
குறியீட்டுப் பாதை
குறியீட்டுப் பாதையில்
நடக்கிறபோது
வலதுபக்கம்
வேண்டாமெனக் கையசைத்து
அலறும் மழலையை வாய்பொத்தி
உள்ளே தூக்கிச் செல்கிறார்
வயது முதிர்ந்தவர்
இடதுபுறம்
ஒரு நொடி தாமதித்து
நுணா மரத்தின்
ஓரிலையை ஒடித்து நிற்கிறேன்
என் யோசனையெல்லாம்
வலதா இடதா என்றெல்லாமில்லை
வலதில் குறியீடு காட்டினால்
இடதில் அதன் காதில்
ஓரிலை வைக்கப் பார்க்கிறேன்
வலதும் இடதும் வேண்டும்
நிற்பதும் தாமதிப்பதும் என் வேலை
எனக்கு முன்னே போகிறவரும்
என் வேலையைத் திரும்பித்தான்
பார்க்கிறார்.
***
இழப்பென்பது
வயதிற்கும் வாழ்க்கைக்குமிடையே
கோடிட்டுவிட்ட இழப்பென்பது
ஒன்றுமில்லை
ஒன்றுமே ஒன்றுமில்லை
புலனாகாத வெளியில்
எவ்வித சொல்லின் உதிர்வற்றும்
சற்று முன்
வேண்டியவர்கள்
நடந்துசென்ற பாதையைத் தேடி வந்தவள்
அப்படியே இருந்த இடம் தெரியாமல்
காணாமல் போனேன்
உடல் உயிற்றுவிட்ட ஓர் இடத்திலிருந்து
மீண்டும் வாழ்ந்து பார்க்கிறது
அதற்கென்ன தெரியும் பாவம்
உடல் உயிரிருப்பதாய்
நம்பிக்கொண்டிருக்கும் ஒன்று.
***
ஒத்திகை
இரவு எப்போது வருமென்று
தரிசிக்கக் காத்திருந்தேன்
பகலிலிருந்து விலகிச் செல்லும் ஆயத்தவாகில்
புழுதியில் புரண்டு கிடக்கும்
சிவந்த இலைகளையெல்லாம்
வைத்து ஒத்திகை பார்த்தேன்.
***
கல் மயில்
ஓர் அதிகாலையில்
யாரும் காணாதவொரு யாகச் சிறுநெருப்பில்
புகையும் புகையில்
எந்த இழுப்புமில்லாமல்
காலாறும் வெளியில் நடந்து செல்கிறேன்
என் பாதங்கள் போகிற வழியில்
எறும்புப் புற்றுகள் வாய் பிளந்திருக்கின்றன
ஒன்றிலிருந்தும் எறும்புகள்
பிளந்துகொண்டு வந்து கொத்தப் போவதில்லையென்கிற
சிறு நம்பிக்கையில்
வெகுதூரத்தில் மலர்ந்து
ஒடித்தலுக்காய் காத்திருக்கும்
செம்பருத்தி மலரொன்றைக் கொண்டுவந்து
மயிலின் கழுத்தில் வைத்துவிடுகிறேன்.