்று ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்தார். கரையிலிருந்த சிறுவன் தொடர்ந்து எண்ணிக்கொண்டிருந்தான். “4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15….” என்று பயல் எண்ணிக்கொண்டேயிருந்தான். இப்போது என் மனைவி சற்றே நெளிய ஆரம்பித்தார். “எவ்ளோ நேரங்க எண்ணிகிட்டேயிருப்பான்?” என்றார் எரிச்சலுடன். மெதுவாக நகரும் படங்களை ஆர்வத்துடன் பார்த்தால்தான் ‘அறிவுஜீவி’யாக முடியும் என்பதால் எனது எரிச்சலை வெளிக்காட்டிக்கொள்ளாமல் நான், “பாரு… பாரு….” என்றேன். சிறுவன் தொடர்ந்து, “16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30….” என்று எண்ணிக்கொண்டேயிருக்க…. என் மனைவி என்னை முறைத்தபடி எழுந்து செல்ல முயற்சித்தார். நான் எனது மனைவியையும் அறிவுஜீவி ஆக்கவேண்டும் என்ற முடிவோடு கையைப் பிடித்து பிடிவாதமாக உட்கார வைத்தேன். திரைப்படத்தில் சிறுவன், “31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44…..” என்று தொடர்ந்து எண்ணிக்கொண்டேயிருக்க… அதற்கு மேல் என் மனைவியால் பொறுக்க முடியவில்லை,

“ஏங்க இப்படி என்னை சித்திரைவதைப் படுத்துறீங்க? உலகத்துல எப்படி எப்படியோ பொண்டாட்டிங்கள கொடுமைப் படுத்துவாங்க… ஆனா, இந்த மாதிரி டார்ச்சர நான் பாத்ததே இல்ல. இதுக்கு நீங்க குடிச்சுட்டு வந்து இழுத்துப் போட்டு அடிச்சா கூட பரவால்ல… இன்னும் சாவுறதுக்குள்ள என்னன்னல்லாம் பாத்துத் தொலையணுமோ?” என்று புலம்பிய எனது மனைவியைப் பரிதாபமாக பார்த்துக்கொண்டே, நான் டிவியைப் பாக்க…. சிறுவன் ஐம்பதைத் தாண்டியும், “51… 52, 53….” என்று எண்ணிக்கொண்டேயிருக்க…. வேகமாக ரிமோட்டை எடுத்து என் மனைவி டிவியை ஆஃப் செய்தார். (நீரில் மூழ்கிய அந்த சிறுவன் என்ன ஆனான்? என்ற கேள்வி வேறு இன்று வரை மண்டையைக் குடைந்துகொண்டிருக்கிறது)

ஃபிளாஷ்பேக் நிறைவு

அந்த ஆர்ட் ஃபிலிம் தந்த அனுபவத்தில் எனது மனைவி, “என்னைப் பிடிக்கலன்னா சொல்லிடுங்க… நான் வேணும்ன்னா எங்கம்மா வீட்டுல போய் இருந்துக்கறன்… இப்படி மலையாளப் படம் பாக்கச் சொல்லி என்னை டார்ச்சர் பண்ணாதீங்க…” என்றார்.

“இல்லல்ல… இது ஆர்ட் ஃபிலிம்ல்லாம் கிடையாது. ரொம்ப நல்ல கதை. கால் மணி நேரம் பாரு. பிடிக்கலன்னா போயிடு…” என்று கூறி அவரை ‘சுக்ருதம்’ திரைப்படம் பார்க்க அமர வைத்தேன். பின்னர் படம் முடியும் வரையில் அவர் எழவே இல்லை. ஒரு நல்ல திரைப்படம் நமக்கு நன்கு பரிச்சயமான மனித உணர்வுகளை, பிசிறற்ற நேர்த்தியான திரைக்கதையுடன் சொல்லும்போது அது அனைவரையும் ரசிக்க வைத்து விடுகிறது.

திரு. எம்.டி.வாசுதேவன் நாயரின் 90-ஆவது பிறந்தநாளின் போது எம்டிவி நெடுநாட்கள் பணிபுரிந்த ‘மாத்ருபூமி’ செய்தித்தாள் நிறுவனம் அவருக்காக ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு ‘சுக்ருதம்’ என்றுதான் பெயர் வைத்தனர். இப்படத்தின் இயக்குநர் ஹரிகுமார் திருவனந்தபுரத்தில் சொந்த வீடு கட்டியபோது தனது வீட்டிற்கு ‘சுக்ருதம்’ என்றே பெயர் வைத்தார். ஏனெனில் 1994-ல் வெளிவந்த ‘சுக்ருதம்’ திரைப்படம் ஹரிகுமார் மற்றும் எம்டிவியின் திரைவாழ்க்கையிலும், தீவிர மலையாளத் திரைப்பட ரசிகர்களின் நினைவுகளிலும் இன்று வரையிலும் மறக்க முடியாத திரைப்படம். இப்படம் 1994-ஆம் ஆண்டில் சிறந்த மலையாளப் படத்திற்கான தேசிய விருதைப் பெற்றதுடன், இப்படத்தின் பிண்ணனி இசைக்காக இசையமைப்பாளர் ஜான்சனும் தேசிய விருது பெற்றார்.

          ‘சுக்ருதம்’ திரைப்படத்தை ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்திருந்தும், இப்போதும் அதே ரசனையுடன் என்னால் பார்க்க முடிந்ததே அப்படத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும். காலம் கடந்தும் நம்மால் அதே போல் ரசிக்கக்கூடிய படங்களே கலாரீதியாக முழுமையாக வெற்றி பெற்ற படங்கள் ஆகும். அந்த வகையில் நான் எப்போதும் நினைவுகொள்ளும் எனது ‘டாப் 25’ மலையாளப் படங்களில் ‘சுக்ருதம்’ திரைப்படமும் இருக்கிறது.

மனிதன் ஒரு சமூகமாக வாழ ஆரம்பித்த பிறகு உறவுகள், குடும்பம், மனைவி, நண்பர்கள்…. என்று பலரும் நம் மீது மிகவும் அக்கறையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற கற்பிதத்தை உருவாக்கி, நாமும் அவ்வாறுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், ஒரு பெரிய நெருக்கடி வந்தால், அந்த கற்பிதங்கள் எல்லாம் எப்படி தூள் தூளாக சிதைந்துபோகிறது என்பதை ‘சுக்ருதம்’ திரைப்படம் வெகு நேர்த்தியாக சித்தரித்துள்ளது.

மலையாளப் பத்திரிகையாளர் ரவிசங்கர் (மம்முட்டி) முதல் காட்சியிலேயே மருத்துவமனையில் ஒரு ப்ளட் கான்ஸர் நோயாளியாக அறிமுகமாகிறான். டாக்டர் அவரிடம் அதிகபட்சம், “மூன்று மாதங்கள் முதல் ஒரு வருடம் வரைதான் உயிரோடு இருக்கமுடியும்” என்று கூறுகிறார். மம்முட்டி காதலித்து மணந்துகொண்ட மாலினியும் (கௌதமி), அவர்களின் காதல் திருமணத்துக்கு உதவியாக இருந்த மம்முட்டியின் நெருங்கிய நண்பன் ராஜேந்திரனும் (மனோஜ் கே. ஜெயன்) மரணத்தின் கடைசி வாசற்படியில் நின்றுகொண்டிருக்கும் ரவிசங்கரை அக்கறையுடன் கவனித்துக் கொள்கின்றனர். ஒரு சிறு தொழிலதிபரான ராஜேந்திரன் தன் நண்பனுக்கான மருத்துவச் செலவுகளைப் பார்த்துக்கொள்வதுடன், மாலினிக்கும் ஆறுதலாக இருக்கிறான். ரவிசங்கர்-மாலினி தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை.

வலி மிகுந்த மருத்துவ சிகிச்சையைத் தொடர விரும்பாத ரவிசங்கர் டாக்டரிடம், “எனக்கு மட்டுமில்லை. கட்டாயம் இறக்கப்போகும் எந்த ஒரு மனிதனின் மரணத்தையும் தாமதமாக்காதீர்கள். எளிதாக்குங்கள். நான் தொடர்ந்து மருத்துவமனையில் இருக்க விரும்பவில்லை. எனது சொந்த ஊருக்குச் செல்லவேண்டும்” என்ற பிடிவாதமாகக் கூற… வேறு வழியின்றி ரவிசங்கரை டிஸ்சார்ஜ் செய்கின்றனர்.

ஊரில் ஏராளமான நிலங்கள், பெரிய வீடு… என்று நன்கு வசதியான ரவிசங்கர் தனது சொந்த ஊருக்குச் செல்ல… அங்கு ரவிசங்கரின் சித்தியும், சித்தப்பாவும் இருக்கின்றனர். சித்தி அவரை மிகவும் பரிவுடன் கவனித்துக் கொள்கிறார். கௌதமி தனது கல்லூரியில் விடுமுறை எடுக்க முடியாது என்று கோழிக்கோடு திரும்பிச் செல்கிறார். அப்போது இளம் வயதில் ரவிசங்கரை காதலித்து, இன்னும் திருமணமாகாமல் ரவிசங்கரின் பக்கத்து வீட்டிலேயே இருக்கும் ரவிசங்கரின் முறைப்பெண் துர்கா (சாந்தி கிருஷ்ணா), ரவிசங்கரின் அருகிலேயே இருக்கும் வாய்ப்பை எண்ணி மகிழ்ச்சியடைந்து, ரவிசங்கருடன் இருந்து அவனை நன்கு பரிவுடன் கவனித்துக்கொள்கிறாள்.

ஒரு முறை ரவிசங்கரின் நண்பன் ராஜேந்திரனும், மனைவி மாலினியும் ரவிசங்கரைப் பார்க்க ஊருக்கு வரும்போது அவர்கள் அங்கேயே தங்கியிருக்கின்றனர். அப்போது ராஜேந்திரனின் அறையில் மாலினி, “ரவிக்கு பிறகு எனக்கு யார் இருக்கிறார்கள்?” என்று அழ… ராஜேந்திரன், ‘நான் இருக்கிறேன்…” என்று கூற… கௌதமி அழுதுகொண்டே ராஜேந்திரனின் தோளில் சாய… ராஜேந்திரன் மாலினியை அணைத்துக் கொள்கிறான். இக்காட்சியை பார்த்துவிடும் ரவிசங்கர் முதலில் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறான். ஆனால், பின்னர் ஒரு முடிவுக்கு வந்து ராஜேந்திரனிடமும், மாலினியிடமும் தான் இறந்த பிறகு இருவரும் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று கூறுகிறான். ஆனால், அவர்கள் மறுக்கின்றனர்.

இதனிடையே ரவியின் சொத்துகளில் குறியாக இருக்கும் சித்தப்பாவிடம், தனது மரணத்திற்கு பிறகு தனது சொத்துக்களை சித்தப்பாவின் பிள்ளைகள் மற்றும் மாலினியை உள்ளடக்கிய ஒரு ட்ரஸ்ட்டிடம் ஒப்படைக்க உள்ளதாக ரவிசங்கர் கூறுகிறார். சித்தப்பா சந்தோஷப்படுகிறார்.

அப்போது ரவியை சந்திக்கும் ரவியின் பழைய நண்பரான ஒரு மருத்துவர், தான் ஊட்டியில் இது போன்ற நோய்களுக்கு ஹோலிஸ்டிக் ட்ரீட்மென்ட் அளிப்பதாகக் கூறி ரவியை அழைத்துச் சென்று, அவனை முற்றிலும் குணப்படுத்துகிறார். திரும்பி வரும் ரவிசங்கர் தனது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் எதிர்பாராத விஷயங்கள்தான் இப்படத்தை முற்றிலும் வேறொரு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது.

மாலினியை திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தில் இருக்கும் ராஜேந்திரன் இதை ஏற்றுக்கொள்ளமுடியாமல் ரவியை சந்திப்பதை தவிர்க்கிறான். அதற்குள் ராஜேந்திரனுடன் மனதளவில் நெருங்கியிருக்கும் மாலினி குழப்பமான மனநிலைக்கு ஆளாகிறாள். சித்தப்பா ரவியின் சொத்துக்களை ட்ரஸ்டடிற்கு எழுதி வைப்பது குறித்த பத்திரத்தை வாசிக்க, “அதற்கு இப்போது அவசியமில்லை…” என்று ரவி கூற…. சித்தப்பா ஏமாற்றத்திற்குள்ளாகிறார். ரவி சாகக் கிடந்தபோது அவனை நன்கு கவனித்துக்கொண்ட சித்தி, இப்போது அவனுக்கு வேலைகள் செய்ய… கஷாயம் போட்டுத் தர கஷ்டமாக இருக்கிறது என்று அலுத்துக் கொள்கிறாள். முறைப்பெண் துர்கா, இனிமேல் ரவி தனது மனைவியுடன் வாழச் சென்று விடுவான் என்று அவனை ஒதுக்குகிறாள்.

வெறுத்துப் போய் ரவி தனது பத்திரிகை அலுவலகத்திற்குச் செல்ல… அவனுடைய அறையை வேறொருவருக்கு ஒதுக்கி விட்டதாகக் கூறுகின்றனர். அந்த அறைக்குச் சென்று அவன் டேபிள் ட்ராயரைப் பார்க்க… அதில் அவன் இறந்தால் பத்திரிகையில் வெளியிடவேண்டிய ‘அஞ்சலிக் குறிப்பை’ ஏற்கனவே எழுதி வைத்திருக்கிறார்கள்.

இதனிடையே ராஜேந்திரன் மாலினியிடம், ரவி-மாலினி காதலுக்கு முன்பிருந்தே தான் மாலினியைக் காதலிப்பதாகக் கூற… ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் இருவரும் பாலுறவில் ஈடுபடுகின்றனர்.

அன்றிரவு ரவி மாலினியை பாலுறவுக்காக அணுக… குற்ற உணர்வில் இருக்கும் மாலினி அழுகையுடன், “ஒரே நாளில் இரண்டு பேருடன் என்னால் படுக்க முடியாது” என்று கூற… மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகும் ரவி ஓடும் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொள்கிறார்.

திரைப்படம் முடிந்து நெடுநேரமாக எனக்கு ஒரு வேலையும் ஓடவில்லை. உறவுகளும், நட்புகளும் புனிதமானது என்ற நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மை இத்திரைப்படம் நடு நெஞ்சில் உதைத்து, அவை அனைத்தும் மனிதர்களின் தற்காலிக சந்தோஷத்திற்கான ஒரு தற்காலிக ஏற்பாடுதான் என்று ஆணி அடித்தாற் போல் கூறுகிறது.

ரவிசங்கராய் நடித்திருக்கும் மம்முட்டி வழக்கம் போல தனது அபாரமான நடிப்பால் நம்மைக் கட்டிப்போடுகிறார். ஒரு நோயாளியாக அவரது துயரத்தையும், குணமான பிறகு புதிய நம்பிக்கையுடன் திரும்பி வரும் மகிழ்ச்சியையும், திரும்பி வந்த பிறகு ஏற்படும் நிகழ்வுகளால் ஏற்படும் அதிர்ச்சியையும் அவரின் அற்புதமான முக பாவங்களால் நமக்கு சுலபமாக கடத்திவிடுகிறார். இப்படத்தில் கவுதமினியின் நடிப்பை பார்க்கும்போது தமிழ் சினிமா எவ்வளவு நடிகைகளின் நடிப்புத் திறனை வீணாக்கியுள்ளது (விதிவிலக்கு: குருதிப்புனல், தேவர் மகன்) என்பதை அறிந்து கொள்ளலாம். குறிப்பாக ராஜேந்திரனுடனான அவரது பந்தம், மற்றும் ரவிசங்கர் குணமாகி வந்தவுடன் ஏற்படும் குழப்பமான மனநிலையை அற்புதமாக திரையில் சித்தரித்துள்ளார். மம்முட்டியின் முறைப்பெண் துர்காவாக வரும் சாந்தி கிருஷ்ணா, மரணப் படுக்கையில் இருக்கும் மம்முட்டியை சந்தோஷமாகப் பார்த்துக்கொள்வதிலிருந்து, பின்னர் குணமாகி வந்தவுடன் அவன் தன்னை விட்டு விலகிச் சென்றுவிடுவான் என்ற அறிந்ததும் சட்டென்று ஏற்படும் மன விலக்கத்தையும் தனது நடிப்பின் மூலம் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே தனது ‘ஆள்கூட்டத்தில் தனியே’ மற்றும் ‘பந்தனம்’ ஆகிய படங்களில் மரணம் குறித்து அபாரமாக விவரித்திருக்கும் அற்புதமான கதை சொல்லியான எம்டிவி இக்கதையை எவ்வித குழப்பமுமின்றி, போலியான பாசாங்கின்றி ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், குறிப்பிட்ட மனிதர்கள் எப்படி எதிர்வினையாற்றுவார்கள் என்பதை ‘பந்தம்… பாசம்… ஒழுக்கம்… நட்பு…’ என்று புனிதப்படுத்தாமல் கறாராக சுடடிக்காட்டி வாழ்க்கையில் நாம் எதையும் எதிர்கொள்ளும் மனநிலைக்கு நம்மை தயாராக்குகிறார்.

1980 மற்றும் 90-களில் மலையாளத்தில் பத்மராஜன், பரதன், மோகன், சிபி மலயில்… என்று படையாக கிளம்பிய மிடில் சினிமா இயக்குனர்களின் வரிசையில் இடம் பிடித்த, சமீபத்தில் மறைந்த இயக்குநர் ஹரிகுமாரின் சிறந்த படைப்பாக இன்று வரையிலும் சுக்ருதமே திகழ்கிறது.

நானே பல வீடுகளில் பார்த்திருக்கிறேன். நன்றாக இருக்கும் வரை வேலைக்குச் செல்லும் தனது குழந்தைகளை ஆயா போன்று பார்த்துக்கொண்ட தனது வயதான தாய் படுத்த படுக்கையானவுடன், அவரை அலட்சியமாக பராமரித்த மகளைப் பார்த்திருக்கிறேன். தனது பிள்ளைகளை பார்த்துக்கொள்வதற்காக தனது வீட்டில் வைத்திருந்த அம்மாவிற்கு உடல்நலமின்றிப் போனவுடன், தம்பி வீட்டிற்கு வந்து விட்டுவிட்டுச் சென்ற அண்ணனை பார்த்திருக்கிறேன். இங்கு பெரும்பாலும் ஒரு பாசப் போர்வைக்குள் செயற்கையாக வாழும் உறவுகள், ஒரு பெரும் நெருக்கடி வந்தவுடன் சட்டென்று கலைந்து போகிறது (விதிவிலக்குகளை கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டாம்).

தீவிரமாக யோசித்துப் பார்த்தால் உறவுகள் ஒரு மாயைதான். அதற்காக உறவுகள் கூடாதா? இல்லை.. அதுவும் இல்லையென்றால் நாம் தனித்து வாழ்ந்து பைத்தியக்காரர்களாவோம். அல்லது குடிகாரர்களாவோம். அல்லது தற்கொலை செய்துகொள்வோம். ஆனால், ஒரு விஷயத்தை எப்போதும் மனத்தில் வைத்திருக்கவேண்டும். என்னதான் நெருக்கம் என்றாலும் கடைசியில் நாம் ஒவ்வொருவரும் தனித் தனி மனிதர்கள்தான். அவ்வளவு அன்பையும், பந்தத்தையும் மீறி, கடைசியில் ‘தான்’ என்ற சுயலநலம்தான் கடைசியில் வெல்லும். இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு அதனுடன் வாழப் பழகிக்கொள்ளவேண்டும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும்போது ரவிசங்கர் போல உடைந்துபோகாமல், அதை பக்குவமாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற மனச்சித்திரத்தை உருவாக்குவதே ‘சுக்ருதம்’ திரைப்படத்தின் வெற்றி ஆகும்.

grsnath71@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button