
காதல் யாதெனில்
மழையில் நனைந்ததை
சிலாகித்துச் சொன்னாய்.
உன்னில் தொப்பை, தொப்பையாக நனைந்த மழை
சளிப்பிடித்துக் கிடந்ததை யாரிடம் போய் சொல்லியிருக்கும்?
வெயிலடித்தபடியே மழை பெய்கிறது
எதை நனைத்து,
எதைக் காய வைப்பதற்காகவாயிருக்கும்?
உழவன் மழையைப் பார்பதைப் போல்தான்
உனைப் பார்க்கிறேன் இப்போதும்
விதைநெல் போல் சேமித்துள்ளேன்
நீ தூவிச்சென்ற அச்சொற்களை.
அறுவடை காலத்தில் வந்தமரும் பறவையின்
கூட்டுக் குஞ்சு நான்.
தினைப்புனம் காக்கும் பரண் மீது ஒலிக்கும் சப்தம் நீ.
*
பத்திரப்படுத்துதல்
நீண்ட தொரட்டியில் கொடுக்காப்புளி
பிடுங்கிக்கொண்டிருந்தேன்…
சிறு கிளையின் இடுக்கில் தொங்கிக்கொண்டிருந்த நிலவை
தவறுதலாகப் பிடுங்கிவிட்டேன்
என்ன செய்வதென்று தெரியவில்லை
உன்னிடம் காட்ட பத்திரமாக வைத்துள்ளேன்.
*
ஆற்றுப்படுத்துதல்
அந்தக் கோபத்துக்கு
தேநீரின் சூட்டைக் கையளித்துள்ளாய்.
நிதானமாக வடிகட்டி
குப்பையில் கொட்டி விடுகிறாய் அந்தத் தூளை.
ஆவி பறக்கும் அது
மெல்ல,மெல்ல ஊதியே
தனக்குத் தானே ஊட்டப்படுகிறது.
சர்க்கரையின் அளவு மாறுபடினும்
உதடுகள் சூட்டின் பொருட்டே
ருசியை உணர்கின்றன.
டீ குடியென
சில்வர் டம்ளர் நீட்டினாய்
கைரேகை வழி தேகத்தில் பரவியது பதற்றம்.
சூடா இருக்கா…
கொண்டா ஆற்றித் தருகிறேன் என்றாய்
அத்தனையையும் ஆற்றிவிட
உன்னால் மட்டும் எப்படி முடிகிறது?
*
மன்னிப்பு
மன்னிப்பு கேட்க நெருங்கும்போதெல்லாம்
நெருங்கவே விடாமல் முகம் சுழித்துச் செல்கிறாய்
ஒரு சொல்லை கடைசியாகச் சொல்ல
வாய்ப்பிருப்பின்
நடுக்கத்துடன் உதடுகள் அச்சொல்லையே செபிக்கும்.
கடைசியாக எப்போது கண்ணீர் சிந்தினேன்…
கடைசியாக எப்போது சிரித்தேன்…
கடைசியாக எப்போது காத்திருந்தேன்…
எதுவுமே சரியாக நினைவில்லை.
உயிர் பிரிந்த பின்னும்
கண்கள் திறந்திருக்குமெனில்
உன் முகத்தைத் தவிர
வேறு எதைப் பார்ப்பதற்கு…
உன்னிடம் சொல்வதற்கு
ஒன்று உள்ளது.
கடைசியாக இன்னொருமுறையும்
என்னை நீ
மன்னித்து தொலைத்திருக்கலாமே.
*
நன்றி
காய்த்திருந்த செடியைக் காட்டி
இது என்னப்பா என்றாள் மகள்.
விதை என்றேன்.
விதையிலிருந்துதானே செடி முளைக்கும்
செடியில் விதை மொளச்சிருக்கு என்றாள்.
பதில் தெரியவில்லை
சிரித்து தப்பித்துக்கோண்டேன்.
இதுதான் நன்றிக் கடனோ..?
*
எத்தனையாவது முறையாகத் தோற்றேன் என்பது
சரியாக நினைவில்லை – ஆனால் ஒவ்வொரு முறையும்
யாரையாவது ஒருவரை
ஜெயிக்க வைத்துக்கொண்டு தானிருக்கிறேன்.
*