இரு சிறுகதைகளும் ஒரு காவியமும் – ஆர்.காளிப்ரஸாத்
கட்டுரை | வாசகசாலை

இளம் வயதில் வாசித்த தன்னம்பிக்கை சிறுகதை ஒன்று இவ்வாறு இருக்கும். இரு தவளைகள் தவறுதலாக ஒரு தயிர்ப்பானைக்குள் விழுந்து விடுகின்றன. அவற்றில் ஒன்று அந்த அச்சத்தில் மூழ்கி உயிரை விடுகிறது. மற்றது அதில் இருந்து விடுபட வேண்டும் என விடாது காலை உதைக்கிறது. அதனால் தயிரில் இருந்து வெண்ணைய் உருவாகி உருளையாகத் திரண்டு வருகிறது. அதன் மீது அமர்ந்து தவளை தாண்டி வெளியே குதிக்கிறது என்கிற கதை.

இன்னொரு கதை உண்டு. புத்தரின் வாழ்க்கையில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுவது. ஒரு ஓடையில் நீரள்ளச் சென்ற ஆனந்தா தயங்கி நிற்கிறார். பல்வேறு வண்டிகள் கடந்து சென்றதால் அந்த ஓடை நீர் கலங்கி விட்டிருக்கிறது. தெளிந்த நீரை அள்ள அந்த நீரை விலவுகிறார். ஆனால், நீர் தெளிவாகவில்லை. புத்தர் கூறுகிறார், ‘ஆனந்தா, இப்போது நீ தெளிவாக்குவதாக எண்ணி நீரை மேலும் மேலும் கலக்கிக் கொண்டிருக்கிறாய். நீ ஓன்றும் செய்யாமல் சும்மாவே இரு. சேறு தானாக கீழறங்கி அமைந்துவிடும். நீர் தானாகவே தெளிவாகிவிடும். அப்போது அள்ளிக்கொள்’ என்கிறார்.
இரு வேறு கதைகள். ஒன்று செயலைக் குறிப்பது மற்றது ஒன்றும் செய்யாமல் கவனித்து இரு என்பதைக் குறிப்பது. வாசிப்பவருக்கு இரண்டுமே சரியானதாகத் தோன்றுகின்றன. ஏதேனும் ஒன்றைப் பற்றிக்கொண்டு மட்டும் மொத்த வாழ்க்கையையும் கடத்திவிட இயலும். ஆனால், அங்கு ‘இடம்’ ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. நாம் நம்மை எங்கே வைத்துக் கொள்கிறோம் என்கிற கவனம் தேவை. ஒன்றில் கதாபாத்திரம் உள்ளே விழுந்து இருக்கிறது. மற்றதில் அது வெளியே நிற்கிறது.
எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதைகளில் நான் வாசித்த முதல் சிறுகதை அவரது ‘பத்மவியூகம்’. குருட்ஷேத்திர யுத்தத்தில் அபிமன்யுவைக் கொல்ல துரோணர் பத்மவியூகம் அமைக்கிறார். அபிமன்யு, தான் கருவில் இருக்கும் போதே, பத்மவியூகத்துக்குள் நுழையும் வழியை, கிருஷ்ணன் சுபத்ரையிடம் கூறும் போது அறிந்தவன். ஆனால், அவனுக்கு அதிலிருந்து வெளியேறும் வழி தெரியாது. குருட்ஷேத்திரத்தில் அந்த வியூகத்தில் சிக்கிக் கொள்ளும் இளையவனான அபிமன்யு, யுத்தத்தில் துரோணர், துரியோதணன், கர்ணன் உள்ளிட்ட வீரர்களால் சூழப்பட்டு கொடூரமாகக் கொல்லப்படுகிறான். ஜெயத்ரதன் தந்தி்ரமாக பாண்டவர்களை வியூகத்திற்குள் வர விடாமல் திசைதிருப்பித் தடுக்கிறான். அதற்குப் பழி தீர்க்கும் விதமாக அர்ஜுனன் ஜெயத்ரதனைக் கொல்வதாக சபதம் எடுக்கிறான். யாருடைய கரங்களால் ஜெயத்ரதனின் தலை கீழே விழுகிறதோ அவன் தலை வெடித்துச் சிதறும் என்பது ஜெயத்ரதனின் தந்தை பெற்றிருக்கும் வரம். கிருஷ்ணனின் ஆலோசனைப்படி ஜெயத்ரதனின் தலையைக் கொய்த அர்ஜுனன் அதை அவனது தந்தையின் கரங்களிலேயே விழ வைக்கிறான். அவ்வாறு அபிமன்யுவின் மரணத்துக்கான பழி ஈடுசெய்யப்படுகிறது. அபிமன்யுவும் அர்ஜுனனும் வீரர்களாக பாடப்படுகிறார்கள்.
பத்மவியூகம் கதை இங்கிருந்து துவங்குகிறது. பத்மவியூகத்துக்கு உள்ளே நுழையத் தெரிந்த அபிமன்யுவிற்கு வெளியே வரும் வழி் தெரியாததால்தான் மாட்டிக்கொண்டான். ஆகவே, தற்போது போரில் இறந்து ஃபுவர்லோகத்தில் இருக்கும் அவனுக்கு பத்மவியூகத்தில் இருந்து வெளியே வரும் வழியைச் சொல்லி அடுத்த பிறவியிலாவது அவனைக் காக்க வேண்டும் என்கிற சுபத்ரையின் தவிப்புக்கு ரிஷி ஒருவர் உதவுகிறார். இந்தப் பிறவியில் அவனால் கொல்லப்பட்ட பிருஹத்பாலன் அடுத்த பிறவியில் அவனது இரட்டையாக கூடவே பிறக்கப்போவதை அறிந்த சுபத்ரை, தான் சொல்ல வந்ததை மறக்கிறாள். வேறோன்றைக் கூறுகிறாள். பத்மவியூகம் பற்றி அவள் சொல்வதற்குள் காலம் கடக்கிறது. ரிஷி தன் போக்கில் போகிறார். சிறுகதையானது விதியின் போக்கை யாரால் மாற்றவியலும் என்கிற பொருளுடன் நிறைவடைகிறது. அங்கிருந்து வாசகருக்குள் வளரத் துவங்குகிறது.
அபிமன்யு அடுத்த பிறவியில் வேறொரு பெயரில் வேறொரு நிலத்தில் வளர்வானாயிருக்கும். அவனது ஒவ்வொரு பிறவியிலும் அவன் கூடவே பிறந்து வாழ்ந்து கூடவே இறக்கப்போகும் பிருஹத்பாலனும் பிறந்து இறந்து விடுவான். இப்போது எதிரியாக இருந்தவர்கள் அடுத்த பிறவியில் இரட்டையராக இருக்கப் போகிறார்கள். அதற்கு அடுத்த பிறவியில் நண்பர்களாகவோ வாழ்க்கைத் துணைவர்களாகவோ கூட இருந்துவிட்டுப் போகலாம். நம்மால் கட்டுப்படுத்த இயலாத ஒன்று ஊழ்/ விதி என்ற பெயர் கொண்ட கரங்களால் அவனை இயக்குகிறது. ஆனால், கிருஷ்ணன் சுபத்திரையிடம் கேட்கும் ஒரு கேள்வி அந்தக் கதையின் மையத்தை அபிமன்யுவிடமிருந்து மாற்றி வாசகரை நோக்கித் திரும்பிவிடுகிறது. “வெளியேறும் வழி எவருக்கும் தெரியவில்லை சுபத்திரை. எனக்கும் தெரியவில்லை… யாருக்குத் தெரியும் அது? உனக்குத் தெரியுமா? வழி தெரிந்தா நீ உள்ளே நுழைந்தாய்?” என்று கிருஷ்ணன் சுபத்ரையிடம் கேட்கும் பொழுது சுபத்ரை உறைந்து நிற்கிறாள். வாசகரையும் அது தொற்றிக் கொள்கிறது. அதுவரை அபிமன்யுவின் கதையாக இருந்த்து பின் ஒவ்வொருவரின் கதையாக ஆகிவிடுகிறது. ஆனால், அது ஒரு கேள்வியை மட்டும் முன் வைக்கிறது. அதற்கான வழி என்ன என்பதை கிருஷ்ணனும் அறிந்தானில்லை.
பத்மவியூகம் கதை வெளியாகி கால் நூற்றாண்டு கடந்த பிறகு ஜெயமோகன் மற்றொரு கதை எழுதுகிறார். ‘வலம் இடம்’ என்னும் சிறுகதை. குமரேசனிடம் ஒரு வளமான எருமை இருக்கிறது. வளமான என்றால் நன்றாக உண்டு உழைத்து வரும் ஆறுமாத சினை எருமை ஒன்று. சில நாட்களில் அவன் அதன் கூடவே நிழலாக இன்னொரு எருமையும் இருப்பதை உணர்கிறான். கண்ணுக்குத் தெரியாத அந்த மற்றொரு எருமையை அவன் ஓசைகளாலும் உணர்வினாலும் அரை விழிப்பு நிலையிலும் மட்டுமே உணர்கிறான். ஒரு கட்டத்தில் அவன் இரண்டு எருமைகளையும் சேர்த்தே வளர்க்கத் துவங்குகிறான். குளிப்பாட்டுவதும், தீனி போடுவதும், வருடி விடுவதும், புகை போடுவதும் என அனைத்தையும் இரண்டு எருமைகளுக்கும் செய்கிறான். இரண்டுமே அவனை அனுசரித்து நிற்கின்றன என்பதை உணர்கிறான். ஒரு நாளில் அவன் ஒரு கனவு காண்கிறான். தனது தொழுவத்திலிருந்த எருமையை அவனது தந்தை தனது இளம்வயது தோற்றத்தில் வந்து எடுத்துச் செல்கிறார். அதற்கு மறுநாளில் அந்த எருமை இறக்கிறது. எருமை மறைந்த பிறகு பிரமை பிடித்தவன் போலவே திரியும் குமரேசன் மூக்கணாங் கயிறுகளையும் கழுத்துக் கயிறுகளையும் செய்துகொண்டே இருக்கிறான். உடல் தளர்ந்தாலும் மூக்குக்கயிறு இழுக்கும்போது விசை மட்டும் குறைவதில்லை. முடிச்சு முடிச்சாக அவன் விரல்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவன் தனியாக அறையில் இருக்கும்போதும் வெறும்கைகளால் முடிச்சுகளை போட்டுக்கொண்டே இருக்கிறான். தூக்கத்தில் கூட அதையே செய்கிறான். அப்போது அவனுக்கு ஒரு கனவு வருகிறது. கனவில் வந்த ஒரு கிழவர் இரு எருமை கன்றுக்குட்டிகளை அவனுக்கு அளிக்கிறார். வலமும் இடமுமாக இரு கன்றுகள். அதில் ஒன்றை அவன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறார். அவன் மாட்டு வியாபாரத்திற்கு போர்த்தியிருந்த துண்டுக்குள் சரியான விரலைத் தொடுகிறான். விழித்தெழுபவன் மகிழ்ச்சியுடன் இருக்கிறான். மனைவியுடன் இல்லற இன்பம் துய்க்கிறான். அப்போது அவனது ஊர்த்தோழர்கள் அவனுக்கு ஒரு எருமைக் கன்றை அளித்துச் செல்கிறார்கள்.
இது ஒரு சூட்சமமான கதையாக உள்ளது. தன்னுடைய எருமையுடன் ஊழ் விதி என்பதும் கூடவே இருப்பதைக் காணும் குமரேசன் அடைகிற திகைப்பும் அதை அவன் என்னவென்று தெரியாமல் ஏற்றுக் கொள்வதும் முதற்பாதியில் வருகிறது. அந்த அறிதல் என்பது எருமை இறக்கும் போது அவனுக்கு சித்தம் கலங்க வைக்கும் அதிர்ச்சியாக ஆகிவிடுகிறது. அதை இன்னொரு எருமையாக நினைத்து வந்தவன் திகைக்கிறான். அந்த ஊழ் என்பது அருளும் தெய்வம் மட்டுமல்ல; அழிக்கும் தெய்வமும் கூட அதுதான் என்பதை அவன் உணரும் போது சித்தம் தவறுகிறான். அந்த கண்ணுக்குத் தெரியாத ஊழ் மரணம் என்றோ, இழப்பு என்றோ பொருளாகும் போது கண்ணுக்குத் தெரியும் எருமை வாழ்வு என்றும் வளம் என்றும் அதற்கான எதிர்வினையாகிவிடுகிறது.
ஒவ்வொருவரின் வாழ்க்கையும் பத்மவியூகம்தான். ‘உனக்கு வழி் தெரிந்தா நீ உள்ளே நுழைந்தாய்?’ என்று கிருஷ்ணன் கேட்பது ஒவ்வொருவருக்கான கேள்வியாகவும் கொள்ளலாம். தனது குலதெய்வம் கனவில் வந்து எருமையை அளித்த பின் அவன் நெடுநாள் கழித்து மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடுகிறான். இனிதான் அவன் வம்சமும் தழைக்கப் போதை குறிப்பாலுணர்த்துகிறது கதை. இனி அவன் கனவில் வந்த சாஸ்தாவிடம் என்ன கேட்டிருக்கக் கூடும்? எந்த விரலைத் தொட்டிருப்பான்? வாழ்க்கைக்காக ஊழா அல்லது ஊழிற்காக வாழ்க்கையா என்ற கேள்வியை ஒட்டிப் பார்த்தி்ருந்திருக்கலாம். அது அந்த இயல்பான சுழற்சியிலேயே இருக்கட்டும் என வேண்டியிருக்கலாம். பத்மவியூகம் அளித்த ஒரு திகைப்பு இங்கு ஏற்பாக மாறி நிற்கிறது.
இந்தக் கதை தவிர, ஜெயமோகன் தனது பத்மவியூகம் கதையையே இன்னொரு வடிவத்தில் எழுதுகிறார். அது வெண்முரசு வரிசையின் நீர்ச்சுடர் நாவலில் ஒரு அத்தியாயமாக வருகிறது. அது உள்ளடக்கத்தில் ஒன்று போலவே இருந்தாலும் தனது சித்தரிப்பில் மூலச் சிறுகதையிலிருந்து சில வேறுபாடுகளைக் கொண்டிருக்கிறது. பத்மவியூகத்தில் வரும் கிருஷ்ணன் என்ன செய்வது எனத் தெரியவில்லை எனக் கலங்கி நிற்பவன். தவிப்பும் கொண்டவன். குற்றம் சாட்டப்படும்போது பதில் பேசாமல் தயங்கி நிற்பவன். வெளியேறும் வழி எவருக்கும் தெரியவில்லை சுபத்திரை. எனக்கும் தெரியவில்லை என அறற்றுபவன். ஆனால், வெண்முரசில் வரும் (இளைய யாதவன் என்று குறிப்பிடப்படும்) கிருஷ்ணன், அனைத்தும் அறிந்த புன்னகை கொண்டவன். பத்மவியூகத்தில் வியாசர் சொல்லி ரிஷி வருவதாக சித்தரிக்கப்படுகறது. நீர்ச்சுடரில் அவரை வரச்சொல்லி அனுப்புவதே கிருஷ்ணனாக இருக்கிறது. அவன் என்ன நடக்கும் என அறிந்தே இருக்கிறான். சுபத்திரை இங்கும் அடுத்த பிறவியில் அவனுக்கு என்ன நேரிடும் என அரற்றுகிறாள். இளைய யாதவன் புன்னகைத்தபடி ‘நான் அறியேன், சுபத்திரை. மெய்யுரைக்கவேண்டும் என்றால் நானும் இச்சூழ்கையில் சிக்கியிருப்பவனே’ என்கிறான்.
சிறுகதை ஒரு துண்டை மட்டும் தனித்துக் காட்டுகிறது. பத்மவியூகத்தில் வாசகர்கள் சுபத்ரையின் மனவோட்டத்தோடு தன்னை பொருத்திக் கொள்கிறார்கள். அங்கு அர்ஜூனன் எதிர்பாத்திரமாக ஆகிறான். வெண்முரசில் அதை வாசிக்கும் போது அத்தகைய கறுப்பு வெள்ளை தோற்றம் இல்லை. வாசகர் தன்னை சுபத்ரையோடு பொருத்திக் கொள்வதை விட இளைய யாதவனோடு பொருத்திக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அது குமரேசன் முதலில் கொள்ளும் அறிதல் என்ற இடத்தில் இருந்தா அல்லது அவன் இறுதியாக கொள்ளும் உணர்தல் என்ற இடத்திலிருந்தா என்பதும் தனிப்பட்ட வாசிப்புக்கு உரியது. எதையும் தயிர்ப்பானைக்குள் விழுந்து தத்தளித்துதான் அறிய வேண்டும் என்பதில்லை. அதைக் காவியகர்த்தாவிற்கு அளித்துவிட்டு சற்று கரையோரம் நின்றும் அறியலாம்.
ஜெயமோகனின் பத்மவியூகம் சிறுகதை அளிக்கும் திகைப்பிலிருந்து வலம் இடம் அளிக்கும் புன்முறுவலுக்கு வர கால்நூற்றாண்டு காலம் ஆகியிருக்கிறது. சிறுகதையின் தூரம் அதுவாகத்தான் இருக்கிறது. ஆனால், வெண்முரசின் பத்ம வியூகம் அத்தியாயம் உடனே இட்டு வந்து விடுகிறது. அது அதிகம் காலம் எடுத்துக் கொண்டது என்று வருந்தவோ இங்கு விரைவில் வந்தது என மகிழவோ ஏதும் இல்லை. காலமும் தூரமும் நமது புரிதலுக்கு மட்டும்தானே!
இணைப்பு:-
1. பத்மவியூகம் சிறுகதை:-
https://www.jeyamohan.in/43970/
2. வலம் இடம் சிறுகதை:-
https://www.jeyamohan.in/142642/
3. வெண்முரசு நீர்ச்சுடர் அத்தியாயம்